Tamil Pudhalvan scheme
செ.வெ.எண்:-16/2025
நாள்:-08.01.2025
திண்டுக்கல் மாவட்டம்
‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தில் 7,096 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்வி கனவை நிறைவேற்றும் வகையில் உன்னத திட்டத்தை செயல்படுத்திடும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மாணவர்கள் நெஞ்சார்ந்த நன்றி…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றது முதல் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். கல்விச் செல்வம் அழியாச்செல்வம். இந்த செல்வத்தை மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 05.09.2022 அன்று அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் உதவித் தொகை வழங்கும் “புதுமைப் பெண்” திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். உயர் கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ‘புதுமைப்பெண் திட்டம்’ பெண்களின் உயர் கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி பயிலுவது 34 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ஏழை, எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும், மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும் ‘தமிழ்ப்புதல்வன்’ எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.‘தமிழ்ப்புதல்வன்’ எனும் திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கோயம்புத்தூரில் 09.08.2024 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி, அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வியில்) 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து, உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையானது நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் 10 பொறியியல் கல்லூரிகள், 22 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 11 மருத்துவக் கல்வி நிலையங்கள், 8 தொழிற்பயிற்சி நிலையங்கள், 10 பாலிடெக்னிக் கல்லூரிகள், ஒரு சட்டக்கல்லூரி, ஒரு ஆசிரியர் பயிற்சி நிலையம், ஒரு பல்கலைக்கழகம், 8 பார்மசி மற்றும் 3 வேளாண்மை கல்லூரிகள் உட்பட 75 கல்லூரிகளில் உயர்கல்வி பயின்று வரும் 7,096 மாணவர்கள் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
‘தமிழ்ப்புதல்வன்’ எனும் தொலைநோக்கு திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் மாணவர்கள் கல்லூரிகளில் அதிக அளவில் சேர்க்கைக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், அவர்களுடைய உயர்கல்வி தேவைகளை அவர்களே பூர்த்தி செய்து கொள்ள வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்பெல்லாம் விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மணியார்டர் மூலமாக பெற்றோர்களிடமிருந்து பணம் வந்து சேரும். ஆனால் தற்போது மாணவர்களின் வங்கிக் கணக்கிலேயே உதவித்தொகை வரவு வைக்கப்படுகிறது.
‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தில் பயனடைந்துள்ள கல்லுாரி மாணவர் ரஞ்சித் தெரிவித்ததாவது:-
எனது சொந்த ஊர் சின்னாளப்பட்டி. நான் ஆத்துார் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். எனக்கு தாயும், சகோதரியும் உள்ளனர். நான் பிளஸ் 2 படிக்கும்போது எனது தந்தை இறந்துவிட்டார். குடும்ப செலவை சமாளிக்க முடியாமல் எனது தாய் தவித்து வரும் நிலையில், எனது கல்லுாரி படிப்புக்கு பொருளாதார வசதியின்றி மிகவும் தவித்து வந்தோம். அதையடுத்து நான் கடைகளில் பகுதிநேரமாக வேலை செய்துகொண்டே கல்லுாரி படித்து வருகிறேன். கல்லுாரிக்கு சென்று வரும் நிலையில் சில நாட்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டு விடுகிறது. அதனால் பகுதிநேர வேலையில் கிடைக்கும் குறைந்த வருமானம் படிப்புச் செலவுக்கு போதுமானதாக இல்லை. இந்நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். அதில் எனக்கும் மாதம் ரூ.1000 கிடைக்கிறது. இந்த தொகை எனது படிப்புச் செலவுக்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. கல்லுாரி படிப்பு செலவிற்காக வீட்டில் பெற்றோரை எதிர்பார்க்காமல் நானே சமாளித்துக்கொள்கிறேன். என்னைப் போன்ற ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்வி கனவை நிறைவேற்றிடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன், என தெரிவித்தார்.
‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தில் பயனடைந்துள்ள ஐ.டி.ஐ. மாணவர் அருண்குமார் தெரிவித்ததாவது:-
எங்கள் ஊர் பள்ளப்பட்டி. எனது தந்தையும், தாயும் கட்டட தொழிலாளர்கள். எனக்கு ஒரு தங்கை உள்ளார். நான் 10-ஆம் வகுப்பு படித்து, தற்போது ஒட்டன்சத்திரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரிக்கல்-எலக்ட்ரானிக்ஸ் ஐ.டி.ஐ.(இஇஇ) படித்து வருகிறேன். எனது பெற்றோரின் வருமானம் குடும்பச் செலவுக்கே போதாத நிலையில், எனது படிப்புச் செலவை சமாளிக்க முடியாமல் எனது பெற்றோர் திணறி வந்தனர். இந்நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தியுள்ள ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் வாயிலாக எனக்கும் மாதம் ரூ.1000 கிடைக்கிறது. இந்த தொகை எனது படிப்புச் செலவுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஐடிஐ படிப்பிற்கான டூல்ஸ்(கருவிகள்) வாங்குவதற்கு பயன்படுகிறது. இதனால் பெற்றோருக்கு பொருளாதார நெருக்கடி குறைகிறது. ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பயில உதவிடும் வகையில் தமிழ்ப்புதல்வன் திட்டம் உள்ளது, என தெரிவித்தார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.