Election Meeting
செ.வெ.எண்:-74/2025
நாள்:30.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (30.10.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது;-
இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள (Special Intensive Revision) 27.10.2025-அன்று அறிவித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே 1951 முதல் 2004 வரை 8 முறை சிறப்பு தீவிர திருத்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக 2002-2004 காலகட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தமானது நடைபெற்றது. இதற்கிடையில் வாக்காளர் பட்டியலில் தொடர்ச்சியான இடமாற்றம், ஒரே வாக்காளர் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பது, இறந்த வாக்காளர்கள் நீக்கப்படாதது மற்றும் வெளி நாட்டவர்களின் தவறான சேர்ப்பு ஆகிய காரணங்களால் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்திய தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர திருத்தமானது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியின் முதல் பணியாக வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் தற்போதைய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் தனித்துவமான கணக்கெடுப்பு படிவங்கள் (Enumaraition Forms) வருகின்ற 04.11.2025 முதல் 04.12.2025 வரையிலாக காலத்தில் வீடு வீடாக சென்று வழங்கவுள்ளனர். இந்த கணக்கெடுப்பு படிவத்தில் தற்போதைய வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் பெயர் மற்றும் தேவையான விபரங்களைக் கொண்டிருக்கும்.
வாக்காளர் அல்லது அவரது உறவினர்களின் பெயரை 2002–ஆம் ஆண்டில் நடைபெற்ற கடைசி சிறப்பு தீவிர திருத்த பட்டியலில் உள்ள பெயருடன் இணைத்து சரிபார்த்து தேவையான விபரங்களை படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த பணிக்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தேவையான உதவிகள் செய்வார்கள். மேலும், வாக்காளர்களும் முந்தைய சிறப்பு தீவிர திருத்த தரவினை பெறுவதற்கு இந்திய தேர்தல் ஆணைய தரவுதளத்தினை (https:// voters,eci.gov.in) அணுகலாம்.
கணக்கெடுப்பின்போது புதிதாக வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கக் கோருபவர்களுக்கு படிவம்-6 மற்றும் அதற்கான உறுதி மொழி படிவத்தினை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வழங்கப்படும். மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கெடுப்பு படிவத்தினை நிரப்ப உதவுவார்கள். படிவங்களை பூர்த்தி செய்து தவறாது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்க வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அப்படிவத்தினை சேகரித்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலருக்கு சமர்பிப்பார்.
வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவம் தவிர, எந்தவொரு ஆவணங்களும் கணக்கெடுப்பு படிவத்துடன் வழங்க வேண்டியதில்லை. வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தது மூன்று முறை சென்று சரிபார்ப்பார். இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவு 326-ன்படி வாக்காளராக சேர்ப்பதற்கு இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். குறைந்தது 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியில் வழக்கமாக வசிப்பவராக இருக்க வேண்டும் மற்றும் எந்த சட்டத்தின்படியும் தகுதி நீக்கம் செய்யப்பட்டவராக இருத்தல் கூடாது.
கணக்கெடுப்பு பணியின்போது கணக்கெடுப்பு படிவங்கள் பெறப்பட்ட அனைத்து வாக்காளர்களின் பெயர்களை வரைவு வாக்காளர் பட்டியலில் (Draft Electoral Roll) சேர்க்கப்படும். கடந்த சிறப்பு தீவிர திருத்த பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத மற்றும் இணைக்கப்படாத வாக்காளர்களுக்கு அறிவிப்பு (Notice) வழங்கப்படும். அவ்வாறு அறிவிப்பு வழங்கிய இனங்களுக்கு தகுதியின் அடிப்படையில் விசாரித்து, அவர்களின் பெயர்களை இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது அல்லது நீக்கம் செய்வது குறித்து வாக்காளர் பதிவு அலுவலர்/ உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மூலம் முடிவு செய்யப்படும். மேலும், எந்த தகுதியான குடிமகனும் தவற விடப்படக்கூடாது என உறுதி செய்தும், தகுதியற்ற நபர்களை இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டாது என்பதை உறுதிபடுத்தப்படும்.
வாக்காளர் பதிவு அலுவலர் வழங்கிய முடிவுக்கு எதிரான முதல் மேல்முறையீட்டை மாவட்ட தேர்தல் அதிகாரி/ மாவட்ட ஆட்சியர் விசாரிப்பார். மாவட்ட தேர்தல் அதிகாரி/ மாவட்ட ஆட்சியர் வழங்கிய முடிவிற்கு எதிரான இரண்டாம் மேல்முறையீட்டை தலைமை தேர்தல் அலுவலர் விசாரிப்பார். திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 2,124 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. ஒவ்வவொரு வாக்குச்சாவடி மையத்திற்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் துணை ஆட்சியர் நிலையில் வாக்காளர் பதிவு அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வட்டத்திற்கும் வட்டாட்சியர் நிலையில் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறப்பு தீவிர திருத்த பணிக்காக அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் தேர்தல் தொடர்பான அலுவலர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் நியமிக்கும் வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மூலமாக உரிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
தகுதிபெற்ற வாக்காளர்கள் குறிப்பாக முதியோர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், வறியவர்கள், எந்தவிதமான சிரமங்களும் எதிர்கொள்ளாமல் அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்வதற்கு தன்னார்வலர்கள் (Volunteers) நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் 09.12.2025-ஆம் தேதி அன்றும், இறுதி வாக்காளர் பட்டியல் 07.02.2026-ஆம் தேதி அன்றும் வெளியிடப்படும்.
எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அட்டவணைப்படி வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தின்போது வாக்காளர்கள் அனைவரும் இப்பணியினை சிறப்பாக நிறைவு செய்வதற்கு முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.கோட்டைக்குமார், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.வி.மூ.திருமலை, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.க.செந்தில்வேல், வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.