Close

The Hon’ble Rural Development minister – Temple – Redyarchatram

Publish Date : 20/06/2025
.

செ.வெ.எண்:-63/2025

நாள்:-18.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் கொத்தப்புள்ளி கிராமத்தில் புதிதாக திருமண மண்டபம் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று(18.06.2025) இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.217.98 கோடி மதிப்பீட்டில் 26 திருக்கோயில்களில் 49 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்து, ரூ.21.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உதவி ஆணையர் அலுவலகம், 15 ஆய்வர் அலுவலகங்கள் மற்றும் 16 திருக்கோயில்களில் 17 முடிவுற்ற பணிகளை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.

அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம், கொத்தப்புள்ளி கிராமத்தில் பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் புதிதாக திருமண மண்டபம் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்காலங்களில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு பாதயாத்திரையாக ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். பாதயாத்தரை பக்தர்கள் பயன்பெறும் வகையிலும், கொத்தப்புள்ளி கிராம சுற்றுப்புற மக்களின் வசதிக்காகவும் இங்கு ரூ.9.80 கோடி மதிப்பீட்டில் புதிதாக திருமண மண்டபம் கட்டுவதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்துள்ளார்கள்.

இந்த திருமண மண்டபம் சுமார் 2.94 ஏக்கர் பரப்பளவில் தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் அமைக்கப்படவுள்ளது. இங்கு 500 நபர்கள் தங்கும் வசதியுடன் கூடிய ஓய்வு மண்டபம், உணவுக்கூடம், சமையலறை, சரக்கு வைப்பறை, கழிப்பறை – 7, மின் வசதி அறை, அலுவலகம், மின் மோட்டார் அறை, பராமரிப்பு அறை, அலுவலர்கள் அறை, மின் துாக்கி -2 ஆகிய வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்கு 2 கல்லுாரிகள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு 2 கல்லுாரிகள், பழனியில் சித்தா கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளன. தற்போது நத்தத்தில் அரசு கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இப்படி கிராமப்புற பகுதி மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

100 நாள் வேலை திட்டத்தில் ஆரம்பகாலக்கட்டத்தில் இந்தியாவிலேயே 532 மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, விருதுகள் பெற்றுள்ளது. தற்போதும் 100 நாள் வேலை திட்டத்தில் அதிக வேலைநாட்கள் வழங்கப்பட்டு வருகிறது. சிமெண்ட் சாலைகள், கால்வாய்கள் துார்வாருதல், குடிநீர் என ஏராளமான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் கண்மாய்கள் துார்வாரப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இது மக்களுக்கான அரசு, விவசாயிகளுக்கான அரசு, ஏழை, எளிய மக்களுக்கான அரசு. இந்த அரசுக்கு என்றென்றும் ஆதரவு அளிகக் வேண்டும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் திரு.சுப்பிரமணியன் மற்றும் உறுப்பினர்கள், துணை ஆணையாளர் திரு.வெங்கடேஷ், துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.