Gandhi Jayanti – Diwali Kadar Special Discount Sales
செ.வெ.எண்:-01/2025
நாள்:02.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் அமைந்துள்ள கதர் அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனையை துவக்கி துவக்கி வைத்தார்
.
அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் அமைந்துள்ள கதர் அங்காடியில், கதர் கிராம தொழில்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் இன்று(02.10.2025) நடைபெற்ற அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்க விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, அண்ணல் காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, குத்துவிளக்கேற்றி வைத்து, தீபாவளி சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது-
தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் கிராமப்புற கைவினைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் நூற்பாளர்களின் வாழ்க்கை தரத்திரனை உயர்த்திடவும் இவர்களின் வேலையின்மையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இவ்வாரியம் கிராமப்புற பகுதிகளில், கதர் மற்றும் கிராமத் தொழில்களை ஊக்குவித்து, அவற்றை மேம்படுத்துவதோடு, கைவினஞர்களையும் நலிவுற்ற மக்களையும் ஒருங்கிணைத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை பொருளாதார நிலையினையும் உயர்த்துவதே தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், கதர் எளிமை மற்றும் தேசப்பற்றினை வெளிப்படுத்துவதுடன், இந்திய கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் கிராமப்புற இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. கதர் துணிகள், பருத்தி மற்றும் பட்டு நூல்களைப் பயன்படுத்தி கைத்தறிகள் மூலம் கையினால் நெய்யப்படுவதாகும். மேலும், ஊரக பகுதியில் கிடைக்கின்ற மூலப்பொருட்களையும் மனித சக்தி பயன்படுத்தி வறுமையை அகற்றுவதற்கு இவ்வாரியம் கிராமத் தொழில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
குறைவான மூலத்தனத்தில் அதிக வேலைவாய்ப்பு அளிப்பது கிராமத் தொழில் திட்டங்களின் தனித்துவமான அம்சமாகும். அதன்படி வாரியமானது தச்சு மற்றும் கருமாரத் தொழில், தோல் பொருட்கள் உற்பத்தி, சோப்பு உற்பத்தி, கைமுறை காகிதம், மண்பாண்டம் மற்றும் தேனீ வளர்ப்பு ஆகிய தொழில்களின் மூலம் கிராமத் தொழில்களை மேம்படுத்தி வருகிறது.
அதன்படி தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் கதர் மற்றும் கிராமப்பொருட்கள் அனைத்து அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பிற துறைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், தமிழ்நாடு கதர் கிராமத்தொழில்கள் வாரியமானது கதர், கிராமப் பொருட்களான சோப்பு, தேன், கைமுறை காகிதம், இரும்பு மற்றும் மரச்சாமான்கள், பூஜைப்பொருட்கள், வலிநிவாரண தைலம், அகர்பத்திகள், மூலிகைப் பற்பொடி போன்ற பல்வேறு பொருட்களை சொந்த அலகுகளில் உற்பத்தி மேற்கொண்டு விற்பனை செய்து வருகிறது.
மேலும், வாரியத்தின் அனைத்து உற்பத்தி பொருட்களும் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையானதென்பதால், குக்கிராம மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயலாற்ற வேண்டுமெனில் பொது விநியோகத்திட்ட முறை மட்டுமே சிறந்தாகும். இதனால் பொதுமக்கள் மிகுந்த பயனடைவர் என்பதோடு நியாய விலைக்கடைகளும், கதர் வாரியத்தில் பணிபுரிந்து வரும் கிராமப்புற ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் நிலைத்த பாதுகாப்பினை பெறும்.
மேலும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் கதர் மற்றும் கிராமப் பொருட்கள் அரசு ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் வாங்கி பயனடைய தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் மூலம் தற்காலிக சிறப்பு விற்பனை நிலையம் அமைத்து விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது கதர் கிராமத் தொழில் வாரியத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பட்டு மற்றும் கதர் இரகங்களுக்கு ஆண்டு முழுவதும் 30% தள்ளுபடி வழங்கப்படுகிறது.
கடந்த 2024-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இம்மாவட்டத்தில் ரூ.67.00 இலட்சத்திற்கு கதர் ரகங்களை விற்பனை செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு (2025) தீபாவளி பண்டிகை முன்னிட்டு இம்மாவட்டத்திற்கு ரூ.60.00 இலட்சம் மதிப்புள்ள கதர் இரகங்களை விற்பனை செய்திட தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கதர் விற்பனையை ஊக்குப்படுத்துவதற்கும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி கீழ்க்குறிப்பிட்டுள்ளவாறு மத்திய, மாநில அரசுகளால் ஆண்டு முழுவதும் சிறப்புத் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது. பருத்தி கதர், பாலியஸ்டர், பட்டு ரகங்களுக்கு 30% தள்ளுபடி. இந்த விற்பனை இலக்கினை முழுமையாக எய்திடும் பொருட்டு அனைத்து அரசு அலுவலர்களுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்ற பணியாளர்களுக்கும் 10-மாத தவணை முறையில் எளிய கடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் செயல்படும் அனைத்து கதர் அங்காடிகள்( KHADI KRAFT) மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் துவக்கப்பட்டுள்ள தற்காலிக கதர் விற்பனை நிலையங்களில் பெருமளவில் கதர் ரகங்கள் வாங்குவதன் மூலம் கிராமப்புற ஏழை எளிய நூற்போர்கள் மற்றும் நெய்வோர்களின் வாழ்வில் ஒளியேற்றிடும்படி அரசுப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களை கதர் கிராமத் தொழில் வாரியத்தின் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் உதவி இயக்குநர் திரு.கா.அருள்செல்வன், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.ஜெயபிரகாஷ் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.