Close

Horticulture – scheme Inspection

Publish Date : 29/10/2024
.

செ.வெ.எண்:-70/2024

நாள்:29.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் வேளாண் வளர்ச்சித் திட்டப் பணிகளை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

2021-22-ஆம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் ரூ.100.35 கோடி மானியம் வழங்கப்பட்டதில் 96,927 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில், தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் வேளாண் வளர்ச்சித் திட்டப்பணிகளை, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி பா.காயத்ரி மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் இன்று(29.10.2024) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் வட்டாரத்தில் சித்தரேவு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பசுமைக்குடில், திண்டுக்கல் வட்டாரத்தில் ஏ.வெள்ளோடு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கத்தரி தோட்டம் மற்றும் பசுமைக்குடில், ரெட்டியார்சத்திரம் வட்டாரத்தில் கசவனம்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள காளான் வளர்ப்புக் கூடாரம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாட்டில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியாகும் மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டம் முக்கிய இடத்தை வகிக்கிறது. தோட்டக்கலைப் பயிர்களான பழப்பயிர்கள், காய்கறி பயிர்கள், மலைத்தோட்டப்பயிர்கள், மருத்துவப் பயிர்கள் மற்றும் மலர்கள் ஆகியன சுமார் 1,08,244 எக்டர் பரப்பில் சாகுபடியாகிறது. தோட்டக்கலைப்பயிர்களின் பரப்பை அதிகரிக்கவும். உற்பத்தியைப் பெருக்கவும் தரமான மகசூல் மற்றும் அதிக வருவாய் விவசாயிகள் பெற்றிட அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திட அரசின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை மாநில அளவில் இரண்டாவது பெரிய காய்கறி சந்தையாக விளங்குகிறது. இங்கிருந்து சராசரியாக நாள் ஒன்றுக்கு 500 டன் காய்கறிகள் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. தோட்டக்கலைப் பயிர்களான கொய்யா, சப்போட்டா மற்றும் கண்வலி கிழங்கு சாகுபடி பரப்பில் திண்டுக்கல் மாவட்டம் முதன்மை இடம் வகிக்கிறது. ஆண்டுக்கு ரூ.150.00 கோடி மதிப்பிலான 750 டன் கண்வலி கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. மா மற்றும் திராட்சை சாகுபடி பரப்பில் திண்டுக்கல் மாவட்டம் இரண்டாம் இடம் வகிக்கிறது. புவிசார் குறியீடு பெறப்பெற்ற மலைவாழைகளான விருபாச்சி மற்றும் சிறுமலை வாழைகள், திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கொடைக்கானலில் விளையும் மலைப்பூண்டு புவிசார் குறியீடு பெற்றுள்ளது.

மாம்பழகூழ் தயாரிப்பு செய்யும் தொழிற்சாலைகள் நத்தம் மற்றும் சாணார்பட்டி வட்டாரத்தில் செயல்பட்டு வருகின்றன. கெர்கின் (விஷவெள்ளரி) பதனிடும் தொழிற்சாலை 7 இடங்களில் இயங்கி வருகிறது. மல்லிகைப்பூவில் இருந்து எடுக்கக்கூடிய வாசனை மெழுகு தயார் செய்யும் தொழிற்சாலைகள் 10 இடங்களில் செயல்பட்டு வருகிறது. தோட்டக்கலைப் பயிர்களின் விளைபொருட்களை கெடாமல் சேமித்து வைக்க 15,000 டன் கொள்ளளவு உள்ள குளிர்பதன சேமிப்பு கிடங்கு இயங்கி வருகிறது.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம் 2023-24 ஆம் ஆண்டில் ரூ.15.88 கோடி செலவினத்தில் புதிய தோட்டங்கள் அமைத்தல், பாதுகாக்கப்பட்ட சாகுபடி, பண்ணைக்குட்டை, அறுவடைபின் செய்நேர்த்தி, உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சி இனங்களில் செயல்படுத்தப்படுகிறது.

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில், குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்தல் பணிக்கு 25 மெட்ரிக்டன் கொள்ளளவு கிடங்கு அமைக்க மானியத்தொகை ரூ.87,500 வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 3,500 எக்டர் பரப்பளவில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வெங்காய சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதத்தில் அறுவடைக்குபின் மேலாண்மை என்ற பிரிவின் கீழ், குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்க மானிய உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இது வெங்காய சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையினை மேம்படுத்தும் வகையில் ரூ.8.15 இலட்சம் மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பழையதோட்டம் புதுப்பித்தல், நீர்ப்பாசன வசதி மேம்படுத்துதல், பாதுகாக்கப்பட்ட சாகுபடி, அங்கக வேளாண்மை, மகரந்த சேர்க்கை அதிகரிப்பதற்கான திட்டம் – தேனீ வளர்ப்பு, சந்தைப்படுத்துதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள 50 சதவீதம் மானியத்தில் சிப்பம் கட்டும் அறை, குறைந்த செலவின வெங்காய சேமிப்பு கிடங்கு போன்றவை ரூ.5.66 கோடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க குறைந்த நீரில் அதிக பரப்பு சாகுபடி செய்திட உதவும் உன்னத திட்டமான நுண்ணீர்ப்பாசனத் திட்டமானது தமிழக அரசால் தொடர்ந்து செயல்பட்டுத்தப்பட்டு வருகிறது. இயற்கை நீர்வளம் குறைந்துகொண்டே வரும் இந்த சூழலில் இத்திட்டத்தின் மூலம் 40 முதல் 60 சதவீதம் நீர் சேமிக்கப்படுகிறது. எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் சிறு, குறு விவசாயிகளுக்கு (100 சதவீதம் மானியத்தில்) நுண்நீர்ப் பாசன அமைப்புகள் எக்டர் ஒன்றுக்கு ரூ.1,35,855 இலட்சம் வரை வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டமானது திண்டுக்கல் மாவட்டத்தில் 2500 எக்டர் பரப்பளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2023-24ஆம் நிதி ஆண்டில் ரூ.46.25 இலட்சம் மானியத்தில் முருங்கை புதிய தோட்டம் அமைத்தல், நிரந்தர பந்தல் அமைப்பு, குச்சி பந்தல் அமைத்தல், துல்லிய பண்ணைத் திட்டம் போன்ற இனங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் நிதியாண்டில் ரூ.66.92 இலட்சம் மானியத்தில் மண்ணில்லா விவசாயம்(ஹைட்ரோபோனிக்ஸ்), செங்குத்து தோட்டம், மாடிதோட்டம் அமைத்தல், பழச்செடித் தொகுப்புகள், நெகிழிக் கூடைகள். காளான் வளர்ப்பு கூடம். குளிரூட்டும் பெட்டி, ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவித்தல், வெற்றிலையில் ஒருங்கிணைந்த உரம், பூச்சி மேலாண்மை, அரசு கல் வி நிறுவனங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் தோட்டம் அமைத்தல் போன்ற இனங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி பசல் பீமாயோஜனா (PMFBY) திட்டம் திண்டுக்கல்மாவட்டத்தில் இராபி 2023-24ல் தோட்டக்கலை பயிர்களான வெங்காயம், மிளகாய், வாழை, கத்தரி மற்றும் வெண்டை பயிர்களுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது.

மானாவாரி பகுதி மேம்பாட்டுதிட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையத்தில், ஒரு எக்டர் நிலம் உள்ள விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர்கள் பசுமாடு, ஆடுஆகியவை மானியத்தில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.1.20 கோடி இலக்கீடாக பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் 400 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மேலும் மண்புழு உரப்படுக்கை மற்றும் பயிற்சி செயல்விளக்கம் ஆகியவற்றிற்கு மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் பழனி, ரெட்டியார்சத்திரம், தொப்பம்பட்டி மற்றும் வேடசந்தூர் வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் 60 வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.44.64 இலட்சத்தில் பல்லாண்டு தோட்டக்கலை பயிர் பரப்பு விரிவாக்கம், காய்கறி சாகுபடியை ஊக்குவித்தல், பழச்செடி தொகுப்புகள் வழங்குதல் போன்ற இனங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 2021-22-ஆம் ஆண்டு முதல் இதுவரை செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், வழங்கப்பட்ட மானியத்தின் மூலம், பயனடைந்த விவசாயிகள் விபரம் வருமாறு:-

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் ரூ.34.76 கோடி மானியம் வழங்கப்பட்டதில் 14,072 விவசாயிகளும், நுண்ணீர்ப்பாசனத் திட்டத்தில் 6977.7 எக்டர் பரப்பளவில் சாகுபடி பணிகள் மேற்கொள்ள ரூ.48.05 கோடி மானியம் வழங்கப்பட்டதில் 6164 விவசாயிகளும், தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் ரூ.8.94 கோடி மானியம் வழங்கப்பட்டதில் 9911 விவசாயிகளும், மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தில் ரூ.241.5 இலட்சம் மானியம் வழங்கப்பட்டதில் 20,837 பயனாளிகளும், மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.214.4 இலட்சம் மானியம் வழங்கப்பட்டதில் 600 விவசாயிகளும், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தில் ரூ.71.58 இலட்சம் மானியம் வழங்கப்பட்டதில் 250 விவசாயிகளும்,

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் ரூ.178.94 இலட்சம் மானியம் வழங்கப்பட்டதில் 45,634 விவசாயிகள் மற்றும் பயனாளிகளும், பனை மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.1.575 இலட்சம் மானியம் வழங்கப்பட்டதில் 505 விவசாயிகளும், வேளாண்மை இயந்திர மயமாக்கும் துணை இயக்கத் திட்டத்தில் ரூ.77.86 இலட்சம் மானியம் வழங்கப்பட்டதில் 2541 விவசாயிகளும், பாரம்பரிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டதில் ரூ.14.38 இலட்சம் மானியம் வழங்கப்பட்டதில் 111 விவசாயிகளும், பாரதிய பிராக்கிருத்திக் கிரிஷிபதாதி திட்டத்தில் ரூ.19.54 இலட்சம் மானியம் வழங்கப்பட்டதில் 502 விவசாயிகளும், தேசிய மூங்கில் இயக்கத் திட்டத்தில் ரூ.13.12 இலட்சம் மானியம் வழங்கப்பட்டதில் 58 விவசாயிகளும் பயனடைந்துள்ளனர். 2021-22-ஆம் ஆண்டு முதல் இதுவரை ஆகமொத்தம் ரூ.100.35 கோடி மானியம் வழங்கப்பட்டதில் 96,927 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

சிறுமலை, சந்தையூர், கொத்தப்புளி மற்றும் நீலமலைக்கோட்டை அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் தரமான நடவுச்செடிகள் குறிப்பாக பழவகைக் கன்றுகள். சுவைதாழித் பயிர்களுக்கான செடிகள் மற்றும் மண்புழு உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு மானிய விலையில் தோட்டக்கலைத்துறை திட்டங்களின் மூலமாகவும், நேரடியாகவும் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இந்தியா மற்றும் இஸ்ரேல் நாட்டு ஒப்பந்தமாக காய்கறி மகத்துவ மையம் ரெட்டியார்சத்திரத்தில் நிறுவப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகளுக்கு காய்கறிகுழித்தட்டு நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் விவசாயிகளுக்கு பயிற்சி நிறுவனமாக செயல்படுகிறது. இங்கு உயர் தொழில்நுட்பத்தில் பசுமை கூடாரம், நிழல்வலை கூடாரம், நிலபோர்வை, களைபாய், காளான் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல் போன்ற தொழில்நுட்பம் கொண்டு விவசாயிகள் கண்டு கற்றுக்கொள்ளும் அளவில் ஒரு முன்னோடி நிறுவனமாக செயல்படுகிறது. மேலும் இங்கு ஈராண்டு தோட்டக்கலை பட்டயப்படிப்பு கல்லூரியும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தோட்டக்கலைதுறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் பயன்பெற TNHORTNET வலைதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்புகொண்டு இத்திட்டங்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறலாம்.

இந்த ஆய்வின்போது, தடியன் குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் பாலகுமுணன், பேராசிரியர் திரு.சத்தியமூர்த்தி, வேளாண்மை பொறியியல் துறை உதவிப்பொறியாளர் திரு.முருகேசன் உட்பட தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.