Close

The Hon’ble Social Welfare minister-Textile

Publish Date : 25/06/2025
.

செ.வெ.எண்:-89/2025

நாள்:-24.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள், திண்டுக்கல்லில் ஜவுளித் தொழில் கூட்டமைப்பு வழிகாட்டுதல் குழு கூட்டத்தில் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.

மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள், திண்டுக்கல் பார்சன் கோர்ட் ஹாலில் இன்று(24.06.2025) நடைபெற்ற ஜவுளித் தொழில் கூட்டமைப்பு வழிகாட்டுதல் குழு கூட்டத்தில் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அரசு செயலாளர் திருமதி ஜெயஸ்ரீ முரளிதரன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன், அவர்களின் உரிமையை நிலை நாட்டிடவும், அவர்களின் பாதுகாப்பிற்காகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையானது பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக காவல் துறை, கல்வித்துறை ஆகிய துறைகளுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காலத்திற்கு ஏற்றவாறு பிரச்சனைகள். குடும்ப பிரச்சனைகள் வளர்ந்து கொண்டு இருக்கிறது. ஆண், பெண் சமம் என்று பார்க்கும்போது சில இடங்களில் சமமாக இருக்கிறது, ஒரு சில இடங்களில் பிரச்சனையாக இருக்கிறது. ஒரு சில குடும்பங்களில் குடும்ப வன்முறை மற்றும் பிரச்சனைகள் இருந்து வருகிறது. அது தொடர்பாக 181 அமைப்பில் புகார் கொடுத்தால் அல்லது குடும்ப வன்முறை பாதுகாப்பு அலுவலரிடம் புகார் அளித்தால் பிரச்சனைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பல்வேறு அமைப்புகளின் சார்பில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களின் உரிமைப்பற்றி சட்டங்களையும், திட்டங்களையும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கோயம்புத்தூர், கரூர், திருப்பூர், ஈரோடு மற்றும் திண்டுக்கல், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் செயல்படும் ஜவுளி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. பணிபுரியும் இடங்களில் பெண்களின் உரிமைச்சட்டம், குடும்ப வன்முறை சட்டம், பெண்களுக்கு உரிமைகள், பெண்கள் அனைவரும் படிக்க வேண்டும், என்று மிக தெளிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, புதுப்பித்தல். அதிகாரம் வழங்குதல் ஆகியவை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இணையதளத்தில் விண்ணப்பங்களை எளிதாக விண்ணப்பிக்கலாம். பெண்களை ஆண்கள் ஊக்கப்படுத்தினால் சமுதாயம் மென்மேலும் வளர்ச்சி அடையும். ஆண்களும், பெண்களும் சமம் என்ற எண்ணத்தினை மனதில் பதிய வைக்க வேண்டும். விட்டுக்கொடுத்தல் மற்றும் சமம் என்ற எண்ணம் மனதில் இருந்தால் குடும்பத்தில் பிரச்சனை இல்லாமல் இருக்கும். ஒட்டு மொத்த சமுதாயம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் பிறக்கும் குழந்தைகள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் குழந்தைகளை சமமாக வளர்க்க வேண்டும். சமமாக கற்பித்து கொடுக்க வேண்டும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தற்போது கல்வி வாய்ப்பு, வேலைவாய்ப்பு என பல்வேறு துறைகளில் முக்கியத்துவம் வழங்கி உள்ளார்கள். பெண்களுக்கு சிறு, சிறு பிரச்சனைகள் வந்தாலும் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதற்கு தைரியமாக இருக்க வேண்டும். ஆண் குழந்தைகளாக இருந்தாலும், பெண் குழந்தைகளாக இருந்தாலும், வாலிப வயது ஆண்களாக இருந்தாலும் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். பிள்ளைகள் பள்ளிக்கு செல்கின்றார்களா, பிள்ளைகளின் நண்பர்கள் யார், அவர்கள் யாரிடம் பழக்கம் ஏற்படுத்துகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். இது பெற்றோர்களின் கடமையாகும்.

ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். 1930 சைபர் கிரைம் எண் பெண்களின் பாதுகாப்பிற்கு பயனுள்ளதாக உள்ளது. கைபேசியில் கடன் கொடுப்பதாக வரும் அழைப்புகள் தொடர்பாக பெண்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடனை வாங்கிய பின்பு நமக்கு மிகப்பெரிய தொல்லையாக இருக்கிறது. இத போன்ற கைபேசி எண்களில் வரும் செய்திகளை பெண்கள் நம்பி பல்வேறு துன்பங்களுக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே, பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும், 1930 என்ற சைபர் கிரைம் எண்களை தொடர்பு கொண்டு புகார் செய்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நமது குழந்தைகளுக்கு 1930 என்ற எண்ணை சொல்லி கொடுக்க வேண்டும்.

மேலும், அன்பு கரங்கள் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆதரவற்ற தாய், தந்தை இல்லாத பெண் குழந்தைகளுக்காக மாதம் ரூ.2000 வழங்கப்படுகிறது. அவர்கள் படிப்பதற்கு இப்பணம் மாதந்தோறும் வழங்கப்படுகிறது. கொரோனா காலத்தில் தாய், தந்தையை இழந்த 170 குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசு அந்தக் குழந்தைகளின் வங்கி கணக்கில் ரூ.5.00 இலட்சம் டெப்பாசிட் செய்தார்கள். தற்போது அக்குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.3000 வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3.00 இலட்சம் வழங்கப்பட்டது. மேலும். தமிழ்நாடு அரசு அக்குழந்தைகளை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தாய், தந்தை இழந்த குழந்தைகள் இதுவரை 11,000 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும். தாய், தந்தை இழந்த குழந்தைகள் இருந்தால் நீங்கள் மாவட்ட ஆட்சியரிடன் தகவல் தெரிவித்து அக்குழந்தையை அன்பு கரங்கள் திட்டத்தில் சேர்ப்பதற்கு உதவியாக இருக்க வேண்டும். இதுபோன்ற திட்டங்களை நல்ல முறையில் செயல்படுத்தக்கூடிய துறையாக சமூக நலன் மற்றும் மகளிர் ஊரிமைத்துறை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம், அதேபோல் மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் உயர்கல்வி படிப்பதற்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ், கைத்தறித்துறை இயக்குநர் திருமதி மகேஸ்வரி ரவிக்குமார், பெண்கள் பொருளாதார அதிகாரமளித்தல் ஒருங்கிணைப்பு மேலாளர் திருமதி சுகிலாஹான், இந்தியா மற்றும் பூட்டானுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதித்துவம்(புதுதில்லி) ஒத்துழைப்புப் பிரிவு குழுத் தலைவர் திரு.லாரன்ட் லெ டானோயிஸ், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஷ்பாபு, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அன்பழகன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், ஜவுளித் தொழில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் திருமதி பிரீதா ஜெயசீலன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) திரு.எம்.வீராச்சாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.