Close

C.M. Trophy District level – Online Registration

Publish Date : 28/08/2024

செ.வெ.எண்:-62/2024

நாள்:-23.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வாயிலாக 25.08.2024-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்-2024, மாநிலம் முழுவதும் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மாவட்டம், மண்டல அளவில் மற்றும் மாநில அளவில் நடத்தப்படவுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய ஐந்து பிரிவுகளில் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில், மாவட்ட அளவில் 27 விளையாட்டுக்கள், 53 வகைகளில் மாவட்ட, மண்டலம் மற்றும் மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

போட்டியில் கலந்துகொள்ள வயது வரம்பு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 12 முதல் 19 வயது வரையிலும், கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு 17 முதல் 25 வயது வரையிலும், மாறறுத்திறனாளிகள் வயது வரம்பின்றி அனைத்து வயது பிரிவினருக்கும், பொதுப்பிரிவினர் 15 முதல் 35 வயது வரையிலும், அரசு ஊழியர்கள் அந்தந்த மாவட்டத்தில் பணிபுரிபவர்கள் கலந்து கொள்ளலாம்.

விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் CM Trophy 2024 – Online Registration- Player Login – இல் 25.08.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் முன்பதிவு செய்து அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம் செய்திட வேண்டும். இணையதளம் வாயிலாக பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் கலந்து கொள்ள இயலும். நேரடியாக போட்டிகளில் கலந்துகொள்ள இயலாது. போட்டிகள் குறித்த விபரங்கள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பதிவின்போது கோரப்பட்டுள்ள ஆவணங்களுடன் வங்கி புத்தக நகல் கட்டாயம் பதிவேற்றம் செய்திட வேண்டும்.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு (12 முதல் 19 வயது வரை) மாவட்ட அளவில் தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி , கபாடி, சிலம்பம், நீச்சல், மேஜைப்பந்து, கையுந்துப்பந்து, கைப்பந்து, கேரம், செஸ் மற்றும் கோ-கோ ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

கல்லூரி மாணவ, மாணவிகள் (17 முதல் 25 வயது வரை) மாவட்டம் அளவில் தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, கபாடி, சிலம்பம், நீச்சல், மேஜைப்பந்து, கையுந்துப்பந்து, கைப்பந்து, கேரம் மற்றும் செஸ் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகள், தடகளம் மற்றும் நீச்சல் போட்டிகளில் ஒருவர் 2 பிரிவுகளில் கலந்து கொள்ளலாம், குழு விளையாட்டுப் போட்டிகளில் ஒருவர் ஏதேனும் ஒரு விளையாட்டில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது, தங்கள் பள்ளி அல்லது கல்லுாரி உண்மைத்தன்மை சான்று(Bonafide certificate)/ அடையாணஅட்டை(ID card) பதிவேற்றம் செய்திட வேண்டும்.

மாற்றுத்திறனாளர்களுக்கு (ஆண்கள் மற்றும் பெண்கள்) வயது வரம்பு கிடையாது. மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு(கை, கால் ஊனமுற்றோர்) தடகளம்(100 மீ ஓட்டம், குண்டு எறிதல்), இறகுப்பந்து (ஒற்றையர், இரட்டையர்), சக்கர நாற்காலி மேஜைப்பந்து (ஒற்றையர், இரட்டையர்), பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு தடகளம்(100 மீ ஓட்டம், குண்டு எறிதல்) கையுந்துப்பந்து(Adapted Volleyball) (7 நபர்கள்), மனவளர்ச்சி குன்றியோருக்கு தடகளம்(100 மீ ஓட்டம், குண்டு எறிதல்), எறிப்பந்து (7 நபர்கள்), செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு தடகளம்(100 மீ ஓட்டம், குண்டு எறிதல்) கபாடி ( 7 நபர்கள்) என்ற அளவில் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

பொதுப்பிரிவினருக்கு மாவட்ட அளவில் மட்டும் (15 வயது முதல் 35 வயது வரை ஆண்கள் மற்றும் பெண்கள்) தடகளம், கிரிக்கெட், கையுந்துப்பந்து, கால்பந்து, கேரம், சிலம்பம் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. பொதுப்பிரிவினருக்கு மாவட்டம் மற்றும் மாநில அளவு (15 வயது முதல் 35 வயது வரை ஆண்கள் மற்றும் பெண்கள்) இறகுப்பந்து, கபாடி ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

பொதுப்பிரிவில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் ஆதார் சான்றிதழ் பெறப்பட்டுள்ள மாவட்டம் சார்பாக மட்டுமே பங்குபெற இயலும். பொதுப்பிரிவில் பங்கேற்பவர்கள் வெளி மாநிலங்களை சார்ந்த விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டில் குறைந்தது 5 ஆண்டுகள் வசித்தவராக இருப்பின் அதற்கான இருப்பிடச் சான்று பதிவேற்றம் செய்திடல் வேண்டும்..

அரசு ஊழியர்களுக்கு மாவட்ட அளவில் மட்டும்(ஆண்கள் மற்றும் பெண்கள்) தடகளம், செஸ், கபாடி, மற்றும் கையுந்துப்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அரசு ஊழியர்களுக்கு மாவட்டம் மற்றும் மாநில அளவில் (ஆண்கள் மற்றும் பெண்கள்) இறகுப்பந்து, கேரம் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அரசு ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் மாவட்டம் சார்பாக மட்டுமே பங்கு பெற இயலும். அலுவலக அட்டை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

மாவட்டம் மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களும், குழு போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்களும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துக்கொள்வார்கள்.

போட்டிகளில் பெற்றி பெறுபவர்களுக்கு, தனிநபர் பரிசுத்தொகை மாவட்ட, மண்டல அளவில் முதல் பரிசு ரூ.3,000, இரண்டாம் பரிசு ரூ.2,000, மூன்றாம் பரிசு ரூ.1,000 மற்றும் குழு பரிசுத்தொகை(தலா) மாவட்ட, மண்டல அளவில் முதல் பரிசு ரூ.3,000, இரண்டாம் பரிசு ரூ.2,000, மூன்றாம் பரிசு ரூ.1,000 என வழங்கப்படும்

மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகையுடன், முதலமைச்சர் கோப்பை வழங்கப்படும். தனிநபர் போட்டிகளில் முதல் பரிசாக ரூ.1.00 இலட்சம், இரண்டாம் பரிசாக ரூ.75,000, மூன்றாம் பரிசாக ரூ.50,000 வழங்கப்படுகிறது. குழு போட்டிகளில்(தலா) முதல் பரிசாக ரூ.75,000, இரண்டாம் பரிசாக ரூ.50,000, மூன்றாம் பரிசாக ரூ.25,000 என்ற வகையில் பரிசுத்தொகைகள் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு, “மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல்” என்ற முகவரியில் நேரிலோ அல்லது 7401703504 என்ற கைப்பேசி எண் வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.