The Hon’ble Food and Civil Supply Minister – Development Works
செ.வெ.எண்:-103/2025
நாள்: 25.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் வட்டம், அரசபிள்ளைபட்டி கிராமத்தில் ரூ.9.45 கோடி மதிப்பீட்டில் நங்காஞ்சியாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் வட்டம், அரசபிள்ளைபட்டி கிராமத்தில் ரூ.9.45 கோடி மதிப்பீட்டில் நங்காஞ்சியாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிக்கு இன்று(25.09.2025) அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், அரசபிள்ளைபட்டி கிராமத்தில் மயானத்தின் அருகே ரூ.9.45 கோடி மதிப்பீட்டில் நங்காஞ்சியாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
நங்காஞ்சியாறு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பாச்சலூர் மலையில் உற்பத்தியாகி, பரப்பலாறு என்ற பெயரில் மலைகளில் பயணிக்கிறது. ஒட்டன்சத்திரம் நகரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் வடகாடு கிராமத்தில் பரப்பலாறு அணை கட்டப்பட்டுள்ளது. பரப்பலாறு அணையிலிருந்து நங்காஞ்சியாறு சுமார் 54 கி.மீ. தூரம் பயணித்து கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், வெண்கலப்பட்டி கிராமத்திற்கு அருகில் அமராவதி ஆற்றில் இணைகிறது.
நங்காஞ்சியாற்றில் வடகிழக்கு பருவமழை காலங்களில் பெறப்படும் நீரானது இப்பகுதியின் பெரும் விவசாய ஆதாரமாக உள்ளது. வடகிழக்கு பருவமழை காலங்களில் இந்த ஆற்றில் குறைந்த காலத்தில் மழைநீர் செல்லும். இக்காலத்தில் பெறப்படும் மழைநீரினை சேமிக்கும் வகையில் இவ்வாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட இருக்கிறது.
அதிகபட்ச நீர் வெளியேற்றம் -220.65 க.மீ/வினாடி, தடுப்பணையின் நீளம் – 70.00 மீட்டர், தடுப்பணையின் உயரம் – 1.20 மீட்டர், மணல்போக்கி அளவு-2.10 மீX1.20 மீட்டர், மணல் போக்கின் எண்ணிக்கை 2 எண்கள்(வலது புறம்). கொள்ளளவு – 0.80 மில்லியன் கன அடி என உத்தேசிக்கப்பட்டுள்ள தடுப்பணையானது மிதம் மிஞ்சிய நீர் பயனபாட்டு பகுதியிலும். நீர் செறிவூட்டுவதற்கு மிதமான உகந்த மண்டலத்திலும் அமைந்தள்ளதால் இத்தடுப்பணை கட்டப்படுவதால் ஒட்டன்சத்திரம் வட்டம், அரசபிள்ளைப்பட்டி கிராமத்திற்கு அருகே உள்ள நிலத்தடி நீர்மட்டம் உயரும். இப்பகுதியில் ஆறு சீரமைக்கப்பட்டு, ஆற்றின் படுகை மட்டம் பேணப்படும். மேலும், நிலத்தடி நீர்மட்டம் உயர்வினால் இப்பகுதியினை சுற்றியுள்ள 35 கிணறுகள் மற்றும் 30 ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து அவற்றால் சுமார் 734.09 ஏக்கர் விவசாய நிலங்கள் முழுமையாக பாசனம் பெறும் எனவும் இதன் மூலம் குடிநீர் ஆதாரம் பெருகி இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் உயரும்.
இப்பகுதி மக்களுக்கு குடிநீர் பிரச்சனையை தீர்பதற்காக காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்தப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு வராது. அந்த வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், பெண்களின் நலனுக்காக நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதம் ரூ.900 வரை சேமிப்பு ஏற்படுகிறது.
அதனைதொடர்ந்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் 1.16 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், தகுதியான நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தியாவில் எங்கும் செயல்படுத்தப்படாத “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை கடலூர் மாவட்டத்தில் 15.07.2025 அன்று தொடங்கி வைத்தார்கள்.
பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று அலுவலர்களை பார்க்க வேண்டுமென்றால் கால தாமதம் ஏற்படும் என்பதற்காகவும், போக்குவரத்து சிரமங்கள் உள்ளிட்ட இன்னல்களுக்கு பொதுமக்கள் ஆளாக கூடாது என்பதற்காகவும், அனைத்து அரசு அலுவலர்களும் உங்கள் வீட்டை தேடி, உங்கள் ஊரை தேடி வருகின்ற திட்டமாகும். இந்த முகாமில் வருவாய்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மின்சாரத்துறை, வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை ஆகிய 15 துறைகளை சேர்ந்த அலுவலர்கள் வந்துள்ளார்கள். சுமார் 46 சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. நீங்கள் மனுக்கள் கொடுத்தால் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காண வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவு வழங்கி உள்ளார்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுமார் 20.00 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது.
6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இந்தாண்டு 20 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 20.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 52 மாதங்களில் 3,000 நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டு புதியதாக முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்தில் மொத்தம் 65,279 குடும்ப அட்டைகள் உள்ளன. தற்போது, 100 முழு நேர நியாயவிலைக்கடைகளும், 87 பகுதி நேர நியாயவிலைக்கடைகளும் என மொத்தம் 187 நியாயவிலைக்கடைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பிரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக என்றென்றும் உறுதுணையுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், செயற் பொறியாளர் பொதுப்பணித்துறை (நீர்வளத்துறை) திரு.பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.பிரபு பாண்டியன், திரு.காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.