Close

The Hon’ble Food and Civil Supply Minister – Animal Husbandry

Publish Date : 11/09/2024
.

செ.வெ.எண்:-24/2024

நாள்:-09.09.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், கால்நடை சிகிச்சை ஊர்திகளின் சேவையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கால்நடை சிகிச்சை ஊர்திகளின் சேவையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒட்டன்சத்திரத்தில் இன்று (09.09.2024) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

தேசிய விலங்கு நோய் கட்டுப்பாடு திட்டத்தின்(NADCP) கீழ், தமிழகம் முழுவதும் 245 கால்நடை சிகிச்சை ஊர்திகள்(Mobile Veterinary Units) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதில் திண்டுக்கல் மண்டலத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு, 8 கால்நடை சிகிச்சை ஊர்திகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு 3 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஊர்தியும் ஒலி, ஒளி படக்காட்சிக்கான உபகரணங்களுடன் தலா ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஊர்தியிலும் ஒரு கால்நடை உதவி மருத்துவர், ஊர்தி ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஆகியோர் பணியில் இருப்பர். இந்த ஊர்தியில் கால்நடை சிகிச்சைக்குத் தேவையான அனைத்து மருந்துகளும், சிறு அறுவை சிகிச்சை மற்றும் கருவூட்டலுக்குத் தேவையான உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மண்டலத்தில் ஊராட்சி ஒன்றியம் வாரியாக கால்நடை அலகுகளை கணக்கிட்டு ஒரு லட்சம் கால்நடை அலகுகளுக்கு ஒரு ஊர்தி வீதம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு கால்நடை சிகிச்சை ஊர்தியானது ஒரு நாளில் குறைந்தபட்சம் 2 தொலைதூர கிராம ஊராட்சிகளுக்கு சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் பகுதிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 3 ஊர்திகளின் சேவை இன்று(09.09.2024) தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த ஊர்தியின் மருத்துவ சேவையினை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்தி. தங்கள் கால்நடைகளை பாதுகாப்புடன் வளர்த்து, தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கால்நடை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.