DINDIGUL CORPORATION
செ.வெ.எண்:-58/2025
நாள்:-24.10.2025
பத்திரிகை செய்தி
அரசாணை எண். 324 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள். 17.10.2025-ன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் மாநகராட்சி, கொடைக்கானல், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் நகராட்சிகளில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் / நகராட்சி மன்ற உறுப்பினர்கள் தலைமையில், பொது மக்கள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் பங்கேற்புடன் அனைத்து வார்டுகளிலும் சிறப்பு வார்டு கூட்டங்கள் வரும் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
வார்டுகள் தோறும் நடைபெறும் சிறப்பு வார்டு கூட்டங்களில் பொது மக்கள் கலந்து கொண்டு, தங்களது வார்டு பகுதிகளின் அடிப்படை வசதிகளான குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலைகள், பூங்காக்கள், நீர் ஆதாரங்கள், மழை நீர் சேகரிப்பு அமைப்புகள், மாநகராட்சி / நகராட்சி பள்ளிக் கட்டிடங்கள் பராமரிப்பு, மாநகராட்சி / நகராட்சி பகுதிகளை பசுமையாக்கும் வகையில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு செய்தல், மழை நீர் வடிகால்கள் தூர் வாருதல் / பராமரிப்பு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாண்புமிகு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதித்தல் போன்ற மேம்படுத்தும் பணிகள் ஏதேனும் இருப்பின் மேற்படி சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வார்டு பகுதி பொது மக்கள் / பொது நலச் சங்கத்தினரால் தெரிவிக்கப்படும் பிரதான மூன்று கோரிக்கைகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே, சம்பந்தப்பட்ட வார்டுகளில் நடைபெறும் மேற்படி சிறப்பு கூட்டங்களில் வார்டு பகுதிகளில் உள்ள பொதுமக்கள், குடியிருப்போர் நலச் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டு பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.