Close

Employment – Unemployed – Free Stipend – Notification

Publish Date : 17/10/2024

செ.வெ.எண்:-39/2024

நாள்:-16.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தங்களது கல்வித் தகுதியினைப் பதிவு செய்துவிட்டு ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்பவர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 30.09.2024 உடன் முடிவடைந்த காலாண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதோர், பத்தாம் வகுப்பு தேர்ச்சி, மேல்நிலைக் கல்வி தேர்ச்சி மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி போன்ற கல்வித் தகுதியினைப் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவுற்று 30.09.2024 வரை தொடர்ந்து புதுப்பித்து வருபவர்கள் அக்டோபர்–2024 முதல் உதவித்தொகை பெறத் தகுதியுடையவர்களாவார்கள். மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை பதிவு செய்து ஓராண்டு பூர்த்தி அடைந்திருத்தல் வேண்டும். இத்தொகை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72,000/- ஆகும். எனவே, குடும்ப ஆண்டு வருமானம் உச்ச வரம்பின்படி தகுதியுள்ள பயனாளிகள் இதர தகுதிகளுக்குட்பட்டு விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழகத்திலேயே கல்வி முடித்தவர்களாகவும், வேறு எந்தப் பணியிலும் ஈடுபடாதவர்களாகவும் இருக்க வேண்டும்.

அரசு மற்றும் பிற வகைகளில் எந்தவித நிதி உதவியும் பெற்றிருக்கக்கூடாது. பள்ளி மற்றும் கல்லூரியில் சென்று படிப்பவராக இருக்கக்கூடாது. இத்தகுதியுள்ளோர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் வந்து விண்ணப்ப படிவத்தினை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், https://tnvelaivaaippu.gov.in அல்லது www.tnvelaivaaippu.gov.in வேலைவாய்ப்பு இணையதளத்தில் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அனைத்து கலங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து 30.11.2024-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இத்திட்டத்தின்கீழ், பொதுப்பயனாளிகள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதோருக்கு பிரதிமாதம் ரூ.200-ம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.300-ம், மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.400-ம் மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600-ம், உதவித்தொகையாக அந்தந்த காலாண்டின் முடிவில் பயனாளியின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை பத்தாம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றோருக்கு மாதம் ரூ.600-ம் மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றோருக்கு மாதம் ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000-ம் உதவித்தொகையாக அந்தந்த மாதத்தின் முடிவில் மாற்றுத்திறனாளி பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற்று வரும் பயன்தாரர்களுக்கு உரிய விதிமுறைகளுக்குட்பட்டு சுயஉறுதிமொழி ஆவணத்தை உரிய ஆவணங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

12-காலாண்டுகள் உதவித்தொகை பெற்று முடித்தவர்கள் சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க தேவையில்லை. ஏற்கனவே 12 காலாண்டுகள் உதவித்தொகை பெற்று முடித்தவர்களுக்கு மீண்டும் உதவித்தொகை வழங்கப்படமாட்டாது. உதவித்தொகை பெறுவதால் தங்களுக்கு கிடைக்கப்பெறும் வேலைவாய்ப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படமாட்டாது.

இது தொடர்பான விவரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.