AGRI Marketing Conference – Dindigul
செ.வெ.எண்:-30/2025
நாள்:-15.02.2025
திண்டுக்கல் மாவட்டம்
வேளாண் விளைபொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டுக் கருத்தரங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் ஏஎம்எஸ் மஹாலில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான வேளாண் விளைபொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டுக் கருத்தரங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(15.02.2025) நடைபெற்றது. வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் திரு.த.ஆபிரகாம், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் விவசாயத்தை மேம்படுத்துவதற்காகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
இந்தியாவில் பசுமைப்புரட்சி, சிறந்த வேளாண் தொழில்நுட்பங்கள் பயன்பாடு போன்ற காரணங்களால் உணவு உற்பத்தியில் நம்நாடு தன்னிறைவு அடைந்துள்ளது. மேலும், இங்கு உற்பத்தியாகும் உணவுப் பொருட்கள் பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த மாபெரும் பெருமை விவசாயிகளையே சாரும். இலாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படாமல், சமுதாய பங்களிப்பாக பல்வேறு இயற்கை சவால்களை எதிர்கொண்டு விவசாய தொழிலில் ஈடுபட்டு உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து வரும் விவசாயிகளின் பணி மிகவும் பாராட்டத்தக்கது.
தமிழ்நாட்டில் ஏழு வேளாண் காலநிலை மண்டலங்கள்(Agro Climatic Zones) உள்ளன. அவ்வேழு வேளாண் காலநிலை மண்டலங்களையும் கொண்டிருப்பது திண்டுக்கல் மாவட்டத்தின் சிறப்பம்சமாகும். திண்டுக்கல் மாவட்டம் பன்முகத்தன்மை வாய்ந்தது. அவை எல்லாப் பயிர்கள் விளைவிக்கக் ஏற்புடையதாக உள்ள நிலையில் விவசாயிகள் தங்கள் வாழ்க்கையில் உயர்நிலையை எட்டிட விவசாயிகள் வெளிநாட்டு தேவைக்கேற்ப பயிர் ரகங்களை சாகுபடி செய்திட வேண்டும்.
இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டுள்ள விவசாயிகள் இங்கு தெரிவிக்கப்படும் தொழில்நுட்பங்களை அறிந்து நல்ல முறையில் பயன்படுத்தி, வேளாண் விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரித்து, தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.
விழாவில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் பேசும்போது, ”விவசாயிகளின் பொருளாதாரம் உயர வேண்டும் எனில் வேளாண் விளைபொருள்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி உள்ளுர் சந்தைகளில் மட்டுமல்ல வெளிநாட்டு சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்ய வேண்டும். தன்னிறைவு விவசாயத்திலிருந்து தொழில்நுட்ப முறை விவசாயத்தை கடைபிடித்து உயர வேண்டும்” என்றார்.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் திரு.த.ஆபிரகாம், இ.ஆ.ப., அவர்கள் திட்ட விளக்கவுரையாற்றினார்.
வேளாண்மை இணை இயக்குநர் திரு.கு.சிவஅமுதன், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் திட்டங்கள், தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் இயந்திரங்கள் வாங்கி சிறுதானியங்கள் பதப்படுத்தும் மையம் அமைக்க மானியமாக ரூ.18.75 இலட்சம் பெறும் திட்டம் குறித்தும், திரு.மாயக்கண்ணன் வெளிநாடு வர்த்தக இயக்குநரகத்தின் செயல்பாடுகள், ஏற்றுமதி வழிமுறைகள் குறித்தும், திரு.செந்தில்குமார், நறுமண பொருட்கள் வாரியம், நறுமண பொருட்களின் ஏற்றுமதி தரம், பேக்கிங் செய்யும் முறைகள் குறித்தும், மதுரை பயிர் பாதுகாப்பு அலுவலர் ஸ்ரீஹர்ஷா வேளாண் விளைபொருட்களில் காணப்படும் பூச்சிக்கொல்லி எச்சங்கள் குறித்தும், மதுரை முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையத்தின் அலுவலர் திரு.ஒலியரசு முருங்கை இலை மற்றும் காய் ஏற்றுமதி குறித்தும், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் திரு.கமலக்கண்ன் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.அருணாச்சலம் ஆகியோர் அரசு மானியங்கள் குறித்தும் வங்கிக் கடன் உதவிகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
பெனாசிரம் அக்ரோ எக்ஸ்போ மேலாண்மை இயக்குநர் திரு.முஜிபூர் ரஹ்மான், தானியா உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் திரு.செல்வராஜ், ஜே.கே. பயோ பார்ம் நிறுவனர் திரு.ஜெயக்குமார் மற்றும் அய்யம்பாளையம் உழவர் உற்பத்தி நிறுவனத்தின் இயக்குநர் திரு.சக்திஜோதி ஏற்றுமதியில் தங்களது அனுபவம் மற்றும் வெற்றிக்கதைகளை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் விவசாயிகள், உழவர் உற்பத்தி நிறுவனங்கள், வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் அரங்குகள் அமைத்து தங்கள் விளைபொருட்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை காட்சிபடுத்தினர்.
இவ்விழாவில், வேளாண்மை துணை இயக்குநர் திருமதி ரெ.உமா, திண்டுக்கல் விற்பனைக் குழுத் தலைவர் திரு.கே.சி.பழனிச்சாமி, திண்டுக்கல், தேனி மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் அதிகமான விவசாயிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.