Collector Inspection(Central Library)
செ.வெ.எண்:-54/2025
நாள்:-16.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், மைய நூலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(16.05.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-
பொது நூலகத்துறை சார்பாக திண்டுக்கல் மாவட்ட மைய நூலகம் பேருந்து நிலையம் அருகில் கடந்த 2008 முதல் சொந்தக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த மைய நூலகம் சுமார் 5,125 சதுர அடி உள்ள இக்கட்டிடத்தில் தரைத் தளத்தில் நாளிதழ்கள் பிரிவும், முதல் தளத்தில் நூலிரவல் பிரிவும், இரண்டாம் தளத்தில் குறிப்புதவி பிரிவும் மூன்றாம் தளத்தில் மாவட்ட நூலக அலுவலகமும், நான்காம் தளத்தில் மாணவர்கள் தங்கள் சொந்த நூல்களைக் கொண்டு வந்து படிக்கும் பிரிவும் இயங்கி வருகிறது.
இந்நூலகம் வாரத்தில் வெள்ளிக் கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களைத் தவிர பிற நாட்களில் இயங்கும். வெள்ளிக் கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மாணவர்கள் தங்கள் சொந்த நூல்களைக் கொண்டு வந்து பயில அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
மாவட்ட மைய நூலகத்தில் 30.04.2025 வரை 22,706 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நூலகத்தில் சுமார் 1,72,411 நூல்கள் இருப்பில் உள்ளன. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 140 பருவ இதழ்கள் வாங்கி வழங்கப் படுகிறது.
தினந்தோறும் இந்நூலகத்தில் அரசு போட்டி தேர்வு குரூப்-2, குரூப்-4 ஆகிய தேர்வுகளுக்கு 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசு தேர்வாணைய குரூப்-4 தேர்வில் இம்மாவட்ட மைய நூலகத்தில் படித்த மாணவர்களில் 21 பேர் தேர்ச்சி பெற்று வெவ்வேறு அரசுத் துறைகளில் பணியில் சேர்ந்துள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, இந்நூலகத்திற்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, நூல்களின் இருப்பு மற்றும் நூல்களின் தேவை போன்றைவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கு பயிலும் மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடினார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட நூலகங்களின் ஆய்வாளர் திருமதி வள்ளி, மாநகராட்சி நகர் நல அலுவலர் திரு.ராம்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.