Close

NM-Uyarvukku padi -Education special Camp

Publish Date : 03/09/2025
.

செ.வெ.எண்:-06/2025

நாள்:-02.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

‘நான் முதல்வன் – உயர்வுக்குப்படி’ உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான மாணவர் சிறப்பு முகாம் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் ‘நான் முதல்வன் – உயர்வுக்குப்படி’ உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான மாணவர் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

முகாமில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் எல்லாருக்கும் எல்லாம் என்ற உன்னதமான நோக்கத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை பல்வேறு பெயர்களில் செயல்படுத்தி வருகிறார்கள். கல்வி மற்றும் சுகாதாரத்தை அரசின் இரு கண்களாக கருதி என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறையின் மூலமாக உயர்வுக்குப்படி என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நான்காவது கட்டமாக புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது.

மாணவ, மாணவிகள் கல்வியை அந்த அந்த வயதில், அந்த பருவத்தில், அந்த நேரத்தில் குறிப்பாக அந்த வாய்ப்பில் கற்றுக்கொண்டு பயன்பெற வேண்டும். முன்னதாக மூன்று நிகழ்ச்சிகள் “கல்லூரி கனவு“ என்ற தலைப்பில் நடத்தினோம். தற்பொழுது “உயர்வுக்குப்படி” என்ற திட்டம் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கு உயர்கல்வி எந்த சூழ்நிலையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உயர்வுக்குப்படி என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். 100% கல்வியை அனைத்து 12-ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவ, மாணவிகளும் கட்டாயமாக பெற வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். 12-ஆம் வகுப்பு படித்த அனைத்து மாணவ, மாணவிகளும் உயர்கல்வியில் சேர்ந்து படிக்க வேண்டும்.

இந்த வருடம் அரசு பள்ளிகளில் படிக்கும் 8500 மாணவ, மாணவிகளில் 8200 மாணவ, மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பல்வேறு முயற்சிகளில் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். இதுவரை உயர்கல்வியில் சேர்ந்தோரின் சதவீதம் 82 சதவீதத்திலிருந்து 92 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

அனைத்து பெற்றோர்களுடைய எண்ணங்களும் தன்னுடைய குழந்தைகள் நல்ல முறையில் படித்து உயர்பதவிக்கு போக வேண்டும் என்பதேயாகும். அந்த எண்ணத்தை நிறைவேற்றவே தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவிலேயே மற்ற அனைத்து மாநிலங்களிலும் குறிப்பாக பெண்களில் 100 க்கு 30 பேர் மட்டுமே உயர்கல்வியில் சேர்ந்து படித்து வருகின்றனர். ஆனால் நம் தமிழ்நாட்டில் 100 க்கு 60 பெண்கள் உயர்கல்வியில் சேர்ந்து படித்து வருகின்றனர். அதனை மேலும் 100 சதவீதமாக மாற்றுவதற்காகவே பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

அனைத்து மாணவ, மாணவிகளும் எவரையும் நம்பி இருக்காமல் தன்னுடைய சொந்த காலில் நின்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும். அங்கன்வாடி முதல் IAS வரை அனைத்து படிப்புகளையும் தமிழ்நாடு அரசு நடத்திவரும் பள்ளிகள் மற்றும் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து படித்து பயன்பெற முடியும். அனைத்து மாணவ, மாணவிகளும் நன்றாக படித்து தனக்கு பிடித்த துறையில் படித்து, பிடித்த பணியில் சேர்ந்து நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் மற்றும் உங்களுடைய அங்கீகாரத்திற்கும், நாட்டின் மேம்பாட்டிற்கும் உங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர்(பயிற்சி) மரு.ச.வினோதினி பார்த்திபன், இ.ஆ.ப., மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி ப.உஷா, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவி இயக்குநர் திருமதி ச.பிரபாவதி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் உதவி இயக்குநர் திரு.வாசன் பாபு, கல்லூரி முதல்வர்கள் மரு.லெட்சுமி, திருமதி.பேபிராணி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை)திரு.நாகேந்திரன், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு.வி.எஸ்.ஸ்டீபன் லூர்து பிரகாசம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.