Collector Inspection -Nilakkottai Panchayat Union
செ.வெ.எண்:-73/2025
நாள்: 18.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
நிலக்கோட்டை வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், எஸ்.தும்மலப்பட்டி, தோப்புப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.09.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நிலக்கோட்டை வட்டம், எஸ்.தும்மலப்பட்டி ஊராட்சியில் ரூ.29.70 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி அலுவலக கட்டடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து எஸ்.தும்மலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் போதுமான அளவு அடிப்படை வசதிகள் அமைத்திருக்க வேண்டும் மற்றும் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் குடிநீர் வசதி வேண்டி பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தற்போதைய குடிநீர் தொட்டி சீரமைக்கப்பட்டு பின்னர் மேல்நிலைத் நீர் தேக்கத் தொட்டி அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பின்னர் கிராம நிர்வாக அலுவலகத்தை பார்வையிட்டு அதில் மராமத்து பணிகள் செய்து பராமரிக்க வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
நிலக்கோட்டை வட்டம், தோப்புப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.5.92 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மராமத்துப் பணிகளை பார்வையிட்டதுடன் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மதிய உணவினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து ரூ.14 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் தோப்புப்பட்டி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டார். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் 242 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டில் 246 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வின்போது வட்டார வளர்சி அலுவலர்கள் திரு.குமரவேல், திரு.மாணிக்கம் மற்றும் துறை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.