Agri Grievance Day Petition
செ.வெ.எண்: 57/2025
நாள்: 24.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்,மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் இன்று (24.10.2025) நடைபெற்றது.
இன்றையக் கூட்டத்தில், ஒட்டன்சத்திரம் பகுதியிலுள்ள சின்னக்குளம் தூர்வாரப்பட வேண்டும். மேலும், குளத்தில் கழிவுநீர் கலக்கப்படுவதால் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பழனி வட்டம், ராஜம்பட்டி சாலையோரப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை அகற்றி சாலை வசதிகளை மேம்படுத்திட வேண்டும். தும்மலப்பட்டி பகுதியிலுள்ள மஞ்சளாறு அணையின் உயரத்தை 150 அடி உயர்த்தி கட்டப்பட வேண்டும். அணையின் உயரத்தை அதிகரிப்பதன் மூலம் பெறப்படும் தண்ணீரை அப்பகுதியிலுள்ள விவசாயிகளின் பாசனத்திற்கு பயன்படுத்தி மகசூலை அதிகரித்திட ஏதுவாக இருக்கும். மேலும், சத்திரப்பட்டி பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் அருகில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, தேங்கியுள்ள கழிவுநீரினை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோபால்பட்டி பகுதியில் உள்ள மந்தைக்குளத்தினை தூர்வாரப்பட வேண்டும். மேலும், ஒட்டன்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள காய்கறி மார்க்கெட்டிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அப்பகுதியின் வழியாக பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் கலந்து குடிநீர் மாசுபடுவதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. ஒட்டன்சத்திரம் மலைப்பகுதிகளில் விவசாயிகள் தோதகத்தி மரங்கள் அதிகளவில் விவசாயம் செய்துள்ளனர். எனவே, விவசாயிகளுக்கு அம்மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட வன அலுவலர் அவர்கள் அனுமதி அளிக்க வேண்டும். சடையங்குளம் கரையோரப் பகுதிகளில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.ஆத்தூர் சுரைக்காய் பட்டி பகுதிகளில் விவசாயிகள் பயன்படுத்தப்படும் வண்டிப்பதையினை சீரமைத்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகள் 55 மனுக்கள் அளித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் விவசாயத்தை மேம்படுத்துவதற்காகவும், விவசாயிகளின் நலனை கருத்திற்கொண்டும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றவதற்காகவும், அவர்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண்பதற்காகவும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 44 மனுக்கள் பெறப்பட்டதில் 25 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் பாலாறு பொருந்தலாறு அணை (மொத்த உயரம் 65 அடி) நீர்மட்டம் 39.11 அடி, பரப்பலாறு அணை (மொத்த உயரம் 90 அடி) நீர்மட்டம் 65.05 அடி, வரதமாநதி அணை (மொத்த உயரம் 66.47 அடி) நீர்மட்டம் 66.47 அடி, குதிரையாறு அணை (மொத்த உயரம் 79.99 அடி) நீர்மட்டம் 55.17 அடி, குடகனாறு அணை (மொத்த உயரம் 27.07 அடி) நீர்மட்டம் 18.21 அடி, நங்காஞ்சியாறு அணை (மொத்த உயரம் 39.37 அடி) நீர்மட்டம் 23.69 அடி என்ற அளவில் நீர்மட்டம் உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில், 2025-ஆம் ஆண்டு குளிர் பருவகாலமான ஜனவரி முதல் பிப்ரவரி வரை சராசரியாக 36.12 மி.மீ மழையளவும், கோடை பருவகாலமான மார்ச் முதல் மே வரை சராசரியாக 182.75 மி.மீ மழையளவும், தென்மேற்கு பருவகாலமான ஜுன் முதல் செப்டம்பர் வரை சராசரியாக 118.62 மி.மீ மழையளவும் பொழிந்துள்ளது. வடகிழக்கு பருவகாலமான அக்டோபர் மாதத்தில் 189.10 மி.மீ மழையளவு பொழியும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 22.10.2025-ஆம் தேதி வரை 111.63 மி.மீ மழையளவு பொழிந்துள்ளது.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் 01.01.2025 முதல் 31.10.2025 வரை மொத்தம் 607.2 மி.மீ மழையளவு பொழியும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 01.01.2025 முதல் 22.10.2025 வரை 449.12 மி.மீ மழையளவு மட்டுமே பொழிந்துள்ளது. எனவே, இயல்பான மழையளவைக் காட்டிலும் குறைவான மழையளவே பொழிந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 01.04.2025 முதல் 22.10.2025 வரை யூரியா உரம் விநியோகம் 4735 மெ.டன், இருப்பு 2299 மெ.டன், டிஏபி விநியோகம் 2158 மெ.டன், இருப்பு 2222 மெ.டன், பொட்டாஷ் விநியோகம் 2950 மெ.டன், இருப்பு 1119 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் விநியோகம் 1055 மெ.டன், இருப்பு 837 மெ.டன், காம்ப்ளக்ஸ் விநியோகம் 2376 மெ.டன், இருப்பு 5402 மெ.டன், அம்மோனியம் சல்பேட் மற்றும் அம்மோனியம் குளோரைடு விநியோகம் 376 மெ.டன், இருப்பு 204 மெ.டன், கலப்பு உரங்கள் விநியோகம் 1237 மெ.டன், இருப்பு 127 மெ.டன் என மொத்தம் 14,887 மெ.டன் உரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 12,210 மெ.டன் உரம் இருப்பு உள்ளன. அதேபோல், விதை உள்ளிட்ட இடுபொருட்கள் தேவையான அளவு இருப்பு உள்ளன. எனவே, விவசாயிகள் அரசின் மூலம் வழங்கப்பட்டு வரும் உரங்களை பெற்று பயனபெறலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ராபி பருவ காப்பீடு திட்டத்தின் கீழ், விவசாயிகள் இணைந்து விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என்ற வகையில், திண்டுக்கல் மாவட்டத்திற்கு பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள SBI General Insurance நிறுவனத்தின் மூலமாக பிரச்சார வாகனத்தை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, இன்றை தினம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் தெரு நாய்க்கடி நிகழ்வுகாளல் இறந்த 8 கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.2.78 இலட்சம் இழப்பீட்டு தொகையை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில், இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) திரு.அ.பாண்டியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.நாகேந்திரன், இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) மரு.பாபு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) திரு.பாலமுருகன், வேளாண்மைத் துணை இயக்குநர் (மத்திய திட்டம்) திருமதி.ராஜேஸ்வரி, வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) திருமதி.ராஜேஸ்வரி அவர்கள் ஆகியோர் உட்பட துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.