Close

Agriculture – Grievance Day Petition

Publish Date : 23/12/2024
.

செ.வெ.எண்: 55/2024

நாள்: 20.12.2024

திண்டுக்கல் மாவட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(20.12.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், விவசாயத்திற்கு தேவையான உரங்கள் தாராளமாக வழங்கிட வேண்டும், நில அளவை செய்து தர பட்டா மற்றும் பட்டா பெயர் மாற்றம் குறித்தும், மழை நீரை சேமித்திட தேவையான ஆக்கிரமைப்புகளை அகற்றி குளங்களை சீரமைக்க வேண்டியும், மின் இணைப்பு கோரிய விண்ணப்பங்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் மின் இணைப்பு வழங்கிட வேண்டும், என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழகத்தில் விவசாயத்தை மேம்படுத்துவதற்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழையளவு 65.80 மி.மீட்டர். நடப்பு டிசம்பர்-2024 மாதம் பெய்த மழையளவு(17.12.2024 வரை) 121.91 மி.மீட்டர். டிசம்பர்-2024 மாதம் வரை பெய்ய வேண்டிய ஆண்டு சராசரி மழையளவு 836.00 மி.மீட்டர். நடப்பு ஆண்டில் தற்போது (20.12.2024) வரை பெய்த மழையளவு 1035.99 மி.மீட்டர் ஆகும். இது இயல்பான மழையளவைக் காட்டிலும் 199.99 மி.மீட்டர் கூடுதல் ஆகும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 20.12.2024 காலை 6.00 மணி நிலவரப்படி, பாலாறு பொருந்தலாறு அணை (மொத்த உயரம் 65 அடி) நீர்மட்டம் 63.55 அடி, பரப்பலாறு அணை (மொத்த உயரம் 90 அடி) நீர்மட்டம் 85.64 அடி, வரதமாநதி அணை (மொத்த உயரம் 66.47 அடி) நீர்மட்டம் 66.47 அடி, குதிரையாறு அணை (மொத்த உயரம் 79.99 அடி) நீர்மட்டம் 77.51 அடி, குடகனாறு அணை (மொத்த உயரம் 27.07 அடி) நீர்மட்டம் 25.89 அடி, நங்காஞ்சியாறு அணை (மொத்த உயரம் 39.37 அடி) நீர்மட்டம் 31.16 அடி, மருதாநதி அணை(மொத்த உயரம் 74 அடி) நீர்மட்டம் 72.00 அடி என்ற அளவில் நீர்மட்டம் உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2023-24-ஆம் ஆண்டில் விளைபொருட்கள் உற்பத்தியானது இலக்கை விட கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நெல் உற்பத்தி இலக்கு 44,361 மெ.டன், உற்பத்தி செய்யப்பட்ட அளவு 58,048 மெ.டன், சிறுதானியங்கள் உற்பத்தி இலக்கு 2,67,560 மெ.டன், உற்பத்தி செய்யப்பட்ட அளவு 2,86,617 மெ.டன், பயறு வகை உற்பத்தி இலக்கு 18,702 மெ.டன், உற்பத்தி செய்யப்பட்ட அளவு 9,812 மெ.டன் என உணவுப்பொருட்கள் உற்பத்தி ஆண்டு இலக்கு 3,30,623 மெ.டன் என்ற அளவைவிட உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அளவு 3,54,477 மெ.டன் ஆக உயர்ந்துள்ளது. பருத்தி உற்பத்தி இலக்கு 19,900 மெ.டன், அதில் உற்பத்தி செய்யப்பட்ட அளவு 15,816 மெ.டன், கரும்பு உற்பத்தி இலக்கு 2,86,000 மெ.டன், அதில் உற்பத்தி செய்யப்பட்ட அளவு 2,23,557 மெ.டன், எண்ணெய்வித்து பொருட்கள் உற்பத்தி இலக்கு 28,952 மெ.டன், அதில் உற்பத்தி செய்யப்பட்ட அளவு 20,293 மெ.டன் ஆகும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 01.04.2024 முதல் 17.12.2024 வரை யூரியா உரம் விநியோகம் 20,500 மெ.டன், இருப்பு 5,245 மெ.டன், டிஏபி விநியோகம் 1800 மெ.டன், இருப்பு 715 மெ.டன், பொட்டாஷ் விநியோகம் 3250 மெ.டன், இருப்பு 2634 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் விநியோகம் 3850 மெ.டன், இருப்பு 920 மெ.டன், காம்ப்ளக்ஸ் விநியோகம் 21,070 மெ.டன், இருப்பு 5420 மெ.டன், அம்மோனியம் சல்பேட் மற்றும் அம்மோனியம் குளோரைடு விநியோகம் 390 மெ.டன், இருப்பு 250 மெ.டன், கலப்பு உரங்கள் விநியோகம் 3,980 மெ.டன், இருப்பு 3010 மெ.டன் என மொத்தம் 54,840 மெ.டன் உரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 18,194 மெ.டன் உரம் இருப்பு உள்ளன. அதேபோல், விதை உள்ளிட்ட இடுபொருட்கள் தேவையான அளவு இருப்பு உள்ளன.

தமிழக அரசின் திட்டங்களை விவசாயிகள் அறிந்து, நல்ல முறையில் பயன்படுத்தி, வேளாண் தொழிலை மேம்படுத்தி, விவசாய பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்து, தங்கள் வாழ்வாதாரங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) திரு.எம்.எஸ்.ராஜா, கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திரு.நடராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) திரு.செ.முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) திருமதி கி.லீலாவதி உட்பட துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.