Close

Monday Grievance Day Petition

Publish Date : 20/05/2025
.

செ.வெ.எண்:-57/2025

நாள்:-19.05.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(19.05.2025) நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 222 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-

திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவராக நான் பொறுப்பேற்று 100 நாட்களை கடந்து விட்டது. நான் மாணவனாக இருக்கும் சமயத்தில் கல்வி உதவித்தொகை கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் விண்ணப்பித்துள்ளேன். அதனால், கல்வி உதவித்தொகை கோருவோரின் மனநிலையை நான் நன்கு அறிவேன். ஒரு மாணவருடைய கல்வி பொருளாதார நிலை காரணமாக தடைபட்டுவிடக் கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. உயர்வுக்குபடி, கல்லூரிக்கனவு, புதுமைப்பெண், தமிழ்புதல்வன் முதலிய கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களின் பயன்கள் மாணவ, மாணவிகளுக்கு முழுமையாக கிடைத்திட, கல்வி உதவித்தொகை தொடர்பாக பெறப்படும் விண்ணப்பங்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.

இன்றைய கூட்டத்தில், பீகார் மாநிலத்தில் 03.05.2025 முதல் 17.05.2025 வரை நடைபெற்ற தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில், கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி சார்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி மாணவிகள் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றனர். அந்த அணியில் திண்டுக்கல் விளையாட்டு விடுதி மாணவிகள் சரோன் மற்றும் நேத்ராலட்சுமி இடம்பெற்று விளையாடினர். அதேபோல் தடகளப்போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.சி.ஜித்தன் அர்ச்சுன் கலந்துகொண்டு நீளம் தாண்டுதலில் தங்கப்பதக்கம், 110 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலப்பதக்கம் பெற்றார். இந்த வீரர், வீராங்கனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

சமூக நலத்துறையின் மானியம் பெற்று காந்திகிராம அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் கஸ்துாரிபா சேவிகாசிரமம் சிறப்பு மேல்நிலைப்பள்ளியில் படித்து 2024-2025-ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 556 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்ற மாணவி மா.கவிதாசங்கரி, 553 மதிப்பெண் பெற்ற மாணவி கோ.கங்கா, 550 மதிப்பெண் பெற்ற மு.கனகா மற்றும் வணிகவியலில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவி மு.கனகா, கணினி பயன்பாட்டில் 100 மதிப்பெண் பெற்ற மாணவிகள் மு.கவியரசி, க.அமிர்தசதிகா ஆகியோருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

அதேபோல், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 465 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்ற மாணவி பி.ராகிணி, 463 மார்க் பெற்று இரண்டாமிடம் பெற்ற மாணவி தி.பானுபிரியா, 424 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்ற மாணவி மு.நித்யஸ்ரீ ஆகியோருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

மேலும், தந்தையை இழந்த மாணவன் தி.சந்திரன் என்பவரின் தாய் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சமயத்தில் இறந்த நிலையில், துயரமான நிலையிலும் படித்து தேர்வில் தேர்ச்சி பெற்றார். அவருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கினார்.

இன்றையக்கூட்டத்தில், இயற்கை மரணமடைந்த எத்திலோடு ஊராட்சி துாய்மைக் காவலர் திருமதி விருமாயி என்பவரின் வாரிசுதாரருக்கு ஈமச்சடங்கிற்காக தாட்கோ மூலம் ரூ.25,000 நிதியுதவியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி மு.முருகேஸ்வரி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்(தாட்கோ) மாவட்ட மேலாளர் திருமதி கோ.முத்துச்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.மு.கோட்டைக்குமார், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.