Close

Animal Husbandry FMD

Publish Date : 20/12/2024

செ.வெ.எண்:-50/2024

நாள்:-18.12.2024

திண்டுக்கல் மாவட்டம்

கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் காணை நோய் தடுப்பூசி போடும் பணி 19.12.2024 அன்று தொடங்கி 21 நாட்களுக்கு மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக தேசிய கால்நடை நோய்த்தடுப்பூசிப் பணித் திட்டத்தின் கீழ், ஆறாவது சுற்று கால் மற்றும் வாய் காணை நோய் தடுப்பூசிப்பணியானது 19.12.2024 அன்று தொடங்கி 21 நாட்களுக்கு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது. மேலும் விடுபட்ட கால்நடைகளுக்கு இத்தடுப்பூசி போடும் பணியானது 09.01.2025 முதல் 23.01.2025 வரை 15 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2,91,700 கால்நடைகளுக்கு காணை நோய் தடுப்பூசி போடப்படவுள்ளது. கால் மற்றும் வாய் காணை நோயானது, குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்நோயினால் இறப்புகள் குறைவாக இருந்தபோதிலும், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத்திறன் குறைவு, கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடை படுவது, இளங்கன்றுகளின் இறப்பு போன்ற பாதிப்புகளினால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகமாக உள்ளது.

மேலும் இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலம், நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் இந்நோய் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மைகொண்டது. மேலும் இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் பால், உமிழ்நீர் ஆகியவற்றால் காற்றின் மூலம் மற்றும் தொடர்பு ஏற்படுவதன் மூலம் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.

இந்நோய் வராமல் தடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறையால் அந்தந்த கிராம ஊராட்சிகளில் 19.12.2024 முதல் சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசி போடப்படும். எனவே, விவசாயப் பெருமக்கள் தங்களது கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் காணை நோய் தடுப்பூசியினை தவறாது போட்டு, தங்கள் கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.