Kodaikanal college-collector Inspection
செ.வெ.எண்:-65/2025
நாள்:-19.07.2025
திண்டுக்கல் மாவட்டம்
கொடைக்கானல் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, விடுதி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, விடுதி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, மாணவிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். பள்ளிக் கல்வியை முடித்த மாணவ, மாணவிகள் அனைவரையும் ஏதாவது ஒரு உயர்கல்வியில் சேர்ந்து படிக்கின்ற வாய்ப்பை ஏற்படுத்திட வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், அரசின் திட்டங்கள் அனைத்தும் பெண்களை முன்னிலைப்படுத்தியே செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சமூகத்திற்கு பெரிய பங்களிப்பாக பெண்கள் உள்ளனர். தற்போது, பெண்கள் அனைத்துத் துறைகளிலும் தடம் பதித்து, சாதனைகள் நிகழ்த்தி வருகின்றனர். கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளில் முதன்மைபெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் பெண்கள் கல்வி கற்பது அதிகளவில் உயர்ந்து வருகிறது.
கல்வி என்பது தனி மனிதன் மற்றும் இந்த சமூகத்திற்கு அடித்தளம். நாட்டின் முன்னேற்றத்திற்கும், தனிமனிதன் வளர்ச்சிக்கும் கல்வி முக்கியமானது. பெண்கள் உயர்கல்வி பயிலுவதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு புதுமைப்பெண் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த ஊக்கத்தொகை மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கு உதவிடும் வகையில் அவர்களின் குறைந்தபட்ச தேவைகளை நிறைவேற்றிட பெரிதும் உதவிகரமாக உள்ளது. மாணவ, மாணவிகள் ஒவ்வொரு விஷயத்துக்கும் தங்களது பெற்றோர்களிடமிருந்து பண உதவிகள் பெறாமல் இந்த உதவித்தொகை மூலம் கல்விக்கான சிறிய தேவைகளை பூர்த்தி செய்து பயன் பெறலாம்.
இந்தக் கல்லுாரியை பொறுத்தவரை, கிராமப்புறம் மற்றும் மலைக்கிராமங்களைச் சேர்ந்த மாணவிகள் அதிகளவில் படிக்கின்றனர். இந்த மாணவிகள் கல்லுாரியில் காலடி வைத்ததே சாதனைதான். தயக்கத்தை அகற்றி, தன்னம்பிக்கை, தலைமையித்துவம் பண்பு ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த சமூகத்தில் உள்ள சவால்களை சந்திக்கக் கூடிய தையரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
கல்லூரி வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமானது. கல்லூரி என்பது கல்வியை மட்டுமின்றி வாழ்க்கை பாடத்தையும் நமக்கு கற்பிக்கிறது. இந்த கல்லூரி காலத்தில் நல்ல விஷயங்களை அறிந்து நமது வாழ்க்கையில் பயன்படுத்தி ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். தீய விஷயங்களை அறிந்து அவற்றை ஒதுக்கிட வேண்டும்.
கல்லுாரி படிக்கும் காலங்களில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி படித்து கல்வியில் சாதனை படைத்து, பெற்றோருக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும். கிராமப்புற மாணவிகள் உயர்கல்வி பயிலுவதை ஊக்குவிக்கும் வகையில் முன்னுதாரணமாக இருக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் முனைவர் பேபிராணி, பேராசிரியர்கள் திரு.அன்புமணி, திருமதி வெண்ணிலா மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.