Close

DISHA Meeting

Publish Date : 23/11/2024
.

செ.வெ.எண்:-48/2023

நாள்:-21.11.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம், கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு(DISHA) கூட்டம், கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று(21.11.2024) நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி(எஸ்.எஸ்.ஏ), பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம், பாரம்பரிய வேளாண் அபிவிருத்தித் திட்டம், தேசிய கால்நடை நோய்த் தடுப்பூசித் திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்(நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்), அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்(பெரூராட்சிகள் துறை), தேசிய ஊரக குடிநீர் வழங்கும் திட்டம், பெண் குழந்தைகளை காப்போம் மற்றும் கற்பிப்போம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், மதிய உணவுத் திட்டம், பிரதான் மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா, தீன தயாள் உபாத்தியாயா கிராமின் கௌசல்யா யோஜனா(திறன் வளர்ப்பு பயிற்சி), பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசனத் திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், மண் சுகாதார அட்டை, மின்னணு-தேசிய வேளாண் சந்தை, பாரத பிரதமர் நுண்ணீர் பாசனத் திட்டம்-வேளாண்மைத்துறை, பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம்-தோட்டக்கலைத்துறை, தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டம், தேசிய சுகாதார குழுமம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், துாய்மை பாரத இயக்கம்/நகர்ப்புறம்(மாநகராட்சி), துாய்மை பாரத இயக்கம்/ நகர்ப்புறம் (பேரூராட்சி), துாய்மை பாரத இயக்கம் கிராமின், பாதாள சாக்கடை திட்டம் – அம்ரூத் திட்டம், சியாமா பிரசாத் முகர்ஜி ரூர்பன் மிசன், தேசிய பாரம்பரிய நகர வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டம், அழகிய நகர மயமாக்கல் பணி, பிரதம மந்திரி முன்னோடி கிராமத் திட்டம், பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், மறுசீர் அமைக்கப்பட்ட விநியோகத்துறை அமைப்புத் திட்டம், தேசிய சமூக பாதுகாப்புத் திட்டம், பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா, பிரதான் மந்திரி ஜன்விகாஸ் கார்யக்ரம்(சிறுபான்மையினர் நலத்துறை), நில அளவை ஆவணங்கள் நவீன மயமாக்கல் திட்டம், டிஜிட்டல் இந்தியா-இணைய சேவை வழங்கும் திட்டம், கேலோ இந்தியா, நேரு யுவகேந்திரா, பிரதம மந்திரி கிராமின் அவாஸ் யோஜனா, பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு மத்திய அரசுத் திட்டங்களின் பயன்பாடு, முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து துறை அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.

இக்கூட்டத்தில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் தெரிவித்ததாவது:-

மத்திய அரசு திட்டங்கள் மற்றும் அதன் நோக்கம் சரியாக நிறைவேற்றப்படுவதை மாவட்ட அளவில் கண்காணித்து நிறைவேற்றுவது மற்றும் ஆலோசனைகள் வழங்குவது மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின்(DISHA) பணியாகும். மத்திய அரசின் திட்டப்பணிகள் செயல்படுத்தும்போது ஏற்படும் இடர்பாடுகளை சரியான நேரத்தில் களைந்து அதற்கான தீர்வு கண்டு பணிகளை சிறப்பாக நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு வழிகாட்டியாக இந்தக்குழு செயல்படுகிறது.

திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மத்திய அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணித்திடும் பொருட்டு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் காலாண்டிற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி 2024-25-ஆம் நிதியாண்டிற்கான மூன்றாம் காலாண்டிற்கான கூட்டம் இன்று(21.11.2024) நடத்தப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் தொடர்புடைய மாவட்ட அளவிலான அலுவலகங்களில் இருந்து 2022-2023, 2023-2024 மற்றும் 2024-2025-ஆம் நிதியாண்டுகளுக்குரிய திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் தரமான அனைவருக்குமான கல்வி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மண் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள், நுண்ணீர் பாசனத்தை மேம்படுத்துதல், மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நேரடி சந்தைப்படுத்தும் இணையவழி வர்த்தகம் வழிவகை செய்யப்பட்டு, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் விற்பனை செய்து, உரிய விலை கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது. தரமான நெல் விதைகள், தரமான உயிர் உரங்கள், பயறு வகை உற்பத்தியை அதிகரித்தல், தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை நிவர்த்தி செய்ய பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வளர் இளம் பருவத்தினருக்கான ஊட்டச்சத்து மேம்படுத்துதல், கர்ப்பிணி தாய்மார்களின் நலனுக்கான திட்டம், கருவுற்ற மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு பல்வேறு மருத்துவ வசதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

ஊரகப் பகுதிகளிலுள்ள ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்ற வகையில், ஊரகப் பகுதிகளில் இருந்து நகர்ப்புறங்களுக்கு மக்கள் இடம் பெயர்வதை குறைக்கும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தனிநபர் வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்குதல், திட, திரவ கழிவு மேலாண்மை மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றை மேற்கொள்வதற்காக துாய்மை பாரத இயக்கம் மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நில அளவை நவீன மயமாக்கல் திட்டத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் இணையவழி பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 01.04.2022 முதல் 31.03.2023 வரை 85,806 மனுக்கள் பெறப்பட்டதில், 85,806 மனுக்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. 01.04.2023 முதல் 31.03.2024 வரை 68,482 மனுக்கள் பெறப்பட்டதில் 68,482 மனுக்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. 01.04.2024 முதல் 08.10.2024 வரை 37,211 மனுக்கள் பெறப்பட்டதில் 31,314 மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. 5,867 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. நிலுவை மனக்களை முடிவு செய்ய துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 18.08.2024 வரை பெறப்பட்ட அனைத்து மனுக்களும் முடிவு செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசின் திட்டங்களாக இருந்தாலும், மாநில அரசின் திட்டங்களாக இருந்தாலும் குறித்த காலத்திற்குள் தரமான வகையில் முடிக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டப்பணிகள் உள்ளிட்ட அனைத்துத் திட்டப்பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும், என திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி ஜோ.இளமதி ஜோதிபிரகாஷ், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக் முகையதீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (இணை இயக்குநர்) திட்ட இயக்குநர் திரு.சதீஸ்பாபு, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திரு.மு.பாஸ்கரன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்லைவர் திரு.கா.பொன்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் திரு.என்.ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி ஜெயசித்ரகலா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி உஷா, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, வருவாய் கோட்டாட்சியர்கள், துணை ஆட்சியர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவர்கள், நகராட்சி ஆணையாளர்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.