Close

C.M Relief Fund

Publish Date : 06/10/2025
.

செ.வெ.எண்:-04/2025

நாள்: 04.10.2025

திண்டுக்கல் மாவட்டம்

நிறைந்தது மனம்

பராமரிக்க இயலாத இரண்டு பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2.00 இலட்சத்திற்கான ஆணை மற்றும் அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.2000/- தொகையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கிடும் ”அன்புக்கரங்கள்” திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.

பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர ”அன்புக்கரங்கள்” என்ற திட்டத்தின் மூலம் மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 15.09.2025 அன்று திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் ”அன்புக்கரங்கள்” திட்டத்தை தொடங்கி வைத்து, முதற்கட்டமாக 191 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000/- உதவித் தொகையினை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பராமரிக்க இயலாத இரண்டு பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2.00 இலட்சத்திற்கான நிவாரண தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், வெள்ளக்கவி கிராமத்தைச் சேர்ந்த திரு.ராம்குமார் என்பவரின் மனைவி திருமதி மணிமேகலை (வயது 32) என்பவர் 12.03.2025 அன்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும், அவரது கணவர் திரு.ராம்குமார் என்பவர் உடலுழைப்பு செய்ய இயலாத நிலையில் 60 சதவீத மாற்றுத் திறனாளியாக இருப்பதாலும், அவரது இரண்டு குழந்தைகள் செல்வி.பூவரசி (வயது 14) மற்றும் செல்வி பூமிகா (வயது 8) ஆகிய இருவரையும் பராமரிக்க இயலாத நிலையில் இருப்பதாலும், உயிரிழந்த திருமதி மணிமேகலை அவர்களின் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் தலா ரூ.2.00 இலட்சம் வீதம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வைப்பீடு செய்திட உத்திரவிடப்பட்டுள்ளது. மேலும் அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு மாதம் ரூ.2000/- வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்த திருமதி மணிமேகலை என்பவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பரிந்துரை செய்துள்ளார்.

ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ள நிவாரணத் தொகையினை உயிரிழந்த திருமதி மணிமேகலை அவர்களின் இரண்டு பெண் குழந்தைகளின் பெயரில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம், சென்னை-35ல் வைப்பீடு செய்யுவும், மேற்படி குழந்தைகள் முறையே பருவ வயதை அடைந்தவுடன் வைப்பீடுத் தொகையினை வட்டியுடன் சேர்த்து அவர்களுக்கு வழங்கவும் அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு மாதம் ரூ.2000/- வழங்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனடைந்த பயனாளிகள் தெரிவிக்கையில்

என்னுடைய பெயர் பூவரசி, நாங்கள் வெள்ளைக்கவி கிராமத்தில் வசித்து வருகிறோம். நான் பத்தாம் வகுப்பு படித்து வருகிறேன். என்னுடைய அம்மா மணிமேகலை திடீரென்று உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். என்னுடைய அப்பா பெயர் ராம்குமார். அவர் 60 சதவீத மாற்றுத்திறனாளி நபர். எனவே அவரால் வேலைக்கு செல்ல இயலாது. எனக்கு ஜெயா என்ற பாட்டியும், பூமிகா என்ற தங்கையும் உள்ளார்கள். என்னுடைய அப்பா மற்றும் எங்கள் இருவரையும் என்னுடைய பாட்டி பாராமரித்து வருகிறார். எங்கள் இருவரையும் என்னுடைய பாட்டி தான் கூலி வேலை செய்து கஷ்டப்பட்டு படிக்க வைத்து வளர்த்து வருகிறார். தமிழ்நாடு அரசு எங்களுக்கு வழங்கிய இந்த ரூ.2.00 இலட்சம் வைப்பீட்டுத் தொகை எங்களுடைய மேற்படிப்பு செலவிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் எங்களுக்கு மாதம் வழங்கப்படும் ரூ.2000/- தொகை எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எங்களுக்கு உதவி செய்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய பெயர் ஜெயா. எனக்கு பூவரசி மற்றும் பூமிகா என்ற இரண்டு பேத்திகள் உள்ளார்கள். அவர்களின் அம்மா திடீரென உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். அவர்களின் அப்பா மாற்றுத்திறனாளி என்பதால் அவரால் சரிவர வேலை செய்ய இயலாது. எனவே அவரையும் மற்றும் என்னுடைய இரண்டு பேத்திகளையும் நான் தான் பராமரித்து வருகிறேன். நான் வெள்ளைக்கவி கிராமத்தில் கூலி வேலை செய்து வருகிறேன். என்னுடைய மூத்த பேத்தி 10-ஆம் வகுப்பு மற்றும் இளைய பேத்தி 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார்கள். அவர்கள் இருவரையும் நான் தான் கூலி வேலை பார்த்து படிக்க வைத்து வருகிறேன். அவர்களின் எதிர்கால படிப்பு செலவிற்கு நான் சம்பாதிக்கும் பணம் போதுமானதாக இருக்காது. தற்பொழுது தமிழ்நாடு அரசு கொடுத்து உதவிய ரூ.2.00 இலட்சம் வைப்பீட்டுத் தொகை அவர்கள் பருவ வயதை அடைந்தவுடன் வட்டியுடன் எடுத்துக் கொள்வதற்கு வாய்ப்பு உள்ளதால் அந்த தொகையினை நல்ல முறையில் அவர்களின் எதிர்கால படிப்பிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளேன். மேலும் என்னுடைய பேத்திகளுக்கு அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதம் ரூ.2000/- அவர்களின் பராமரிப்பு செலவிற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எங்களுக்கு இந்த உதவி செய்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.