Monday Grievance Day Petition
செ.வெ.எண்:-72/2024
நாள்:-30.09.2024
திண்டுக்கல் மாவட்டம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 39 பயனாளிகளுக்கு ரூ.8.32 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(30.09.2024) நடைபெற்றது.
தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 319 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இன்றையதினம், தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம் சார்பில் 2 பயனாளிகளுக்கு மூக்குக்கண்ணாடி தலா ரூ.1500 மதிப்பிலும், 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியாக தலா ரூ.5,000 மதிப்பிலும், 14 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகையாக மொத்தம் ரூ.26,700 மதிப்பிலும், 9 பயனாளிகளுக்கு இயற்கை மரணம் ஈமச்சடங்கு உதவித்தொகை தலா ரூ.25,000 மதிப்பிலும் என திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 30 நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ.2.79 இலட்சம் மதிப்பிலும், கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் விபத்து மரண உதவித்தொகை 4 பயனாளிகளுக்கு ரூ.5.20 இலட்சம் மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் காதொலி கருவிகள் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.3000 மதிப்பிலும், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை கொடை நிதியிலிருந்து 2 பயனாளிக்கு தலா ரூ.12,000 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரம் என ஆக மொத்தம் 39 பயனாளிகளுக்கு ரூ.8.32 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி ஜெயசித்ரகலா, உதவி ஆணையாளர்(கலால்) திரு.பால்பாண்டி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.மா.மாரி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி மு.முருகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) திரு.செ.முருகன், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.