The Hon’ble Food and Civil Supply Minister -Ungaludan Stalin – Palani
செ.வெ.எண்:-76/2025
நாள்: 18.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பழனி வட்டம், மேலக்கோட்டை ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், மேலக்கோட்டை ஊராட்சியில் இன்று (18.09.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் அத்திட்டங்களின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் தொடர்ந்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை தொடங்கி வைத்துள்ளார்கள். தமிழ்நாடு முழுவதும் 10,000 முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 360 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறையின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனை பேணும் வகையில் மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், கலைஞர் ஆட்சி காலத்தில் நோய் வருவதற்கு முன்பாகவே அதை கண்டறிந்து தீர்வு காணும் வகையில் வரும் முன் காப்போம் என்ற திட்டத்தினை கொண்டு வந்தார்கள். அதனை தொடர்ந்து ”நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் (02.08.2025) அன்று சென்னையிலிருந்து தொடங்கி வைத்தார்கள்.
இத்திட்டத்தின்படி, அனைத்து வகையான மருத்துவக் கருவிகளும், சிறப்பு மருத்துவ நிபுணர்களும் கலந்துகொண்டு, பொதுமக்களை பரிசோதனை செய்து, யாருக்காவது நோய் கண்டறியப்பட்டால் அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படவுள்ளன. மருத்துவமனையில் உள்ள அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் இந்த முகாமிலேயே மேற்கொள்ளும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி, தங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில், ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 3 முகாம்கள் வீதம் 45 முகாம்கள் இன்றிலிருந்து தொடங்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் நடத்தப்படவுள்ளது. இந்த முகாமில் 17 சிறப்பு மருத்துத் துறைகள் உட்பட 45க்கும் மேற்பட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்படவுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” சென்னையில் (12.08.2025) அன்று தொடங்கி வைத்தார்கள்.
இத்திட்டத்தின் மூலம் 70 வயதிற்கு மேல் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் நியாயவிலைக்கடைகளுக்கு வர வேண்டியது இல்லை. நியாயவிலைக்கடைகளிலிருந்து அரிசி, பருப்பு, சக்கரை, பாமாயில், கோதுமை ஆகிய பொருட்கள் வீட்டிற்கே கொண்டு வந்து வழங்கப்படும். மாதந்தோறும் வாங்கும் குடிமைப்பொருட்களை இனிமேல் மாதத்தின் இரண்டாவது வாரமான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களின் இல்லத்திற்கு கொண்டு சென்று வழங்கப்படும்.
மேலும், பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள்.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்தவுடன் நகராட்சி பகுதிகளில் ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் தினமும் வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்தப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு வராது.அந்த வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் அரசின் திட்டங்கள் அனைத்தும் ஜாதி, மதம், இனம் பாகுபாடு இன்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இன்றைய தினம் மேலக்கோட்டையில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களில் உடனடியாக தீர்வு காணப்பட்டு 4 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகள், 2 பயனாளிகளுக்கு மண்புழு படுக்கைகள், பழுதடைந்த ஊரக வீடுகள் சீரமைத்தல் 2024-2025 திட்டத்தின்கீழ் அமரபூண்டி ஊராட்சியில் 8 பயனாளிகளுக்கு ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டிலான பழுதடைந்த ஊரக வீடுகள் சீரமைக்கும் பணிகளுக்கான ஆணைகள் மற்றும் மேலக்கோட்டை ஊராட்சியில் 5 பயனாளிகளுக்கு ரூ.3.45 இலட்சம் மதிப்பீட்டிலான பழுதடைந்த ஊரக வீடுகள் சீரமைக்கும் பணிகளுக்கான நிர்வாக அனுமதியும், மற்றும் முதலமைச்சரின் வீடுகள் மறுக்கட்டுமான திட்டம் 2025-2026 கீழ் 1 பயனாளிகளுக்கு ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டிலான நிர்வாக அனுமதி ஆகிய நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், பழனி வருவாய் கோட்டாட்சியர், திரு.இரா.கண்ணன், பழனி வட்டாட்சியர் திரு.பிரசன்னா, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.வேதா, திருமதி நலினா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.