Close

Copparai – Procured through regulated outlets

Publish Date : 04/11/2024

செ.வெ.எண்:-76/2024

நாள்:30.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் விற்பனைக்குழுவிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 28000 ஹெக்டர் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டு வருகிறது. அதில் 3,29,504 மெ.டன் தேங்காய் உற்பத்தி செய்யப்பட்டு 3295 மெ.டன் விற்பனை உபரி ஏற்படுகிறது.

திண்டுக்கல் விற்பனைக்குழுவின் கீழ் செயல்பட்டு வரும் பழனி, நத்தம், வத்தலக்குண்டு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மற்றும் கோபால்பட்டி ஆகிய 6 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் 13.03.2024 முதல் 10.06.2024 வரையிலான காலத்தில் கொப்பரை கொள்முதல் செய்வதற்கு 2,350 மெ.டன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. முதல் கட்டமாக மேற்காணும் காலத்தில் 619 மெ.டன் கொள்முதல் செய்யப்பட்டு 425 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக திண்டுக்கல் விற்பனைக்குழுவிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் 10.09.2024 முதல் 09.12.2024 வரை 3 மாதங்களுக்கு கொப்பரை கொள்முதல் செய்ய 1,731 மெ.டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி, கொள்முதல் மையங்களில் அரவை கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.11,160 வீதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் கொண்டு வரக்கூடிய அரவை கொப்பரையின் ஈரப்பதமானது 6 சதவீதத்திற்கும் குறைவாகவும், பூஞ்சானம் மற்றும் சுருக்கம் நிறைந்த கொப்பரைகள் எண்ணிக்கையில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவும், அயல் பொருட்கள் ஒரு சதவீதத்திற்கும் மற்றும் சில்லுகள் 10 சதவீதத்திற்கும் குறைவாகவும் இருக்க வேண்டும் என தரக்குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரு விவசாயிடமிருந்து ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 296 கிலோ மட்டுமே கொள்முதல் செய்யப்படும்.

மேற்படி, கொள்முதலுக்கு அரவை கொப்பரை கொண்டு வரும் விவசாயிகள் நில உரிமைக்கான அசல் சிட்டா மற்றும் அடங்கலும், ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் நகலும் கொள்முதல் மையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாய்ப்பினை திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.