The Hon’ble Rural Development minister – Petition – Scheme
செ.வெ.எண்:-79/2025
நாள்:-20.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் அரசின் திட்டங்களின் பயன்கள் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்று, முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆரியநெல்லுார், முன்னிலைக்கோட்டை மற்றும் கல்க்கம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் அரசின் திட்டங்களின் பயன்கள் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் இன்று(20.06.2025) பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், ஆரியநெல்லுாரியல் புதிய அங்கன்வாடி மையக் கட்டடம், முன்னிலைக்கோட்டை மற்றும் கலிக்கம்பட்டியில் புதிய நியாயவிலைக்கடை கட்டடங்கள் ஆகியற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
மேலும், முன்னிலைக்கோட்டையில் 12 பயனாளிகளுக்கு ரூ.9.03 இலட்சம் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனைப் பட்டா, விபத்து நிவாரணமாக 3 நபர்களுக்கு தலா ரூ.1.02 இலட்சம், இயற்கை மரணம் நிவாரண உதவித்தொகை 2 பயனாளிகளுக்கு தலா ரூ.22,500 என மொத்தம் ரூ.12.55 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி கிராமத்தில் வசிக்கின்ற பொதுமக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தி வருகிறார்.
குறிப்பாக பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள விடியல் பயணத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பெண்கள் உயர்கல்வி பயிலுவதை உறுதி செய்வதற்காக புதுமைப்பெண் திட்டம் என பெண்களின் முன்னேற்றத்திற்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் தகுதியான நபர்கள் விடுபட்டிருந்தால் அவர்களும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக ஜூலை 15-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் தகுதியுள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல், தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரு இலட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டதில், சுமார் 80,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த ஆண்டும் ஒரு இலட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கி, அவர்கள் பாதுகாப்பாக வசிப்பதற்காக வீடுகள் கட்டி வழங்கப்படுகிறது. குடிநீர், சாலை வசதி, பேருந்து வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட இந்த அரசு என்றென்றும் தயாராக உள்ளது, என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.