Coffee with collector
செ.வெ.எண்:-26/2025
நாள்:-08.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
‘Coffee with Collector’ – டாக்டர்.இராதாகிருக்ஷ்ணன் விருது பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர்கள்/ஆசிரியர்கள் மற்றும் கற்றல்-கற்பித்தல் நிகழ்வில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 01.09.2025 வரை பத்து நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 250 மாணவ/மாணவியர் மற்றும் பிறதுறைகளைச் சார்ந்த 50 நபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று (08.09.2025) பதினொன்றாவது நிகழ்வாக டாக்டர்.இராதாகிருக்ஷ்ணன் விருது பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர்கள்/ஆசிரியர்கள் மற்றும் கற்றல்-கற்பித்தல் நிகழ்வில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடன் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தத்தமது பள்ளிகளில் தலைமையாசிரியர்கள்/ஆசிரியர்கள் மாணவ/மாணவியரின் நலன் மற்றும் முன்னேற்றம் சார்ந்து மேற்கொண்டுவரும் சிறப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார்.
காலாண்டுத் தேர்வுக்கு முன்னதாக தற்போது வழங்கப்பட்டு வரும் சிறப்புப் பயிற்சிகள், முன்தேர்வு, முன்னாள் மாணவர்களின் பங்களிப்பை பெறுதல், பள்ளி மேலாண்மைக்குழு மூலம் கல்விச்சீர் பெறுதல், கிராம சபைக் கூட்டங்களில் கலந்துகொள்ளல், திருக்குறள் சிறப்புப் பயிற்சி வகுப்பு, ஆங்கில வாசிப்புத்திறன் மேம்படுத்துதல், கலைத்திருவிழாவில் மாணவர்களின் பங்களிப்பு, மாணவ/மாணவியரின் திறமைக்கேற்ற அங்கீகாரம் வழங்குதல், மஞ்சள்பை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சிறுதானிய உணவின் முக்கியத்துவத்தை மாணவர்களிடம் எடுத்துக்கூறுதல், சிறார் திரைப்படம் உருவாக்குதல் குறித்த பயிற்சி, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் மாணவ/மாணவியரை ஈடுபடுத்துதல், உயர்கல்வியில் சேர்வதற்கான தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி வழங்குதல், மரம் நடுதல், பசுமைப் பள்ளி, மாணவ/மாணவியரை நல்வழிப்படுத்துதல், கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லல், சாரண/சாரணியர் இயக்கம், இளம்செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு பள்ளிசார் குழுக்களில் மாணவர்களை ஈடுபடுத்துதல், அவர்களின் ஆர்வம், உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் குறித்து உரிய வழிகாட்டுதல்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடல் மேற்கொண்டார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்கள் உற்சாகமுடன் தங்கள் அனுபவங்களையும், சிறப்பு முன்னெடுப்புகளையும் மாவட்ட ஆட்சியரிடம் பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி, இ.ஆ.ப., துணை ஆட்சியர் (பயிற்சி) திருமிகு.மு.ராஜேஸ்வரி சுவி, முதன்மைக் கல்வி அலுவலர் திருமிகு.ப.உக்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.