Close

TOURISM DEPARTMENT

Publish Date : 27/10/2025

செ.வெ.எண்:-63/2025

நாள்:-25.10.2025

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிகை செய்தி

சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் நோக்கில் திண்டுக்கல் மாவட்டம், புல்லாவெளி அருவி மற்றும் ஒட்டன்சத்திரம்-இடையக்கோட்டை நங்காஞ்சியாறு அணைப்பகுதிகளில் பல்வேறு வகையான சுற்றுலா வளர்ச்சிப்பணிகள் செய்திடும் பொருட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் 13.10.2025-அன்று தலைமைச் செயலகத்தில், ரூ.4.8 கோடி மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு வளர்ச்சிப் பணிகள் நடைப்பெற்று வருகிறது. மேலும், சிறுமலைப்பகுதியில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டிலான சுற்றுலா மேம்பாட்டு வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக கொடைக்கானலில் புதுவரவாக பெப்பர் அருவியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது.

கொடைக்கானல் வட்டம், வில்பட்டி ஊராட்சியில் பேத்துப்பாறை குடியிருப்பு பகுதி மற்றும் ஐந்து வீடு குடியிருப்பு பகுதியில் காணப்படும் ஐந்து வீடு அருவி மற்றும் அரசால் அனுமதிக்கப்படாத வன அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிடுவதற்காகவும், குளிப்பதற்காகவும் சென்று பலர் உயிரிழந்துள்ள நிலையில், அந்த அருவிகள் அனைத்தும் தற்காலிகமாக சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினால் தடைசெய்யப்பட்டப் பகுதியாக அறிவிக்கப்படுகிறது.

வனத்துறை மற்றும் வருவாய்த்துறை வசமுள்ள அரசால் அனுமதிக்கப்படாத அருவிகளுக்குச் சென்று பார்வையிட மற்றும் குளிப்பதற்கு முற்படும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் மற்றும் அந்த அருவிகளுக்கு அழைத்துச் செல்லும் சுற்றுலா வழிகாட்டிகள் மீது காவல்துறையின் மூலம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கப்படுகிறது. மேலும் வருவாய்த்துறை, வனத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள் இதனைக் கண்காணித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.