Dindigul (DIC ) – Notification
செ.வெ.எண்:-69/2024
நாள்:-26.11.2024
திண்டுக்கல் மாவட்டம்
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உத்யம் பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்
இந்திய ஒன்றிய அரசு 2020 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிவிக்கையின் படி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அவற்றின் இயந்திர தளவாடங்களின் மீதான முதலீடு மற்றும் ஆண்டு விற்பனை வருவாய் ஆகிய இரட்டைக் கூட்டு அளவுகோலின் படி வகைப்படுத்தப்படுகின்றன. இதன்படி, இயந்திர தளவாடங்களின் மீதான முதலீடு ரூ.1 கோடிக்கு மிகாமலும் ஆண்டு விற்பனை வருவாய் ரூ.5 கோடிக்கு மிகாமலும் இருந்தால் அது குறு நிறுவனம். இவை முறையே ரூ. 10 கோடிக்கு மிகாமலும் ரூ.50 கோடிக்கு மிகாமலும் இருந்தால் சிறு நிறுவனம். இயந்திர தளவாடங்களின் மீதான முதலீடு ரூ.50 கோடிக்கு மிகாமலும் ஆண்டு விற்பனை வருவாய் ரூ.250 கோடிக்கு மிகாமலும் இருந்தால் அது நடுத்தர நிறுவனம்.
இத்தகைய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உத்யம் பதிவுச் சான்றிதழ் பெறுவதன் மூலம் தம் நிறுவனத்தை நிரந்தரமாக அரசு அங்கீகாரத்துடன் பதிவு செய்து கொள்ளலாம். உத்யம் பதிவு செய்வது இணையவழியாக, மிக எளிய செயல்முறைகளைக் கொண்ட கட்டணமில்லா செயல்முறையாகும். ஆதார், ஆதாரோடு இணைக்கப்பட்ட அலைபேசி எண் மற்றும் பான் கார்டு இருந்தால் தமது உற்பத்தி, வாணிக அல்லது சேவைத் தொழில் நிறுவனத்துக்கு அரசு ரீதியிலான அங்கீகாரம் பெற விரும்பும் எவரும் www.udyamregistration.gov.in என்ற இணைய தளத்தினுள் நுழைந்து மிக எளிதாக, தாமாகவே உத்யம் பதிவுச் சான்றிதழ் பெறலாம்.
மாவட்டத் தொழில் மையங்கள் உத்யம் பதிவு குறித்த விவரங்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதோடு தேவைப்படுவோருக்கு உத்யம் பதிவுச் சான்றிதழ் இணையவழி பெற ஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் வழங்குகின்றன. இவையன்றி வங்கிகளும் Udyam Assisted Filing முறை மூலம் உத்யம் பதிவுச் சான்றிதழ் பெற உதவுகின்றன.
உத்யம் பதிவுக்கான தளத்திலேயே அரசுத்துறை கொள்முதலில் பங்கு பெறுவதற்கான அரசு மின் சந்தை (GeM), பெருநிறுவனங்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குத் தாம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை உரிய காலக்கெடுவுக்குள் வழங்காமை குறித்த சிக்கல்களை அணுகுவதற்காக SAMADHAN தளம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான விற்பனைத் தொகை குறித்த காலத்தில் கிடைப்பதை உறுதி செய்வதான TReDS தளம் இவற்றிலும் பதிவு செய்து கொள்ளலாம்.
உத்யம் பதிவு கட்டாயம் இல்லை எனினும் அதனால் கிடைக்கும் பயன்கள் மிகுதி. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் சலுகைகள் மற்றும் உதவிகளைப் பெறவும் அவை செயல்படுத்தும் திட்டங்களின் கீழ் பயன் பெறவும் உத்யம் பதிவுச் சான்றிதழ் அடையாள அட்டையாகிறது. அரசுக் கொள்முதலில் பங்கு பெறவும் நிலுவைத் தொகைகளை உரிய காலக்கெடுவுக்குள் வழங்காமை குறித்த வழக்குகளைப் பதிவு செய்யவும் விற்பனைத் தொகை குறித்த காலத்தில் கிடைப்பதை உறுதி செய்வதான TReDS தளத்தில் பதிவு செய்யவும் உத்யம் பதிவுச் சான்றிதழ் அவசியமாகின்றது.
இந்திய ரிசர்வ் வங்கி விதிகளின் படி, முன்னுரிமைக் கடன் (Priority Sector) முறைமையில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இயந்திர தளவாட முதலீட்டுக்கான பருவக் கடன் பெறவும் நடைமுறை மூலதனத்துக்கான கடன் பெறவும் உத்யம் பதிவு ஒரு துருப்புச் சீட்டாக அமைகிறது.
அங்கீகரிக்கப் படாத, அமைப்பாக வரையறுக்கப் படாத குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைப்பாக ஒழுங்குபடுத்தப்படவும் அரசின் அங்கீகாரம் மற்றும் அரசு வழங்கும் சலுகைகள், மானியங்கள், நிதி மற்றும் நிதி சாராத உதவிகள் பெறவும் உத்யம் பதிவுச் சான்றிதழ் மிக அவசியமாகிறது.
உத்யம் பதிவின் மூலம் மட்டுமே மாநிலத்தில் செயல்படும் தொழில் நிறுவனங்கள், அவை மேற்கொள்ளும் தொழில் நடவடிக்கைகள் குறித்த முறையான புரிதலை அரசு பெற இயலும். அந்தப் புரிதலின் மூலமாகத் தான் அவற்றின் தேவைகளை அறிந்து கொள்வதோடு அவற்றை மேலும் வலுவும் வளமும் கொண்டவையாக மேம்படுத்துவதற்கான உத்திகளை வகுத்திட முடியும். தேவையுள்ளோர் கேட்கும் முன் அவர் தேவையறிந்து சேவை செய்வதைத் தன் கடனாய்க் கொண்டு ஒழுகும் தமிழ்நாடு அரசு, தேவைகளை முன்னுணரும் முனைப்பில் உத்யம் பதிவுச் செயல்பாட்டை ஒரு முனைப்பியக்கமாகச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இது வரை உத்யம் பதிவுச் சான்றிதழ் பெறாத குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இப்பதிவின் தேவை மற்றும் பதிவினால் பெறத்தக்க பயன்களை அறிந்து தெளிந்து உத்யம் பதிவுச் சான்றிதழ் பெற வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.
உத்யம் பதிவு குறித்த விழிப்புணர்வை உருவாக்கவும் மக்களைத் தேடி சேவைகள் என்ற அடிப்படையில் உத்யம் பதிவுக்கான வழிகாட்டுதல்களை வழங்கவும் வட்டார நிலைகளிலும் பேரூராட்சி மற்றும் நகராட்சிகள் மட்டத்தில் எதிர்வரும் காலங்களில் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, S.R மில்ஸ் ரோடு திண்டுக்கல் அவர்களை நேரடியாகவோ 0451-2904215 / 8925533943 என்ற எண்களில் தொலைபேசி வாயிலாகவோ அணுகினால் உத்யம் பதிவுச் சான்றிதழ் பெறும் நடைமுறை தெளிவாக விளக்கப்படும்.
ஆதார், ஆதாரோடு இணைக்கப்பட்ட அலைபேசி எண் மற்றும் பான் கார்டு இவற்றுடன் நேரடியாக அணுகும் பட்சத்தில் உத்யம் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் பதிவிறக்கம் செய்து தரப்படும். தொழில்முனைவோர் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி தம் நிறுவனங்களைப் பதிவு செய்து அதனாலேற்படும் பயன்களைப் பெறுவதுடன் அனைத்துத் தரப்பு மக்களின் தேவையறிந்து கடமையாற்றும் அரசின் தேவை அறிவதற்கான முனைப்பில் தம் பங்களிப்பினை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.