Close

The Hon’ble Food and Civil Supply Minister Program – (Sanarpatty)

Publish Date : 19/09/2025
.

செ.வெ.எண்:-77/2025

நாள்: 18.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.8.57 கோடி மதிப்பீட்டில் தார்சாலைகள் மற்றும் தடுப்பணை கட்டும் புதிய திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.8.57 கோடி மதிப்பீட்டில் தார்சாலைகள் மற்றும் தடுப்பணை கட்டும் புதிய திட்டபணிகளுக்கு இன்று(18.09.2025) அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெறுப்பேற்ற பின்பு பெண்களை நோக்கிதான் பல்வேறு திட்டங்களை உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக 4 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார்கள். அதில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் உங்கள் ஊருக்கோ வந்து உங்கள் ஊராட்சிக்கு 15 துறைகள் 46 சேவைகள் மூலமாக உங்களுக்கு என்னென்ன தேவைகள் மற்றும் குறைகள் இருக்கின்றதோ அவற்றை நிவர்த்தி செய்வதற்காக மனுக்கள் கொடுத்தால் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டும். நீங்கள் அரசு அலுவலகங்களை தேடி போக வேண்டியது இல்லை. அனைத்து அலுவலர்களும் உங்களை தேடி வந்துள்ளார்கள். எனவே, உங்கள் குறைகளை மனுக்களாக வழங்க வேண்டும். தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். சில மனுக்களுக்கு 45 நாட்களிலில் தீர்வு காணப்படும்.

மேலும், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். டாக்டர் கலைஞர் ஆட்சி காலத்தில் வரும்முன் காப்போம் திட்டத்தை கொண்டு வந்தார்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், அதற்கு ஏதுவாக நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். இத்திட்டத்தின்படி, அனைத்து வகையான மருத்துவக் கருவிகளும், சிறப்பு மருத்துவ நிபுணர்களும் கலந்துகொண்டு, பொதுமக்களை பரிசோதனை செய்து, யாருக்காவது நோய் கண்டறியப்பட்டால் அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படவுள்ளன. மருத்துவமனையில் உள்ள அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் இந்த முகாமிலேயே மேற்கொள்ளும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி, தங்க ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில், ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 3 முகாம்கள் வீதம் 45 முகாம்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் நடத்தப்படவுள்ளது. இந்த முகாமில் 17 சிறப்பு மருத்துத் துறைகள் உட்பட 45க்கும் மேற்பட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்படவுள்ளது

அதற்கு அடுத்தப்படியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” பயனாளிகளுக்கு குடிமைப் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்து, தாயுமானவர் திட்ட வாகனங்களின் சேவைகளை தொடங்கி வைத்துள்ளார்கள் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டிற்கே பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 20 இலட்சம் பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.

மேலும், பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள்.

மேலும், பெண்களின் நலனுக்காக நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை சுமார் 1 கோடி 16 இலட்சம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறாதவர்கள் மனுக்கள் வழங்கினால் உடனே வழங்கப்படும்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுமார் 20.00 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கலைஞர் கனவு இல்லத்திற்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 10,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தில் 2.50 இலட்சம் வீடுகளை சீரமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் அரசின் திட்டங்கள் அனைத்தும் ஜாதி, மதம், இனம் பாகுபாடு இன்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளும் சீரான வளர்ச்சி பெற வேண்டும் என எண்ணத்தில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக என்றென்றும் உறுதுணையுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

சந்தானவர்த்தினி ஆறு குடகனாற்றின் முக்கிய கிளை நதிகளில் ஒன்றாகும். இந்த ஆறு சிறுமலையின் வடக்கு சரிவில் உற்பத்தியாகி சாணார்பட்டி வட்டம், திண்டுக்கல் வட்டம் மற்றும் வேடசந்தூர் வட்டம் ஆகியவற்றின் வழியாக சென்று ஆத்துப்பட்டிக்கு அருகே குடகனாற்றில் இணைகிறது.

சந்தானவர்த்தினி ஆற்றில் வடகிழக்கு பருவமழை காலங்களில் பெறப்படும். நீரானது இப்பகுதியின் பெரும் விவசாய ஆதாரமாக உள்ளது. வடகிழக்கு பருவமழை காலங்களில் இந்த ஆற்றில் செல்லும் நீரினை சேமிக்கும் வகையிலும், மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையிலும் இவ்வாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படவுள்ளது.

அதிகபட்ச நீர் வெளியேற்றம் -147.12 க.மீ / வினாடி, தடுப்பணையின் நீளம் – 50.00 மீட்டர், தடுப்பணையின் உயரம் – 1.50 மீட்டர், மணல்போக்கி அளவு-2.40 மீX1.20 மீட்டர், கொள்ளளவு – 2.55 மில்லியன் கன அடி, இத்தடுப்பணை கட்டப்படுவதால் மேற்படி அமைவிடத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும் மற்றும் இப்பகுதியில் ஆறு சீரமைக்கப்பட்டு, ஆற்றின் படுகை மட்டம் பேணப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும், நிலத்தடி நீர்மட்டம் உயர்வினால் இப்பகுதியினை சுற்றியுள்ள 55 கிணறுகள் மற்றும் 30 ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து அவற்றால் சுமார் 350 ஏக்கர் விவசாய நிலங்கள் முழுமையாக பாசனம் பெறும் எனவும் இதன் மூலம் குடிநீர் ஆதாரம் பெருகி இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் உயரும்.

அதனை தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம், வேம்பார்பட்டி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் வேம்பார்பட்டி முதல் அய்யாபட்டி சாலை வழி மொட்டைய கவுண்டன்பட்டி,எல்லப்பட்டி வரை ரூ.3.57 கோடி மதிப்பீட்டில் 4.93 கி.மீ நிளத்திற்கு தார்சாலை அமைத்தல் பணிகள் மற்றும் திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், அய்யாபட்டி கிராமத்திற்கு அருகே சந்தானவர்த்தினி ஆற்றின் குறுக்கே ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிகளுகள் என மொத்தம் ரூ.8.57 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டபணிகளுக்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள்அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சிகளில், நத்தம் பேரூராடசி தலைவர் திரு.சிக்காந்தர்பாட்ஷா, செயற் பொறியாளர் பொதுப்பணித்துறை (நீர்வளத்துறை) திரு.பாலமுருகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் திரு.விஜயன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆண்டி அம்பலம் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.