The Hon’ble Eduction Minister (Program)
செ.வெ.எண்:-88/2025
நாள்: 23.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் திண்டுக்கல் முத்தனம்பட்டி பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத்திறன் தேர்வு-2025 (SLAS) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் திண்டுக்கல் முத்தனம்பட்டி பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத்திறன் தேர்வு-2025 (SLAS) ஆய்வுக்கூட்டம் இன்று(23.09.2025) நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் அகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பேசியதாவது:-
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த சிறப்பான முன்னெடுப்புகளுக்கு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் பாராட்டு தெரிவித்தார். தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிச்சூழலில் சில நடைமுறைச் சிக்கல்களைச் சந்தித்தாலும், அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். மாநில அளவிலான அடைவுத் தேர்வில் திண்டுக்கல் மாவட்டம் மேம்பட்ட திறன் அடைவு பெற்றிருந்தாலும், அரசு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் சற்று பின்தங்கியுள்ளது. வரக்கூடிய பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தில் முன்னேற்றம் தேவை. மாநில அளவிலான அடைவு ஆய்வின் அடிப்படையில் தொப்பம்பட்டி, பழனி, குஜிலியம்பாறை மற்றும் நத்தம் ஒன்றியங்கள் கல்விசார் செயல்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும்.
மொழிப் பயிற்சி, மொழி ஆய்வகங்களின் பயன்பாடு உறுதி செய்யப்பட வேண்டும். பள்ளிக்கல்வித்துறை சார்ந்த மீளாய்வுக் கூட்டங்களில் பள்ளி உட்கட்டமைப்பு, ஆசிரியர் காலிப்பணியிடங்கள், இடைநின்ற மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட கூறுகளில் முக்கியமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாணவர்களிடம் கேள்வி கேட்கும் திறனை ஊக்கப்படுத்த வேண்டும். மாநில அளவிலான அடைவு ஆய்வின் அடிப்படையில் எந்தெந்த கற்றல் விளைவுகளில் கவனம் செலுத்தி மேம்படுத்த வேண்டும் என்பதனை உணர்ந்து தலைமையாசிரியர்கள் தாங்களாகவே செயல்திட்டம் வகுக்க வேண்டும். தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்கள் டெட் தேர்வு தொடர்பாக எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம், தமிழ்நாடு அரசு உரிய சட்டபூர்வமான நடவடிக்கைகளை உறுதியுடன் மேற்கொள்ளும். இது போன்ற ஆய்வுக்கூட்டங்களுக்கு வருவதன் மூலமாக ஆசிரியர்களை நேரடியாகச் சந்தித்து ஊக்கம் பெறுகிறேன். இத்தொடர் ஆய்வில் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று நடப்பது 36-ஆவது மாவட்ட ஆய்வாகும். மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் திண்டுக்கல் மாவட்ட தலைமையாசிரியர்கள் கற்றல் கற்பித்தலில் களையப்பட வேண்டிய சிறுசிறு குறைபாடுகள் குறித்து நன்கு அறிந்து, அதற்கேற்றவாறு செயல்திட்டங்கள் வகுத்து சிறப்பாகச் செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது.
இதேபோல் அனைவரும் தங்கள் ப்ளஸ், மைனஸ் அறிந்து அதற்கேற்றவாறு கற்றல் கற்பித்தல் பணியில் உரிய மாற்றங்கள் செய்து கொள்ள வேண்டும். கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு மாணவர்களின் கற்றல் இடைவெளியை முற்றிலுமாக அகற்றும் வண்ணம் ‘இல்லம் தேடிக் கல்வி’ எனும் உன்னத திட்டம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் செயல்படுத்தப்பட்டது. எண்ணும் எழுத்தும், காலை உணவுத் திட்டம், மணற்கேணி செயலி, உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள், ஸ்மார்ட் போர்டு அமைத்தல் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு உடனுக்குடன் கிடைத்திட தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. தங்கள் பள்ளி சார்ந்து பத்திரிகைகளில் வரும் செய்திகள் குறித்து தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் உடனுக்குடன் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் தொடர்ந்து திறம்பட செயல்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிரியர்களின் திறமையை அடித்துக் கொள்ள இந்தியாவிலேயே யாரும் இல்லை. அதேநேரம், தங்கள் உழைப்பு முடிவுகளில் பிரதிபலிக்க வேண்டும். எட்டாம் வகுப்பு வரை அறிவுசார் கல்வி அவசியம். தற்சமயம் CLAT, JEE உள்ளிட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்று NIIT, IIT போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுவரை 1878 தமிழக மாணவர்கள் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளனர். கல்வித்துறை சார்ந்து 70-க்கும் மேற்பட்ட திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு கல்வித்துறையில் பெருமளவில் முதலீடு செய்து வருகிறது, அதற்கான பிரதிபலனாக மாணவர்கள் நல்ல குடிமக்களாக திகழ்வதுடன் சமுதாயம் மேலும் மேம்பட உதவி புரிய வேண்டும் என மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், 2023-24 கல்வியாண்டிற்கான காமராசர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 மாணவர்களுக்கு தலா ரூ.10,000/-க்கான காசோலை மற்றும் சான்றிதழும், பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் 15 மாணவர்களுக்கு தலா ரூ.20,000/-க்கான காசோலை மற்றும் சான்றிதழும், விபத்தில் பெற்றோர்களை இழந்த 51 மாணவர்களுக்கு தலா ரூ.75,000 வைப்பீடு தொகைக்கான பத்திரங்களையும் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (மேல்நிலை பள்ளிக்கல்வி இயக்ககம்) திரு.ச.கோபிதாஸ், முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி ப.உஷா, ஒட்டன்சத்திரம் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் முதல்வர் முனைவர் வீ.சங்கர், திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) திரு.என்.நாகேந்திரன், திருமதி மா.பரிமளா, மாவட்ட கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளி) திரு.பிரிட்டோ, (தொடக்கநிலை) திரு.சண்முகநாதன், திரு.இராஜாராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.