The Hon’ble Food and Civil Supply Minister -Oddanchatram- Thoppampatty
செ.வெ.எண்:-06/2025
நாள்:-06.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், தொப்பம்பட்டி ஊராட்சியில் ரூ.1.99 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.11.41 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், தொப்பம்பட்டி ஊராட்சியில் ரூ.1.99 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.11.41 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிக்கு இன்று (06.10.2025) அடிக்கல் நாட்டினார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மேல்கரைப்பட்டி நால்ரோட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.12.67 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை, ராஜம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.9.32 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை, முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி குமாரக்கவுண்டன்புதூரில் பொதுப் பணித்துறையின்கீழ் ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம், மாநில நிதிக்குழு மான்யத்தின்கீழ் ரூ.22.00 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் மேற்கு பகுதி முதல் தெற்கு பகுதி வரை கட்டப்பட்ட சுற்றுச்சுவர், மாநில நிதிக்குழு மான்யத்தின்கீழ் ரூ.19.65 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் வடக்கு பகுதி முதல் கிழக்கு பகுதி வரை கட்டப்பட்ட சுற்றுச்சுவர், கோவிலம்மாபட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.9.97 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை, கந்தப்பகவுண்டன் வலசில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.12.67 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை, கொத்தயம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.12.67 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை என மொத்தம் ரூ.1.99 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
மேலும், தாளையூத்து – கள்ளிமந்தையம் சாலை – பனம்பட்டி பிரிவு பெருமாள்கோவில் முதல் நாச்சியப்பக்கவுண்டன்வலசு சாலை வரை ரூ.46.98 இலட்சம் மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்தும் பணி, முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி குமாரக்கவுண்டன்புதூரில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.75.00 இலட்சம் மதிப்பீட்டில் உணவுக்கூடம் அமைக்கும் பணி, முத்துநாயக்கன்பட்டி வயலூர் – கடத்தூர் பஸ் ஸ்டாப் முதல் மேற்கு மிடப்பாடி குமாரபாளையம் சாலை வரை சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.43.80 இலட்சம் மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்தும் பணி, கொழுமங்கங்கொண்டான் – முத்துநாயக்கன்பட்டி சாலை சின்னப்பன் தோட்டம் முதல் குண்டுப்பாறை வரை ரூ.36.63 இலட்சம் மதிப்பீட்டிலும், குடுண்டுப்பாறை முதல் மின் அலுவலகம் வரை ரூ.77.68 இலட்சம் மதிப்பீட்டிலும், மாரிமுத்து தோட்டம் முதல் மின் அலுவலகம் கொழுமங்கொண்டான், பேச்சிநாயக்கனூர் சாலை வரை ரூ.58.22 இலட்சம் மதிப்பீட்டிலும் முதல்வரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் சாலைகள் தரம் உயர்த்தும் பணிகள், புஷ்பத்தூர் அனுராகவி மில் முதல் நல்லூர் விநாயகர் கோவில் வரை சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.65.29 இலட்சம் மதிப்பீட்டில் சாலைகள் தரம் உயர்த்தும் பணி, மிடப்பாடி சாலை முதல் போதுப்பட்டி வரை சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.51.76 இலட்சம் மதிப்பீட்டில் சாலைகள் தரம் உயர்த்தும் பணி, மிடப்பாடி ஆதிதிராவிடர் காலனி மயானம் முதல் புஷ்பத்தூர் மிடப்பாடி சாலை வழியாக கற்பக விநாயகர் பேப்பர் மில் வரை சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.37.55 இலட்சம் மதிப்பீட்டில் சாலைகள் தரம் உயர்த்தும் பணி, மிடப்பாடி கே.எஸ்.இ சாலை ராஜேந்திரன் தோட்டம் முதல் தெற்கு தங்கராஜ் தோட்டம் வரை முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.34.39 இலட்சம் மதிப்பீட்டில் சாலைகள் தரம் உயர்த்தும் பணிகள், மிடப்பாடி – வன்னியர்வலசு சாலை முதல் வன்னியர்வலசு சாமிநாதபுரம் சாலை வரை ரூ.55.30 இலட்சம் மதிப்பீட்டில் சாலைகள் தரம் உயர்த்தும் பணி, தாழையூத்து அரசு மேல்நிலைப்பள்ளயில் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.74.22 இலட்சம் மதிப்பீட்டில் மூன்று வகுப்பறைகள் கட்டிடம் கட்டும் பணிகள், கோவிலம்மாபட்டி – சின்னகன்னிமார் கோவில் முதல் கொழுமங்கொண்டான் சாலை வரை சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.46.70 இலட்சம் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கும் பணி, போடுவார்பட்டி – கொங்கப்பட்டி சாலை முதல் சின்னவல்லக்குண்டாபுரம் சாலை வரை நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.1.83 கோடி மதிப்பீட்டில் தார்சாலை தரம் உயர்த்தும் பணி, போடுவார்பட்டி ஆதிதிராவிடர் காலனி சாலை ரூ.38.10 இலட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி, கொத்தயம் – போடுவார்பட்டி சாலை முதல் சின்னவல்லக்குண்டாபுரம் சாலை வரை முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.30.20 மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி, 16 புதூர் முதல் பெரியகோட்டை சாலை வரை சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.72.71 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி, கூத்தம்பூண்யானவலசு மெயின்ரோடு முதல் பெருமாள்மலை வரை முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.21.50 இலட்சம் மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்தும் பணி, வல்லக்குண்டாபுரம் – விராகிரிக்கோட்டை சாலை வரை முதல்வரின் கிராமச்சாலை மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.42.97 இலட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி, கூத்தம்பூண்டியான்வலசு முதல் மேற்கு தீர்த்தாக்கவுண்டன்வலசு சாலை வரை ரூ.49.70 இலட்சம் மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்தும் பணிகள் என மொத்தம் ரூ.11.41 கோடி மதிப்பிட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 20.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 52 மாதங்களில் 3,000 நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டு புதியதாக முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்தில் மொத்தம் 65,279 குடும்ப அட்டைகள் உள்ளன. தற்போது, 100 முழு நேர நியாயவிலைக்கடைகளும், 87 பகுதி நேர நியாயவிலைக்கடைகளும் என மொத்தம் 187 நியாயவிலைக்கடைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பிரிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் நலனுக்காக நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதம் ரூ.900 வரை சேமிப்பு ஏற்படுகிறது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் 1.16 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், தகுதியான நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 360 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறையின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனை பேணும் வகையில் மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுமார் 18.00 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது.
ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் சொந்தக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. விருப்பாட்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்திற்கு ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் குளிர்சாதன வசதியுடன் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவிகள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். எனவே, இப்பயிற்சி மையத்தினை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னை அடையாறில் உள்ள அண்ணா இன்ஸ்டிடியூட்டுக்கு அடுத்தபடியாக காளாஞ்சிப்பட்டி மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தொப்பம்பட்டியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும், ஒட்டன்சத்திரம் மற்றும் கேதையுறும்பு ஆகிய பகுதியில் தலா ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 2 இலட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் 20 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி கொடுக்கப்படவுள்ளது.
பழனியில் 9 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனை புதிதாக கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது. ரூ.70 கோடி மதிப்பீட்டில் அனைத்து வகையான சிகிச்சைகளும் பொதுமக்கள் பெறும் வகையில் மிகப்பெரிய அளவில் அரசு தலைமை மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. எனவே பழனியில் வசிக்கும் கிராமப்புற மக்கள் உயர் சிகிச்சைக்காக கோவை, மதுரை, திண்டுக்கல் போன்ற ஊர்களில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதில்லை. பழனியிலேயே அனைத்து வகையான சிகிச்சைகளும் பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளது. இப்படி எண்ணற்ற திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு கலைஞர் கனவு இல்லத்திற்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 10,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தில் 2.50 இலட்சம் வீடுகளை சீரமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்திலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேல்கரைப்பட்டி ஊராட்சியில் ரூ.28 கோடி மதிப்பீட்டில் 28.5 கி.மீ தொலைவில் ஊராட்சி ஒன்றிய சாலைகளை நெடுஞ்சாலைத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை 7 பாலங்கள் கட்டப்பட்டு உள்ளது. இனிவரும் காலங்களில் 15 பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. பொருளுர் பகுதியில் 2 பாலங்கள் கட்ட அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. ஆண்டிநாயக்கனூரில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது. 234 தொகுதிகளில் ஒட்டன்சத்திரத்தில் தான் அதிகமான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு தற்பொழுது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 3 விதிவிலக்குகளை அறிவித்துள்ளார்கள். தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் பெற்ற பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் முதியோர் உதவித்தொகை போன்ற அரசின் உதவித்தொகை பெறும் பெண்கள் குடும்பத்தைச் சார்ந்தோர்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்கள்.
தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” தொடங்கி வைத்துள்ளார்கள். இத்திட்டத்தின் மூலம் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டிற்கே பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 20 இலட்சம் பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.
மேலும், டாக்டர் கலைஞர் ஆட்சி காலத்தில் வரும்முன் காப்போம் திட்டத்தை கொண்டு வந்தார்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், அதற்கு ஏதுவாக நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். இத்திட்டத்தின்படி, அனைத்து வகையான மருத்துவக் கருவிகளும், சிறப்பு மருத்துவ நிபுணர்களும் கலந்துகொண்டு, பொதுமக்களை பரிசோதனை செய்து, யாருக்காவது நோய் கண்டறியப்பட்டால் அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படவுள்ளன.
பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள்.
பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக என்றென்றும் உறுதுணையுடன் இருக்க வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.ஜி.ட்டி.ஸ்ரீ ராகவ் பாலாஜி, தனி வட்டாட்சியர் (குடிமை பொருள்) திருமதி லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி தாஹிரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.