Close

Exwel – Kakkum Karangal Scheme

Publish Date : 24/09/2024

செ.வெ.எண்:-59/2024

நாள்:-23.09.2024

திண்டுக்கல் மாவட்டம்

முன்னாள் படைவீரர்கள் “முதல்வரின் காக்கும் கரங்கள்“ என்ற புதிய திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 78-வது சுதந்திர தினத்தன்று (15.08.2024) ஆற்றிய சுதந்திர தின உரையின்போது முன்னாள் படைவீரர் நலனுக்காக “முதல்வரின் காக்கும் கரங்கள்“ என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும் எனவும் இவர்களுக்குத் திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும் எனவும், இராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் எனவும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தினை சார்ந்த சுயதொழில் செய்ய விரும்பும் முன்னாள் படைவீரர்கள், படைப்பணியின்போது மரணமடைந்த படைவீரர்களின் கைம்பெண்கள் ஆகியோர் விண்ணப்பத்தினை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும், முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் 15.10.2024-ஆம் தேதிக்குள் சமர்ப்பித்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.