Animal Husbandry Dept (Chaff Cutter)
செ.வெ.எண்:-91/2025
நாள்: 26.07.2025
திண்டுக்கல் மாவட்டம்
விவசாயிகள் 50 சதவீதம் மானியத்தில் புல் நறுக்கும் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 2025-2026-ஆம் ஆண்டிற்கு கால்நடைகளுக்கு அளிக்கப்படும் தீவன மேலாண்மையில் தீவன விரயத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேலும் கால்நடைகளின் செரிமான தன்மையை அதிகரிக்கவும், உற்பத்தி திறனை பெருக்கவும், சிறு, குறு விவசாயிகளுக்கு மின்சாரம் மூலம் இயங்கும் 86 புல் நறுக்கும் கருவிகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படவுள்ளது. இந்த மின்சாரத்தில் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள், குறைந்தபட்சம் 2 பசுமாடுகள் மற்றும் கால் ஏக்கர் பசுந்தீவனம் பயிரிட்டு மின்சார வசதியுடன் பராமரித்து வரும் சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளுக்குள், இந்த மானியத்தில் புல் நறுக்கும் கருவி பெற்றவர் இப்போது மானியம் பெற விண்ணப்பிக்க இயலாது.
இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் பயனாளிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கும், மகளிருக்கும் முன்னுரிமை வழங்கப்படும். மேலும், இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களை பெற்று உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம், என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.