Kodaikanal Flower Show-Meeting
செ.வெ.எண்:-56/2025
நாள்:-18.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
கொடைக்கானலில் கோடைவிழா மற்றும் 62-வது மலர்க்கண்காட்சி முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடைவிழா மற்றும் 62-வது மலர்க்கண்காட்சி முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கொடைக்கானல் நகராட்சி கூட்டரங்கில் இன்று(18.05.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஆண்டுதோறும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கோடைவிழா மற்றும் மலர்க்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கொடைக்கானலில் கோடைவிழா மற்றும் 62-வது மலர்கண்காட்சி 24.05.2025 அன்று தொடங்கி 01.06.2025 வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது. தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மலர் கண்காட்சியை முன்னிட்டு பூங்காக்களில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் சால்வியா, டெல்பினியம், பிங்ஆஸ்டர்ஆர்னித்தோகேலம், கஜானியா, பென்ஸ்டீமன், வெர்பினா, கொரியாப்சிஸ் போன்ற மலர் செடிகளும், கொல்கத்தாவிலிருந்து வரவழைக்கப்பட்ட வீரிய ஒட்டு டேலியா மலர் நாற்றுக்கள் மற்றும் ஊட்டியிலிருந்து வரவழைக்கப்பட்ட லில்லியம் கிழங்குகள், வீரிய ஒட்டு மலர் நாற்றுக்கள் ஆன்டிரைனம், ஃபிளாக்ஸ் பேன்சி, மேரிகோல்டு, கேலண்டுல்லா, ஸ்டேட்டிஸ், டையாந்தஸ், ஜினியா, கலிஃபோர்னியா பாப்பி ஆகிய மலர்ச் செடிகள் இரண்டு மற்றும் மூன்று கட்டங்களாக நடவு செய்யப்பட்டு அனைவரின் மனதினை கவரும் வண்ணம் உள்ளது.
மலர்க்கண்காட்சியில் பிரையண்ட் பூங்கா தனித்துவமான பல இலட்சம் வண்ண மலர்களை கொண்ட மலர் படுக்கைள் உருவ அமைப்புகள், காய்கறி மற்றும் பழங்களாலான உருவ சிற்பங்கள் கொண்டு அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்விக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மலர் கண்காட்சியில் விவசாயிகள் மற்றும் தனியார் மலர் தோட்டம் அமைப்பினர் ஆகியோரை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் தோட்டப்பயிர்கள் மற்றும் மலர்களை கண்காட்சிப்படுத்தி சிறந்த பொருட்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.
மேலும் மலர் கண்காட்சிக்கு பெரியவர்களுக்கு ரூ.75, சிறியவர்களுக்கு ரூ.35, கேமராவிற்கு ரூ.50, வீடியோ கேமேராவிற்கு ரூ.100 வீதம் கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கோடைவிழா மற்றும் மலர்க்கண்காட்சி தொடக்க விழா 24.05.2025 அன்று காலை நடைபெறவுள்ளது. விழாவில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
கொடைக்கானலில் புதிய வரவாக பெப்பர்பால்ஸ் உள்ளது. இந்த அருவி பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் என்னென்ன தேவைகள், வசதிகள் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து நிர்வாக அனுமதி பெற்று கூடுதல் வசதிகள் மேற்கொள்ளப்படும். கோடைவிழாவை முன்னிட்டு போட்டோ பாய்ன்ட், செல்பிபாய்ன்ட் ஆகியவை பல்வேறு இடங்களில் பாதுகாப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன.
மலர் கண்காட்சியினை சிறப்பிக்க அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும், திண்டுக்கல் மற்றும் அருகிலுள்ள மாவட்ட பொதுமக்களையும் மற்றும் கொடைக்கானல் நகர்ப்பகுதி பொதுமக்களையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக அன்புடன் அழைக்கிறோம், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக, கொடைக்கானலில் மலர்க்கண்காட்சியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு.ஹ.கோவிந்தராஜ் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.