Close

The Hon’ble Food and Civil Supply Minister – Ungaludan Stalin-(Porulur)

Publish Date : 03/09/2025
.

செ.வெ.எண்:-05/2025

நாள்: 02.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், பொருளுர் ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், பொருளுர் ஊராட்சியில் இன்று(02.09.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கலந்துகொண்டு,பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை கடலூர் மாவட்டத்தில் 15.07.2025 அன்று தொடங்கி வைத்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை தொடங்கி வைத்துள்ளார்கள். தமிழ்நாடு முழுவதும் 10,000 முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இதுவரை 5,000 முகாம்கள் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 5,000 முகாம்கள் நடைபெறவுள்ளது. அந்த வகையில் இன்றைய தினம்(02.09.2025) தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், பொருளுர் ஊராட்சியில் நடைபெற்றுக்கொண்டியிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 360 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறையின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது, வரும் முன் காப்போம் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் நோய் வருவதற்கு முன்பாக அவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய இரத்த பரிசோதனை, இசிஜி, சக்கரை பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் இம்முகாமில் மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் (02.08.2025) அன்று சென்னையிலிருந்து தொடங்கி வைத்தார்கள்.

இத்திட்டத்தின்படி, அனைத்து வகையான மருத்துவக் கருவிகளும், சிறப்பு மருத்துவ நிபுணர்களும் கலந்துகொண்டு, பொதுமக்களை பரிசோதனை செய்து, யாருக்காவது நோய் கண்டறியப்பட்டால் அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படவுள்ளன. மருத்துவமனையில் உள்ள அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் இந்த முகாமிலேயே மேற்கொள்ளும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி, தங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில், ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 3 முகாம்கள் வீதம் 45 முகாம்கள் இன்றிலிருந்து தொடங்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் நடத்தப்படவுள்ளது. இந்த முகாமில் 17 சிறப்பு மருத்துத் துறைகள் உட்பட 45க்கும் மேற்பட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்படவுள்ளது.

கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் ரூ.5.00 இலட்சம் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்படுகிறது. தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக சேர வேண்டும். இதன் மூலம் படிக்கின்ற குழந்தைகளுக்கு படிப்பதற்கான உதவித்தொகை, மருத்துவ சிகிச்சைக்கான மேற்கொள்ள பண வசதிகள் வழங்கப்படுகிறது. எனவே, நீங்கள் தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர வேண்டும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” சென்னையில் (12.08.2025) அன்று தொடங்கி வைத்தார்கள்.

இத்திட்டத்தின் மூலம் 70 வயதிற்கு மேல் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் நியாயவிலைக்கடைகளுக்கு வர வேண்டியது இல்லை. நியாயவிலைக்கடைகளிலிருந்து அரிசி, பருப்பு, சக்கரை, பாமாயில், கோதுமை ஆகிய பொருட்கள் வீட்டிற்கே கொண்டு வந்து வழங்கப்படும். மாதந்தோறும் வாங்கும் குடிமைப்பொருட்களை இனிமேல் மாதத்தின் இரண்டாவது வாரமான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களின் இல்லத்திற்கு கொண்டு சென்று வழங்கப்படும்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்று இன்னுயிர் காக்கும் 48 திட்டத்தின்கீழ் அரசு அங்கிகரிக்கப்பட்ட 480 தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனை 250 ஆகிய 730 மருத்துவமனைகளில் சாலை விபத்துகளில் சிக்கியவர்களை சேர்க்கப்பட்டால் 48 மணி நேரம் சிகிச்சைக்கு மேற்கொள்ள செலவாகும் தொகையை அரசு ஏற்றுக்கொள்ளும்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுமார் 20.00 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை.

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்தவுடன் நகராட்சி பகுதிகளில் ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் தினமும் வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்தப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு வராது. அந்த வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

பெண்களின் நலனுக்காக நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதம் ரூ.900 வரை சேமிப்பு ஏற்படுகிறது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் 1.16 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், தகுதியான நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 20.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 51 மாதங்களில் 3,000 நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டு புதியதாக முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கை 34 சதவீதம் உயர்ந்துள்ளது. இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி மேம்பாட்டிற்காக இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகளவு மாணவ, மாணவிகள் உயர்கல்வி படித்து வருகின்றனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கிராமப்புற மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக புதிய கல்லுாரிகளை தொடங்க அனுமதி அளித்து வருகிறார்கள். ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் சொந்தக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக்கல்லுாரி மாணவிகளுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு பழனி திருக்கோயில் சார்பில் வழங்கப்படுகிறது. இந்தக் கல்லுாரிக்கு ஒட்டன்சத்திரத்தில் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. விருப்பாட்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்திற்கு ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் Electrirican, Surveyor, Refrigeration And Air Conditioning Technician மற்றும் Computer Hardware And Network Maintenance ஆகிய நான்கு தொழிற்பிரிவுகளில் தரமான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையத்தில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு இந்த அரசானது மாத உதவித்தொகை ரூபாய் 750/- தமிழ்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூபாய் 1000 உரிமைத்தொகை, ஆக மொத்தமாக மாதந்தோறும் ரூபாய் 1750/- வங்கிக் கணக்கில் வாயிலாக வழங்கப்படுகிறது. மேலும், விலையில்லா பாட புத்தகங்கள், வரைபட கருவிகள், சீருடைகள் (தையல் கூலி ரூபாய் 300 உட்பட). மூடுகாலணிகள், மிதிவண்டி, பேருந்து பயண அட்டை மற்றும் அடையாள அட்டை போன்றவை வழங்கப்படுகிறது.

படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் குளிர்சாதன வசதியுடன் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவிகள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

எனவே, இப்பயிற்சி மையத்தினை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னை அடையாறில் உள்ள அண்ணா இன்ஸ்டிடியூட்டுக்கு அடுத்தபடியாக காளாஞ்சிப்பட்டி மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தொப்பம்பட்டியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும், ஒட்டன்சத்திரம் மற்றும் கேதையுறும்பு ஆகிய பகுதியில் தலா ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்கு 2 இலட்சம் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படவுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கலைஞர் கனவு இல்லத்திற்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 10,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தில் 2.50 இலட்சம் வீடுகளை சீரமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்திலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் பழனி இரயில்வே உயர் மேம்பாலம் கட்டப்படும்.

பொருளுர் ஊராட்சியில் ரூ.17.47 கோடி மதிப்பீட்டில் 454 பணிகளும், பாலப்பட்டி ஊராட்சியில் ரூ.8.00 கோடி மதிப்பீட்டில் 127 பணிகளும், வாகரை ஊராட்சியில் ரூ.8.19 கோடி மதிப்பீட்டில் 200 பணிகளும், அப்பிபாளையம் ஊராட்சியில் ரூ.2.89 கோடி மதிப்பீட்டில் 200 பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக என்றென்றும் உறுதுணையுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

அதனைதொடர்ந்து, திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி சார்பாக மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.18.00 இலட்சத்திற்கான காசோலை, 7 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 38 ஊராட்சிகளில் 268 தூய்மை பணியாளர்களுக்கு ரூ.14.68 இலட்சம் மதிப்பீட்டில் 12 வகையான உபகரணங்கள் மற்றும் தளவாட பொருட்களும், 30 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், பழனி வட்டாட்சியர் திரு.பிரசன்னா, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.சஞ்சைகாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி தாஹிரா, திரு.குமரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.