Breakfast scheme
திண்டுக்கல் மாவட்டத்தில் 1,398 பள்ளிகளில் பயிலும் சுமார் 85,557 மாணவ, மாணவிகள் காலை உணவு திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர்.
ஏழை, எளிய குழந்தைகள் ஆரோக்கியத்துடன் கல்வி பயில உன்னத திட்டத்தை செயல்படுத்திடும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அவற்றை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
இன்றைய குழந்தைகள்தான் நாளைய எதிர்கால சமுதாயம் என்பதை அறிந்து, அவர்களுக்கு கல்வி அளிக்கவும், பசியின்றி கல்வி கற்கவும், தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு வரும்போது காலை உணவு சாப்பிடாமல் வருகின்றனர் என்பதை அறிந்து, அவர்களின் வயிற்றுப்பசியை நீக்கவும், குழந்தைகள் சுறுசுறுப்பாக இருக்கவும், கல்வி கற்க ஊட்டச்சத்து மிக்க உணவுகள் அவசியம் என்பதற்காக இத்திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை 15.09.2022 அன்று மதுரையில் தொடங்கி வைத்தார்கள்.
இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை, திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15.07.2024 அன்று தொடங்கி வைத்தார்கள்.
மேலும் தமிழகத்தில் அனைத்து நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கத்தை சென்னை மயிலப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் 26.08.2025 அன்று தொடங்கி வைத்தார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்புறப் பகுதிகளில் செயல்படும் 1,153 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 58,330 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் 156 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 11,076 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில். மாநகராட்சி. நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் செயல்படும் 89 அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளிகளில் பயிலும், 16,151 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆகமொத்தம் திண்டுக்கல் மாவட்டத்தில் 1,398 பள்ளிகளில் பயிலும் சுமார் 85,557 மாணவ, மாணவிகள் காலை உணவு திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர்.
இத்திட்டத்தின்படி. பள்ளிகளில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் வெண் பொங்கலுடன் காய்கறி சாம்பார், செவ்வாய் கிழமைகளில் சேமியா கிச்சடியுடன் காய்கறி சாம்பார், புதன் கிழமைகளில் வெண் பொங்கலுடன் காய்கறி சாம்பார், வியாழக்கிழமைகளில் அரிசி ரவா உப்புமாவுடன் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமைகளில் கோதுமை ரவா கிச்சடியுடன் காய்கறி சாம்பார் ஆகியவை சமைத்து மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் பயன்பெறும் குழந்தைகளின் பெற்றோர் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த திருமதி நிர்மலா தேவி (வயது 34) அவர்கள் தெரிவித்ததாவது:-
எனது கணவர் வெளியூரில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். நானும் கூலி வேலைக்கு சென்று வருகிறேன். நானும், என் குழந்தைகளும் செட்டிநாயக்கன்பட்டியில் வசித்து வருகிறோம். எனது குழந்தைகள் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறான்.
நான் காலை 6 மணிக்கெல்லாம் வேலைக்கு சென்று விடுவேன். அதனால், எனது குழந்தைகளுக்கு காலை உணவு என்பது சரியான முறையில் செய்து கொடுக்க முடிவதில்லை. முந்தினநாள் இரவு மிஞ்சிய உணவையே எனது குழந்தைகளுக்கு கொடுப்பேன். சில நாட்கள் அவர்கள் சாப்பிடாமலேயே பள்ளிக்குச் சென்றுவிடுவர். இதனால் காலை உணவு சரியாக கிடைக்காமல் எனது குழந்தைகள் மிகவும் சோர்வாகவே இருந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தி வருவதால், எனது குழந்தைகளுக்கு பள்ளியிலேயே காலை உணவு வழங்கப்படுகிறது.
அதுவும் சத்தான உணவு வகைகள் வழங்கப்படுவதால் எனது குழந்தைகள் தற்போது ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் உள்ளனர். ஏழை குழந்தைகள் பசியின்றி கல்வி கற்க இந்த திட்டத்தை துவங்கி வைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் பயன்பெறும் குழந்தைகளின் பெற்றோர் திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்த திருமதி ராஜேஸ்வரி (வயது 37) அவர்கள் தெரிவித்ததாவது:-
என் பெயர் ராஜேஸ்வரி, நான் குடும்பத்துடன் பள்ளப்பட்டியில் வசித்து வருகிறோம். நான் கூலி வேலை செய்து வருகிறேன். காலையிலேயே பூப்பறிக்க தோட்டத்துக்கு சென்றுவிடுவேன். அதனால் பள்ளிக்கு செல்லும் என் மகனுக்கு காலை உணவு செய்து கொடுப்பதில் சிறமம் இருந்தது. சில சமயங்களில் முதல்நாள் சமைக்கிற சாப்பாட்டையே மறுநாள் காலையில் அவனுக்கு கொடுப்பேன். ஒரு சில நாள் அவன் சாப்பிடாமலேயே பள்ளிக்கு சென்றுவிடுவான். இதனால் காலை உணவு சாப்பிட்டானா இல்லையா என்பது கூட சில சமயம் தெரியாது. அவனுக்கு சரிவர உணவு கிடைக்காததது என்பது எங்களுக்கு பெரும் கவலையாக இருந்தது.
இப்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டமான காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதால் அவன் பள்ளியிலேயே காலை உணவு சாப்பிடுகிறான். 5 வகையான சத்தான உணவு வழங்கப்படுவதால் அவன் ஆரோக்கியமாக உள்ளான். அவன் நிச்சையமாக சாப்பிட்டு இருப்பான் என்ற நம்பிக்கை இருக்கும். எனவே, மாணவர்கள் பள்ளியில் வந்து காலை உணவு சாப்பிடுவதால் எங்களுக்கு மன திருப்தியாக உள்ளது. இங்கு வழங்கப்படும் உணவும் வீட்டில் செய்வது போலவே உள்ளது.
இதனால் பசியுடன் பள்ளிக்கு வரும் குழந்தைகள் பசியாறுவதுடன், அவர்கள் ஆரோக்கியத்துடன் கல்விப் பயில வழிவகை ஏற்பட்டுள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் எங்களின் கண்ணீர் துடைக்கும் திட்டம், பெற்றோர்களின் கவலை போக்கும் திட்டம். இத்திட்டத்தினை உருவாக்கி கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பெற்றோர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.
இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்கி வரும் நம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்து, காலத்தால் மாற்ற முடியாத வரலாற்று சாதனையை செய்துள்ளார்கள் என்றால் அது மிகையாகாது.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.