The Hon’ble Food and Civil Supply Minister -Thoppampatty ( Deepavali Wishes)
செ.வெ.எண்:-49/2025
நாள்:-18.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தீபாவளி திருநாளை முன்னிட்டு கீரனூர் பேரூராட்சி மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த 744 தூய்மைப் பணியாளர்களுக்கு இனிப்புகள், புத்தாடைகள் மற்றும் மளிகைப்பொருட்களை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் இன்று(18.10.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு கீரனூர் பேரூராட்சி பகுதிகளை சேர்ந்த 36 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த 708 தூய்மைப் பணியாளர்கள் என மொத்தம் 744 தூய்மைப் பணியாளர்களுக்கு இனிப்புகள், புத்தாடைகள் மற்றும் மளிகைப்பொருட்களை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
தூய்மைப்பணியாளர்கள் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் வெயில், மழை என்று பாராமல் பணியாற்றி வருகின்றார்கள். உங்கள் பணி மிகவும் போற்றுதலுக்குரியது.
பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழியில் மக்களுக்கு என்னென்ன திட்டங்களை செயல்படுத்த நினைத்தார்களே அந்த திட்டங்களை எல்லாம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி இந்தியாவிற்கே ஒரு எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில் எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்தப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு வராது. அந்த வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
பெண்களின் நலனுக்காக நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதம் ரூ.900 வரை சேமிப்பு ஏற்படுகிறது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் 1.16 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், தகுதியான நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 360 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறையின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். தகுதியான அனைத்து நபர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். தற்போது, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விதிமுறைகளில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்கள் அறிந்து, தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுமார் 18.00 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.
மேலும், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கை 34 சதவீதம் உயர்ந்துள்ளது. இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.
கல்வி மேம்பாட்டிற்காக இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகளவு மாணவ, மாணவிகள் உயர்கல்வி படித்து வருகின்றனர்.
நடப்பாண்டு 20 இலட்சம் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். விவசாயிகளுக்கு 2 இலட்சம் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் வழங்கப்படவுள்ளது.
ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் சொந்தக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக்கல்லுாரி மாணவிகளுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு மற்றும் இரவு உணவு பழனி திருக்கோயில் சார்பில் வழங்கப்படுகிறது.
விருப்பாட்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்திற்கு ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் தரமான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையத்தில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு மாத உதவித்தொகை ரூபாய் 750/- தமிழ்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூபாய் 1000 உரிமைத்தொகை, ஆக மொத்தமாக மாதந்தோறும் ரூபாய் 1750/- வங்கிக் கணக்கில் வாயிலாக வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 8 இலட்சம் கலைஞர் கனவு இல்லம் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கலைஞர் கனவு இல்லத்திற்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 10,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தில் 2.50 இலட்சம் வீடுகளை சீரமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்திலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தொப்பம்பட்டியில் ரூ.4 கோடி மதிப்பீட்டிலும், கீரனூரில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலும் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. மேலும், கீரனூரில் ரூ.12 கோடி மதிப்பீட்டிலும், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.443 கோடி மதிப்பீட்டிலும் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் குளிர்சாதன வசதியுடன் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவிகள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். எனவே, இப்பயிற்சி மையத்தினை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னை அடையாறில் உள்ள அண்ணா இன்ஸ்டிடியூட்டுக்கு அடுத்தபடியாக காளாஞ்சிப்பட்டி மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தொப்பம்பட்டியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும், ஒட்டன்சத்திரம் மற்றும் கேதையுறும்பு ஆகிய பகுதியில் தலா ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் இதுவரை 21.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 52 மாதங்களில் 3,000 நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டு புதியதாக முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள்.
எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் அரசின் திட்டங்கள் அனைத்தும் ஜாதி, மதம், இனம் பாகுபாடு இன்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளும் சீரான வளர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக என்றென்றும் உறுதுணையுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) திரு.பிரபாகரன், பழனி வட்டாட்சியர் திரு.பிரசன்னா, வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி தாஹிரா, திரு.குமரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.