Close

Book Festival – Meeting

Publish Date : 26/09/2024
.

செ.வெ.எண்:-64/2024

நாள்:25.09.2024

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 11-வது புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல்லில் புத்தகத்திருவிழா நடத்துவது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(25.09.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்லும் வகையில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்காக அரசு சார்பில் ரூ.25.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுநுாலக இயக்ககத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம் மற்றும் திண்டுக்கல் இலக்கியக்களம் ஆகியவை இணைந்து திண்டுக்கல் நகரில் 11-வது புத்தகத்திருவிழா திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 10.10.2024-ஆம் தேதி முதல் 20.10.2024-ஆம் தேதி வரை தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி முடிய நடைபெறவுள்ளது.

புத்தகத்திருவிழாவில் தினமும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகள், கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் பல்சுவை கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. பல்வேறு சிறந்த அறிஞர்கள் தினமும் வருகை தந்து சிறப்பான கருத்துரைகள் வழங்க உள்ளனர்.

புத்தகக்காட்சி மற்றும் அதனைச் சார்ந்து நடைபெறும் கலைநிகழ்ச்சிகள், பிற இலக்கியம் சார்ந்த நிகழ்வகளுக்கு வல்லுநர்கள், கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களை தேர்வு செய்திட வேண்டும். பொதுமக்கள், மாணவர்களிடம் புத்தகக்கண்காட்சி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திட வேண்டும்.

புத்தகத் திருவிழா வளாகத்திற்கு பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் வடிவமைத்திட வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுகாதார வளாகம், மற்றும் முதல் உதவி மையம் ஏற்பாடு செய்திட வேண்டும். பேருந்து வசதிகள் ஏற்படுத்திட வேண்டும். உணவகங்கள் ஏற்பாடு செய்திட வேண்டும். பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமரா பொருத்திட வேண்டும். தீயணைப்பு துறையினர் தீ தடுப்பு சாதனங்களுடன் தயார்நிலையில் இருத்தல் வேண்டும்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளை அழைத்துவர போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்திட வேண்டும்.

இப்புத்தகத் திருவிழாவிற்கு வரும் அனைவருக்கும் நுழைவு கட்டணம், வாகனம் நிறுத்துமிட கட்டணம் ஏதுமில்லை. எனவே, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் புத்தகத்திருவிழாவிற்கு வருகை தந்து, பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், உதவி ஆணையாளர்(கலால்) திரு.பால்பாண்டி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.மா.மாரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், திண்டுக்கல் இலக்கிய களம் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.