DCPU – Child Welfare Committee
செ.வெ.எண்:-51/2024
நாள்:-21.11.2024
திண்டுக்கல் மாவட்டம்
குழந்தை நலக்குழுவிற்கு தலைவர் (ம) உறுப்பினர்கள் நியமனத்திற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தை நலக்குழுவிற்கு தலைவர் (ம) உறுப்பினர்கள், 2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி நியமிக்கப்படுவதற்காக, தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தை நலக்குழுவிற்கு ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இப்பதவி அரசு பணி அல்ல.
குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம், சமூகப்பணி, சமூகவியல், மனித உடல் நலம், கல்வி, மனித மேம்பாடு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றும் குழந்தைகள் தொடர்பான உடல்நலம், கல்வி, குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும். அல்லது மேற்கண்ட பிரிவுகளில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். மேலும் பத்திரிக்கையில் செய்தி வெளியிடும் நாளில், விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது,
இதற்கான விண்ணப்படிவத்தை திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது துறை சார்ந்த இணையதள முகவரியிலிருந்து(https://dsdcpimms.tn.gov.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் (செய்தி வெளியீடு நாளிலிருந்து 15 நாட்களுக்குள் ) “இயக்குநர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 600 010.“ என்ற முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பித்திட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.