Ungalai Thedi Ungal Ooril -(Vedasandur TK)
செ.வெ.எண்:-68/2025
நாள்:-21.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
வேடசந்துார் வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(21.05.2025) பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, வேடசந்துாரில் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
வடமதுரை வட்டாரம், காணப்பாடியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ரூ.90,000 மானியத்தில் விவசாயி தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள டிராகன் ஃபுரூட் கல்துாண் பந்தல்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, வேலாயுதம்பாளையத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடுகள் கட்டுமான பணிகள், ஊரக வீடுகள் சீரமைப்புத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடுகள் கட்டுமான பணிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் வேலாயுதம்பாளையம் அரசு துணை சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்து இருப்பு, பணியாளர்கள் எண்ணிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, வேலாயுதம்பாளையத்தில் நபார்டு திட்டத்தில் ரூ.8.04 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் வேலாயுதம்பாளையம் நியாயவிலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்கள் எண்ணிக்கை, பொருட்கள் விநியோகம் மற்றும் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, வடமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.37.80 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வகுப்பறை கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பள்ளி வளாகத்தில் குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்பட்டுள்ளதா, சுகாதாரமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா, வகுப்பறைகள் சுத்தமாக உள்ளதா, கழிப்பறைகள் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா என்பதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் எரியோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டுமான பணிகள் மற்றும் எரியோட்டில் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் பேரூராட்சி அலுவலகம் புதிய கட்டடம் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், பாகநத்தம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடர்பான பணிகளை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பாகநத்தம் கிராமத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
ஸ்ரீராமபுரம் ஊராட்சி, பூதம்பட்டி கிராமத்தில் தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள், பூதம்பட்டியில் ரூ.12.67 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக்கடை கட்டடம் மற்றும் ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
வேடசந்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பின்படி, மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் திட்டப்பணிகளை விரைவாக செயல்படுத்தும் திட்டமாகும். இத்திட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, வேடசந்துார் வருவாய் வட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்துத் துறைகள் சார்பில் துறை அலுவலர்களால் பல்வேறு இடங்களில் இன்று(21.05.2025) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள் குறித்தும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கால்நடை மருந்தகங்கள் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, வேடசந்துார் சினேகா திருமண மண்டபத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு, அலுவலர்களின் ஆய்வு அறிக்கையை பார்வையிட்டார். தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி, பணிகளை நிறைவேற்றி அதுதொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்தினார். மேலும், பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டதை உறுதிப்படுத்திட வேண்டும், என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், 8 பயனாளிகளுக்கு ரூ.15.52 இலட்சம் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனைப் பட்டா, 2 பயனாளிகளுக்கு உழவர் பாதுகாப்பு அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
ஆய்வுக் கூட்டத்தில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் திருமதி கயல்விழி மற்றும் அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.