Close

Kodaikanal E-Pass-Green tax – Collector Inspection

Publish Date : 14/11/2024
.

செ.வெ.எண்:-26/2024

நாள்:-13.11.2024

திண்டுக்கல் மாவட்டம்

கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வருகைப் புரியும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறை, பசுமை வரி விதிக்கும் நடைமுறை தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.அ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வருகைப் புரியும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறை, 5 லிட்டருக்கு குறைவான தடை செய்யப்பட்ட அனைத்து வகையான நெகிழி பாட்டில்கள் பயன்படுத்தும் தனிநபர், வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.20/-(ஒரு பாட்டிலுக்கு) பசுமை வரி விதிக்கும் நடைமுறை தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.அ.ப., அவர்கள் கொடைக்கானல் மலைப்பகுதி சாலையில் அய்யம்புள்ளி சோதனைச் சாவடியில் இன்று(13.11.2024) ஆய்வு மேற்கொண்டார்.

மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்களின்படி, கொடைக்கானலுக்கு வரும் வெளியூர் மற்றும் உள்ளுர் வாகனங்களுக்கு இ-பாஸ் எடுத்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற நடைமுறை 07.05.2024 தேதியிலிருந்து செயல்பாட்டில் உள்ளது.

கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களுக்கு எளிதில் இ-பாஸ் எடுக்கும் வகையில் க்யூஆர்கோட்(QR Code) வழங்கப்பட்டுள்ளது. இ-பாஸ் ஸ்கேனிங் கொடைக்கானல் நகராட்சி சில்வர்பால்ஸ் அருகில் உள்ள டோல்கேட்டில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இப்பகுதியில் இ-பாஸ் பரிசோதனையின்போது போக்குவரத்து நெரிசல், இணையதள பிரச்சனைகளால் புதிதாக இ-பாஸ் வழங்குவது மற்றும் ஸ்கேன் செய்வதில் கூடுதல் கால அவகாசம் ஏற்பட்டது.

இதனை கவனத்தில் கொண்டு சில்வர்பால்ஸ் டோல்கேட்டில் நடைமுறையில் இருந்து வந்த இ-பாஸ் ஸ்கேனிங் செய்யும் பணிகள் கொடைக்கானல் நுழைவாயிலாக உள்ள காமக்காபட்டி காவல் சோதனை சாவடி, தர்மத்துப்பட்டி, வடகாடு, சித்தரேவு வன சோதனை சாவடி, பாலசமுத்திரம் காவல் சோதனை சாவடிகளில் இ-பாஸ் ஸ்கேன் செய்து வாகனங்களை அனுப்பும் நடைமுறை இன்று(13.11.2024) முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொடைக்கானல் மலைப்பகுதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று இ-பாஸ் ஸ்கேன் செய்வதற்கான அவசியம் இல்லை. போக்குவரத்து நெரிசல் இன்றியும் உள்ளது. ஏற்கனவே இ-பாஸ் எடுத்துள்ளவர்களுக்கு ஸ்கேனிங் செய்வதும், இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு உடனடியாக இ-பாஸ் பெற்று, ஸ்கேன் செய்து அனுப்புதல் மற்றும் 5 லிட்டருக்கு குறைவான தடைசெய்யப்பட்ட நெகிழி தண்ணீர் பாட்டில்கள் மற்றும் அனைத்து வகையான குளிர்பான பாட்டில்களையும் பறிமுதல் செய்யும் பணிகள் இந்த 6 சோதனைச் சாவடிகளில் நடத்தப்படுகிறது.

இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் சரிபார்த்தல் நடைமுறைக்காக காத்திருக்கவோ, வாகன நெரிசலில் கஷ்டப்படவோ தேவைப்படாது. இதனால் கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு இருந்த வந்த சிரமங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

மேலும், மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் 5 லிட்டருக்கு குறைவான தடை செய்யப்பட்ட நெகிழி தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் பயன்படுத்தினாலோ, வைத்திருந்தாலோ விற்பனை செய்தாலோ ஒரு நெகிழி பாட்டிலுக்கு ரூ.20/- பசுமை வரியாக விதிக்கப்பட்டு பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படும்.

கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எளிதாக இ-பாஸ் எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக கொடைக்கானலுக்கு செல்லும் பகுதிகளில் உள்ள முக்கிய உணவகங்கள், விடுதிகள், பெட்ரோல் பங்க், கடைகள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் இ-பாஸ் QR Code, இ-பாஸ் இணைய முகவரி மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள்/ படங்கள் கூடுதலாக அச்சிடப்பட்டு பதாகைகள் நிறுவப்பட்டுள்ளன.

கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வருகைப் புரியும் வாகனங்களுக்கு இ.பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறை மற்றும் 5 லிட்டருக்கு குறைவான தடை செய்யப்பட்ட அனைத்து வகையான நெகிழி பாட்டில்கள் பயன்படுத்தும் தனிநபர், வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.20/-(ஒரு பாட்டிலுக்கு) பசுமை வரி விதிக்கும் நடைமுறையினை முழுவீச்சில் செயல்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.அ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இ-பாஸ் நடைமுறைப்படுத்துதல், கண்காணித்தல், நெகிழி இல்லா பசுமை கொடைக்கானல் உருவாக்குவதற்கு வருவாய்துறை, ஊரக வளர்ச்சித் துறை, கொடைக்கானல் நகராட்சி, பண்ணைக்காடு பேரூராட்சி, வனத்துறை, காவல்துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வருகைப் புரியும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறை, 5 லிட்டருக்கு குறைவான தடை செய்யப்பட்ட அனைத்து வகையான நெகிழி பாட்டில்கள் பயன்படுத்தும் தனிநபர், வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.20/-(ஒரு பாட்டிலுக்கு) பசுமை வரி விதிக்கும் நடைமுறை தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.அ.ப., அவர்கள் அய்யம்புள்ளி சோதனைச் சாவடியில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.