The Hon’ble CM VC -The Hon’ble Food and Civil Supply Minister – School Building – parappalaru
செ.வெ.எண்:- 07/2024
நாள்: 08.11.2024
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் 5 பள்ளிகளில் ரூ.7.51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டடங்கள் மற்றும் அறிவியல் ஆய்வகக் கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பரப்பலாறு அரசு உயர்நிலை பள்ளியில் புதிய கட்டடத்தில் குத்துவிளக்கேற்றினார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று(08.11.2024) வெள்ளிக்கிழமை பள்ளிக் கல்வித் துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம், தேவிநாயக்கன்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில் ரூ.76.85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டடம் மற்றும் அறிவியல் ஆய்வகக் கட்டடம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேல் கரைப்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில் ரூ.141.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஐந்து வகுப்பறை கட்டடம் மற்றும் அறிவியல் ஆய்வகம், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், வில்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.105.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஐந்து வகுப்பறை கட்டடம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.128.16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆறு வகுப்பறை கட்டடம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், பரப்பலாறு அரசு உயர்நிலை பள்ளியில் ரூ.299.04 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 14 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் என மொத்தம் 5 பள்ளிகளில் ரூ.7.51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டடங்கள் மற்றும் அறிவியல் ஆய்வகக் கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பரப்பலாறு அரசு உயர்நிலை பள்ளியில் புதிய கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் குத்துவிளக்கேற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் தொடர்ந்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு மட்டுமின்றி, சொல்லாத பல்வேறு திட்டங்களை அறிவித்து, அத்திட்டங்களின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரின் எண்ணங்களை நிறைவேற்றி, பெண்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் 1.18 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், அரசு நகரப் பேருந்துகளில் மகளில் இலவச பயணம் மேற்கொள்ள விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் பெண்களின் பயணச்செலவு குறைக்கப்பட்டு, சேமிப்பு ஏற்படுகிறது.
பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது 34 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும் வகையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி(தமிழ்வழி கல்வி) படித்த மாணவர்கள் உயர்கல்வி படித்தால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் குடிசைகளே இல்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில் ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் வழங்கும் வகையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 8.00 இலட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படவுள்ளது. அதில் நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படவுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் ஏற்கனவே தொகுப்பு வீடுகள் திட்டத்தில் கட்டப்பட்ட 2.5 இலட்சம் பழைய வீடுகளை பழுது பார்த்து வழங்குவதற்காக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 20.70 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளதுடன், மாணவ, மாணவிகள் பசியின்றி கல்வி பயில வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவ, மாணவிகளுக்கு தரமான உணவு கிடைப்பதுடன், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வீட்டில் சமையல் வேலை பணிகள் குறைந்துள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். இந்த ஆண்டு கல்வித்துறைக்கு ரூ.44,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் மருத்துவம், பொறியில், வேளாண்மை, சட்டம், கால்நடை போன்ற உயர்கல்வியில் சேரும் மாணவ, மாணவிகளுக்காக 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளித்து செயல்படுத்தவதன் மூலம் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 17.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த 42 மாதங்களில் 2,500 நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டு புதிய கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில், திண்டுக்கல் மாவட்டத்தில் 230 கடைகளும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 72 நியாயவிலைக் கடைகளும் பிரிக்கப்பட்டு புதிய பகுதிநேர, முழுநேர நியாயவிலைக்கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நியாயவிலைக்கடைகளுக்கு சொந்த கட்டடங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 2 இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்துாரில் கூட்டுறவுத்துறை சார்பில் ஒரு கல்லுாரி, ரெட்டியார்சத்திரத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு கல்லுாரி, ஒட்டன்சத்திரம் – கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு கல்லுாரி, ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கையில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் சார்பில் ஒரு கல்லுாரி, விருப்பாட்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் என பல்வேறு கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
படித்த இளைஞர்கள் போட்டித்தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பதற்காக மதுரை, கோயம்புத்துார், சென்னை போன்ற நகரங்களுக்கு சென்று பயிற்சி பெற வேண்டிய நிலையை மாற்றி காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு போட்டித்தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் கடந்த தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வில்(தொகுதி 4) சுமார் 7 மாணவ, மாணவிகள் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு தொகுதி 1 மற்றும் தொகுதி 2 ஆகிய தேர்வுகளில் பல மாணவ, மாணவிகள் முதல்நிலை தேர்வில் தகுதி பெற்றுள்ளனர்.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மலைப்பகுதி கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க 20 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்தலாமா என்று மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.
விளைாயட்டு வீரர்களை ஊக்கப்படுத்தவும், பயிற்சி அளிக்கவும் தமிழ்நாடு முழுவதும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தொப்பம்பட்டியில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒட்டன்சத்திரம் மற்றும் ஆத்துார் ஆகிய பகுதிகளில் விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வடகாடு ஊராட்சியை பொறுத்தவரை டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சிகாலத்தில் இருந்தே ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கலைஞர் அவர்கள் ஆட்சிகாலத்தில்தான் பரப்பலாறு அணை கட்டப்பட்டது. தற்போது இந்த அணையை துார்வாருவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. துார்வாரும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் பரப்பலாறு அணை மற்றும் தலைக்குத்து ஆகிய இடங்களி சுற்றுலாத்தலங்களாக அறிவிக்கப்பட்டு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வடகாடு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 42 பணிகள் ரூ.4.36 கோடி மதிப்பீட்டிலும், சட்டமன்றப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 9 பணிகள் ரூ.2.10 கோடி மதிப்பீட்டிலும், பழங்குடியினர் நலத்துறை சார்பில் 39 பணிகள் ரூ.5.36 கோடி மதிப்பீட்டிலும், ஒன்றிய பொது நிதியிலிருந்து 14 பணிகள் ரூ.1.72 கோடி மதிப்பீட்டிலும், முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு பணி ரூ.1.00 கோடி மதிப்பீட்டிலும், நமக்குநாமே திட்டத்தில் 9 பணிகள் ரூ.2.72 கோடி மதிப்பீட்டிலும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 84 பணிகள் ரூ.4.15 கோடி, 15வது நிதிக்குழு மானியத்தில் 23 பணிகள் ரூ.2.48 கோடி மதிப்பீட்டிலும், வீடுகள் கட்டும் திட்டத்தில் ரூ.12.00 இலட்சம் மதிப்பீட்டிலும், துாய்மை பாரத இயக்கம் திட்டத்தில் 35 பணிகள் ரூ.4.00 இலட்சம் மதிப்பீட்டிலும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் 6 பணிகள் ரூ.3.88 கோடி மதிப்பீட்டிலும் என ஆட்சிப்பொறுப்பேற்ற 42 மாத காலத்தில் வடகாடு ஊராட்சியில் மட்டும் மொத்தம் 265 பணிகள் ரூ.32.00 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையில், வடகாடு ஊராட்சிக்குட்பட்ட பரப்பலாறு அரசு உயர்நிலை பள்ளியில் ரூ.2.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 14 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் மாணவ, மாணவிகள் பயன்பாட்டிற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தப்பள்ளி டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சி காலத்தில்தான் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்தப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் கொண்டுவர காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் வடகாடு ஊராட்சியையும் இணைக்க ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளும் சீரான வளர்ச்சியை பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் ஆதரவாக, உறுதுணையாக இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், பழனி சார் ஆட்சியர் திரு.கிஷன்குமார், இ.ஆ.ப., ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி மு.அய்யம்மாள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி ப.உஷா, ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.காமராஜ், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.பழனிச்சாமி, மாவட்ட கல்வி அலுவலர் திரு.ஜான்பிரிட்டோ, வடகாடு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி தனலட்சுமி, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.