Close

CMCHIS – Chief Minister’s Comprehensive Health Insurance Scheme

Publish Date : 17/10/2024

செ.வெ.எண்:-43/2024

நாள்: 16.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சிகிச்சை பெற்று பயனடைந்த பயனாளிகளுக்கு பரிசுகள், காப்பீட்டுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மருத்துவமனைகள், சுகாதார விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சிகிச்சை பெற்று பயனடைந்த பயனாளிகளுக்கு பரிசுகள், காப்பீட்டுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மருத்துவமனைகள், சுகாதார விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(16.10.2024) வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

முதலமைச்சரின் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஆண்டிற்கு ரூ.5.00 இலட்சம் வரை கட்டணமின்றி சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். மேலும், இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள்முதல் மொத்தம் 2,053 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகளும், 52 வகையான நோய் பரிசோதனைகளும், அதனோடு தொடர்புடைய 11 தொடர் சிகிச்சைகளும், 8 உயர் அறுவை சிகிச்சைகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக அளிக்கப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, 12 அரசு மருத்துவமனைகள், 32 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 3 பரிசோதனை மையங்கள், 3 ஆட்டிசம் மையங்கள் ஆகியவை இத்திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 86,731 நபருக்கு ரூ.150.33 கோடி மதிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுநாள் வரை 4,86,222 குடும்ப அட்டைதாரர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அட்டை வழங்கப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை 5 பயனாளிகளுக்கும், காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற்று பயனடைந்த 5 பயனாளிகளுக்கு பரிசுகள், சுகாதார விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, பழனி அரசு தலைமை மருத்துவமனை, ஒட்டன்சத்திரம் ஸ்ரீகுமரன் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளுக்கு பரிசுகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர்(மருத்துவ நலப்பணிகள்) மரு.பூமிநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.சத்தியநாராயணன், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மாவட்ட திட்ட அலுவலர் திரு.சிவக்குமார், ஒருங்கிணைப்பாளர் திரு.கருப்பையா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.