Close

Co optex Diwali Sales

Publish Date : 25/09/2024
.

செ.வெ.எண்:-62/2024

நாள்:25.09.2024

திண்டுக்கல் மாவட்டம்

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.

திண்டுக்கல் விற்பனை நிலையத்தில் நடப்பு ஆண்டு விற்பனை குறியீடு ரூ.117.00 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

திண்டுக்கல் அண்ணா வணிக வளாக மையத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனையை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(25.09.2024) குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முதல் விற்பனையை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு கைத்தறித்துறை கிராமப்புற, வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும், ஏழை, எளிய நெசவாளர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட கைத்தறி நெசவுத் தொழிலில் பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கோ-ஆப்டெக்ஸ், என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், 1935-ஆம் ஆண்டு துவக்கப்பட்டு தொடர்ந்து 89 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது.

தமிழ்நாடு கைத்தறி நிறுவனம் (கோ-ஆப்டெக்ஸ்) கிராமப்புற எழை, எளிய நெசவாளர்கள் முழு நேர உழைப்பாகக் கொண்டு நெசவு செய்யும் பட்டு, பருத்தி சேலைகள், பட்டு, பருத்தி வேட்டிகள், பெட்சீட், ஆயத்த ஆடைகள் மற்றும் இதர கைத்தறி துணி இரகங்களை நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கொள்முதல் செய்து, கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் காஞ்சிபுரம், ஆரணி, சேலம் திருப்புவனம் பட்டு சேலைகள், கோவை மென்பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள் கைத்தறி சுங்குடி சேலைகள், காஞ்சி காட்டன், செட்டிநாடு காட்டன், கோவை கோரா காட்டன். சேலம் காட்டன், பரமக்குடி காட்டன், திண்டுக்கல் காட்டன் மற்றும் அருப்புக்கோட்டை காட்டன் சேலைகள் புதிய வடிவில் ஏராளமான இரகங்கள் தருவிக்கப்பட்டுள்ளன.

மேலும் நவீன யுக ஆடவர்களை கவரும் விதமாக காட்டன் சட்டை இரகங்கள், பருத்தி (Linen/Cotton) சட்டைகள் லுங்கிகள் மற்றும் வேட்டிகள் உள்ளன. மகளிருக்காக சுடிதார் இரகங்கள், நைட்டிகள் மற்றும் குர்தீஸ் கண்ணைக் கவரும் வண்ணங்களில் வாடிக்கையாளர்களுக்காக தருவிக்கப்பட்டுள்ளது.

கைத்தறி ரகங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்புத் தள்ளுடி வழங்கி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில், 30 சதவீத தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை இன்று(25.09.2024) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல், பழனி, திண்டுக்கல் ஆகிய மூன்று விற்பனை நிலையங்களில் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.84.94 இலட்சம் அளவிற்கு நடைபெற்றது. தீபாவளி-2024 விற்பனை குறியீடாக ரூ.117.00 இலட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி ரகங்களை www.cooptex.gov.in என்ற இணைய தளத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். கோ-ஆப்டெக்ஸில் மாதாந்திர சேமிப்பு திட்டமும் நடைமுறையில் உள்ளது.

தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு கைத்தறி இரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கியுள்ளது. மேலும் அரசு, அரசு சார்பு நிறுவனப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கைத்தறி முன்பண திட்டத்தின் மூலமாக கைத்தறித் துணிகளுக்கு 10 மாத தவணை அடிப்படையில் வட்டியில்லா கடன் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு தள்ளுபடியினை அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் நன்கு பயன்படுத்தி இம்மாவட்டத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கைத்தறி விற்பனை குறியீட்டுத் தொகை ரூ.117.00 இலட்சம் என்ற இலக்கை எய்திட கோ-ஆப்டெக்கல் நிறுவனத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்கி ஏழை நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட உதவி செய்ய வேண்டும். கோஆப்டெக்ஸ் வளாக விற்பனை செய்வதற்கு அரசு அலுவலக வளாகத்தில் பணிக்கு இடையூறு இல்லாதவாறு இடம் ஏற்பாடு செய்து கொடுத்து அனைவரும் கோஆப்டெக்ஸில் கைத்தறி துணி இரகங்களை தமிழக அரசு வழங்கிடும் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடியில் வாங்கி ஏழை, எளிய கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திட உதவிட வெண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இவ்விழாவில், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர்(கூ.பொ.) திரு.ஆர்.செந்திவேல், கோ-ஆப்டெக்ஸ் தொடர்பு அலுவலர் திரு.ரமேஷ், விற்பனையாளர் திரு.முருகன், விற்பனையாளர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.