Pongal Gift Distribution -Meeting
செ.வெ.எண்:-03/2025
நாள்:-02.01.2025
திண்டுக்கல் மாவட்டம்
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவது தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவது தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(02.01.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் 2025-ம் ஆண்டு தைப்பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா 1 கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்க தமிழ்நாடு அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் 6,84,683, இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் வாழும் குடும்ப அட்டைதாரர்கள் 946 என மொத்தம் 6,85,629 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இந்த குடும்ப அட்டைதாரர்களக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொங்கல் பரிசுத்தொகுப்புகளில் பச்சரிசி மற்றும் சர்க்கரையின் தரத்தினை உறுதிசெய்து, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தகுதிவாய்ந்த அனைத்து பயனாளிகளுக்கும் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் பணிகளை கண்காணிக்க மாவட்ட அளவிலான தரக்கட்டுப்பாடு கண்காணிப்பு குழு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாவட்ட அளவிலான கரும்பு கொள்முதல் குழு, கரும்பு கொள்முதல் முதல்நிலை கண்காணிப்புக் குழு அலுவலர்கள், கரும்பு கொள்முதல் இரண்டாம் நிலை கண்காணிப்புக்குழு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்திட வட்டார அளவிலான கொள்முதல் குழு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வட்டாட்சியர், மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் நடமாடும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வட்ட அளவில் துணை ஆட்சியர்களைக் கொண்ட மண்டல குழுக்கள் உருவாக்கப்பட்டு, டோக்கன் 03.01.2025 முதல் விநியோகம் செய்யப்படவுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் பரிசுத் தொகுப்பு பெற வேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு டோக்கன்கள் தெருவாரியாக வீடுவீடாக சென்று நியாய விலைக்கடைகளின் விற்பனையாளர்களால் விநியோகம் செய்திட வேண்டும். மேலும், தெரு வாரியாக சுழற்சி முறையில் விநியோகம் மேற்கொள்ளப்படும் விபரம் நாள் மற்றும் நேரம் நியாயவிலைக்கடை முன்பாக காட்சிப்படுத்தப்பட வேண்டும். அதிக அளவு குடும்பஅட்டைகள் பயன்பாட்டில் இருக்கும் நியாய விலைக்கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வண்ணம் கூடுதல் கவுன்டர்கள் அமைத்து தற்பொழுதைய விற்பனை முனையத்துடன் ஒரு விற்பனை முனையம் சேர்த்து விரைவில் பரிசுத் தொகுப்பு விநியோகம் முடிக்கும் வண்ணம் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்காக வரும் மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர், திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக்முகையதீன், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி சு.ஜெயசித்ரகலா, வேளாண்மை இணை இயக்குநர் திரு.பாண்டியன் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.