Close

Vinayagar Chathurthi – Meeting

Publish Date : 06/09/2024
.

செ.வெ.எண்:- 88/2024

நாள்: 31.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

விநாயகர் சதுர்த்தியின்போது, இரசாயனக் கலவையற்ற விநாயகர் சிலைகளை மட்டும் வழிபாட்டிற்கு பயன்படுத்தி, தெரிவு செய்யப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

விநாயகர் சதுர்த்தி விழாவானது வருகின்ற 07.09.2024 அன்று நடைபெறவுள்ளது. விநாயகர் சதுர்த்தியின்போது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பூஜித்த பிறகு நீர்நிலைகளில் கரைக்கப்படும் வழக்கம் உள்ளது. இரசாயன வரணப்பூச்சுகளுடன் கூடிய விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதால் நீர்நிலைகள் மாசுபடுகின்றன.

எனவே, களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித இரசாயனக் கலவையற்றதுமான விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். இத்தகைய சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கலாம். இரசாயன வர்ணம்(பெயிண்ட்) பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது தவிர்க்கப்பட வேண்டும். அரசினால் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல் கோட்டைக்குளம், நிலக்கோட்டை வைகை ஆறு, கண்ணாப்பட்டி ஆறு, வத்தலக்குண்டு, அம்மையநாயக்கனூர், ஒட்டன்சத்திரம் தலைக்குத்து அருவி, பழனி சண்முகாநதி, வேடசந்தூர் அழாகபுரி ஆறு, நத்தம் அம்மன்குளம், கொடைக்கானல் டோபிகானல் ஆகிய இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்.

ஊர்வலம் செல்லும் பாதை, சிலைகள் எண்ணிக்கை, சிலைகளின் உயரம், ஊர்வலம் நடத்த உத்தேசித்துள்ள நேரம், ஊர்வலத்தின் கலந்து கொள்ளும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் ஊர்வலத்தின் கலந்துகொள்ளும் நபர்களின் தோராய எண்ணிக்கை குறித்து எழுத்து மூலமாக பெறவேண்டும். ஊர்வலம் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். ஊர்வலம் குறுகலான வீதிகளில் செல்ல அனுமதி அளிக்கக் கூடாது. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் குறைந்த உயரம் உடைய சிலைகளையே ஊர்வலத்தில் எடுத்துச் செல்ல வேண்டும். திருவிழா நாட்கள் முழுவதும் கருத்துடன் கண்காணிக்க வேண்டும்.

விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த அனுமதி கோரி வரும் விண்ணப்பங்களுடன் சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் ஊர்வலம் நடத்துவோம் என அனுமதி கோருபவர்களிடம் எழுத்து மூலமாக உத்திரவாதம் பெறவேண்டும். சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் மின்விளக்கு வசதி இருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட பாதையில் தான் சிலை ஊர்வலம் எடுத்துச் செல்ல வேண்டும்.

எனவே, பொதுமக்கள் மேலே கூறப்பட்ட இடங்களில் மட்டுமே இரசாயன வர்ணம் பூசப்படாத சிலைகளை கரைக்கவும், விநாயகர் சதுர்த்தியை பாரம்பரிய வழக்கப்படி சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.கோட்டைக்குமார், வட்டாட்சியர்கள், உட்பட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.