Co optex – Diwali Sales
செ.வெ.எண்:-97/2025
நாள்:25.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.
திண்டுக்கல் விற்பனை நிலையத்தில் நடப்பு ஆண்டு விற்பனை குறியீடு ரூ.75 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
திண்டுக்கல் அண்ணா வணிக வளாக மையத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(25.09.2025) குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முதல் விற்பனையை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு அரசு கைத்தறித்துறை கிராமப்புற, வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும், ஏழை, எளிய நெசவாளர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட கைத்தறி நெசவுத் தொழிலில் பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கோ-ஆப்டெக்ஸ் என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1935-ஆம் ஆண்டு துவக்கப்பட்டு தொடர்ந்து 90 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது.
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் காஞ்சிபுரம், ஆரணி, சேலம் திருப்புவனம் பட்டு சேலைகள், கோவை மென் பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள், கைத்தறி சுங்குடி சேலைகள், காஞ்சிபுரம், செட்டிநாடு, சேலம், பரமக்குடி, திண்டுக்கல், சின்னாளப்பட்டி, அருப்புகோட்டை பருத்தி சேலைகள் மற்றும் கோவை கோரா பருத்தி சேலைகள் புதிய வடிவில் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன.
மேலும் நவீன யுக ஆடவர்களை சுவரும் விதமாக பருத்தி சட்டைகள். லினன் பருத்தி சட்டைகள். லுங்கிகள், வேட்டிகள். துண்டுகள், மகளிருக்கான கடிதார் இரகங்கள், நைட்டிகள் மற்றும் சூர்தீஸ்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்காக தருவிக்கப்பட்டுள்ளது.
கைத்தறி இரகங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு இந்த ஆண்டும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக பட்டு மற்றும் பருத்தி கைத்தறி இரகங்களுக்கு 30% சிறப்புத் தள்ளுபடி வழங்கி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 3 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கும் சேர்த்து ரூ.140 இலட்சம் தீபாவளி விற்பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் அண்ணா வணிக மைய விற்பனை நிலையத்தின் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.52.41 இலட்சம் ஆகும். தீபாவளி 2025 விற்பனை குறியீடாக ரூ.75 இலட்சம் திண்டுக்கல் அண்ணா வணிக மைய விற்பனை நிலையத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி இரகங்களை மின் வணிக வலைதளமான www.cooptex.gov.in என்ற இணையதளத்தின் மூலமும் வாடிக்கையாளர்கள் வாங்கி பயன் பெறலாம். மேலும், கோ-ஆப்டெக்ஸின் மாதாந்திர சேமிப்பு திட்டத்திலும் சேர்த்து பயன்பெற வாடிக்கையாளர்களை அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு கைத்தறி இரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கியுள்ளது. மேலும் அரசு, அரசு சார்பு நிறுவனப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கைத்தறி முன்பண திட்டத்தின் மூலமாக கைத்தறித் துணிகளுக்கு 10 மாத தவணை அடிப்படையில் வட்டியில்லா கடன் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு தள்ளுபடியினை அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் நன்கு பயன்படுத்தி இம்மாவட்டத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கைத்தறி விற்பனை குறியீட்டுத் தொகை ரூ.140 இலட்சம் என்ற இலக்கை எய்திட கோ-ஆப்டெக்கல் நிறுவனத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்கி ஏழை நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட உதவி செய்ய வேண்டும். கோஆப்டெக்ஸில் கைத்தறி துணி இரகங்களை தமிழ்நாடு வழங்கிடும் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடியில் வாங்கி ஏழை, எளிய கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திட உதவிட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இவ்விழாவில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் திரு.ஸ்டாலின், மேலாளர் (உ&ப) பொறுப்பு திருமதி S.கனிச்செல்வி, விற்பனை நிலைய மேலாளர் திரு.V.முருகன், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.