Close

The Hon’ble Food and Civil Supply Minister – Tamil Pudhalvan Scheme-Inauguration

Publish Date : 12/08/2024
.

செ.வெ.எண்:-21/2024

நாள்:09.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வங்கி பற்று அட்டையினை வழங்கி, அரசின் உதவித்தொகையினை மாணவர்கள் தங்களுடைய கல்வி வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தி, சிறந்த முறையில் கல்வி பயில வேண்டும், என தெரிவித்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், கள்ளிமந்தையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று(09.08.2024) தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வங்கி பற்று அட்டையினை வழங்கினார்.

இவ்விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மாணவ, மாணவிகளின் கல்வி முன்னேற்றத்திற்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு கல்வித்துறைக்கு ரூ.44,044 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கல்வித்துறையும், சுகாதாரத்துறையும் 2 கண்கள் என்று கூறி கல்வித்துறைக்கு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 5615 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும் வகையில் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் நடப்பு கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கோவையில் இன்று தொடங்கி வைத்துள்ளார்கள். தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டதில் 5112 பயன்பெறவுள்ளனர். ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 520 மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இன்னும் ஏராளமான மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. தகுதியுள்ளவர்கள் விடுபட்டிருந்தால் அவர்களையும் இத்திட்டத்தில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உதவித்தொகையினை மாணவர்கள் தங்களுடைய கல்வி வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தி, சிறந்த முறையில் கல்வி பயில வேண்டும்.

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நடப்பு கல்வியாண்டு முதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 20.70 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கனடா நாட்டில் செயல்படுத்தியுள்ளனர். அந்த வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தியாவிற்கு மட்டுமின்றி உலகத்திற்கே வழிகாட்டியாக செயல்பட்டு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மாணவ, மாணவிகள் படிக்கும் காலத்திலேயே தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர் தமிழகத்தில் 30 கல்லுாரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 6 கல்லுாரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 2 கல்லுாரிகள், ஒரு தொழிற்பயிற்சி நிலையம், ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் 2 கல்லுாரிகள், பழனியில் ஒரு சித்தா கல்லுாரி, ஆகியவை தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. நத்தம் சட்டமன்ற தொகுதியில் விரைவியல் அரசு கல்லுாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒட்டன்சத்திரம், ஆத்துாரில் கல்லுாரிகள் தொடங்கப்பட்டு, அந்த கல்லுாரிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஒட்டன்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இந்த ஆண்டு முதல் புதியதாக பி.எஸ்.சி.( கம்ப்யூட்டர் அறிவியல்), பி.சி,ஏ., ஆகிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், காளாஞ்சிபட்டியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி மையம் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மாணவ, மாணவிகள் பயிற்சி பெறுவதற்கு வசதியாக ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டிலான புத்தகங்கள் மற்றும் கணினி கடந்த வாரம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-4 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு 09.06.2024 அன்று நடைபெற்றது. அந்த தேர்வுக்கு இங்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பில் 150-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-2 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கான பயிற்சி நடைபெற்று வருகிறது.

இளைஞர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் வகையில் தொப்பம்பட்டியில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 22 விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படவுள்ளன. அதில் ஆத்துார் மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் தலா ஒரு விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சிகாலத்தில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் அரசு பேருந்துகளில் இலவச பயணம் திட்டத்தை செயல்படுத்தினார். அந்த வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இந்த திட்டங்களை மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திரு. கா.பொன்ராஜ், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் திரு. பி.சி.தங்கம், கள்ளிமந்தையம் ஊராட்சி மன்ற தலைவர், திரு. மு.கணேசன், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.