Close

DIC All Incentives

Publish Date : 07/07/2025

செ.வெ.எண்:-12/2025

நாள்:-03.07.2025

திண்டுக்கல் மாவட்டம்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பல்வேறு வகையான மானிய திட்டங்களில் பயன்பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாடு அரசு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வகையான மானிய உதவிகளை வழங்கி வருகிறது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கொள்கை 2021-ல் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான மானிய திட்டங்கள் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள மானிய திட்ட விவரங்கள் பின்வருமாறு:-

முத்திரைத் தாள் கட்டண மானிய திட்டம்:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை, நத்தம், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், சாணார்பட்டி, தொப்பம்பட்டி, வடமதுரை மற்றும் வேடசந்தூர் ஆகிய பின்தங்கிய வட்டாரங்களில் புதியதாக நிறுவப்படும் அனைத்து குறு மற்றும் சிறு உற்பத்தித் தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிலகப் பயன்பாட்டுக்கென நிலம் வாங்கும்போது செலுத்தும் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத் தொகையில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.

ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு ஊக்குவிப்பு திட்டம்:

ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு ஊக்குவிப்பு திட்டத்தின்கீழ், அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆற்றல் தணிக்கை மேற்கொள்வதற்கு ஆகும் செலவில் 75 சதவீதம் அதிகபட்சம் ரூ.1.00 இலட்சம் மானியமும், ஆற்றல் தணிக்கை முடிந்து பரிந்துரையின் அடிப்படையில் ஆற்றல் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்திற்காக பெறப்பட்ட இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கு ஆகும் செலவில் 50 சதவீதம் அதிகபட்சம் ரூ.10.00 இலட்சம் மானியமும் வழங்கப்படும்.

ஆற்றல் தணிக்கை மேற்கொள்வதற்கான தொழில் முறைக் கட்டணம் மட்டுமே மானியத்திற்கு தகுதியுடையதாகும். ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் அலகுகளைக் கொண்ட நிறுவனங்கள் ஒவ்வொரு அலகுக்கும் தனித்தனியாக ஆற்றல் தணிக்கை மானியம் பெறலாம். ஒரு தொழில் அலகு மூன்றாண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் ஆற்றல் தணிக்கை மேற்கொண்டு அதற்கான மானியம் பெறலாம்.

அறிவு சார் சொத்துரிமை /வர்த்தக முத்திரை /புவிசார் குறியீடு மானியத் திட்டம்:

அறிவுசார் சொத்துரிமை மானியம் பெற விண்ணப்பிக்கும் நிறுவனத்தாரர்களுக்கு முதல் முறை பராமரிப்பிற்கான செலவுடன் 75 சதவீதம் அதிகபட்சம் ரூ.3.00 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

வர்த்தக முத்திரை/புவிசார் குறியீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கும் நிறுவனத்தாரர்களுக்கு முதல் முறை பராமரிப்பிற்கான செலவுடன் 50 விழுக்காடு அதிகபட்சம் ரூ.25,000 வரை மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 10.06.2025 தேதியிட்ட அரசாணையில் புவிசார் குறியீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கும் நிறுவனத்தாரர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த மானியம் ரூ.25,000-லிருந்து ரூ.1.00 இலட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த நிறுவன உரிமையாளர்கள் மேற்காணும் திட்டத்தில் பயன்பெற https://www.msmetamilnadu.tn.gov.in/incentives என்ற இணைய முகவரியை தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இதுகுறித்து, மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, திண்டுக்கல் அவர்களை நேரிலோ அல்லது 0451-2904215, 2471609 மற்றும் 8925533943 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.